Last Updated : 08 Jul, 2014 10:00 AM

 

Published : 08 Jul 2014 10:00 AM
Last Updated : 08 Jul 2014 10:00 AM

வரி ஏய்ப்பின் உண்மை மதிப்பு!

வரி ஏய்ப்பின் பின்னணியில் உலகமெங்கும் இயங்கும் அரசியலைப் பற்றி…

கபிரியேல் சுக்மேன் என்ற 27 வயது பிரெஞ்சுப் பொருளாதார அறிஞர் ஒரு புதிரை விடுவிக்க முடிவுசெய்தார்: சர்வதேசப் பற்றுவரவுக் கணக்கு, ஏன் ஆண்டுதோறும் சொத்துகளைவிட கடன்களையே அதிகம் காட்டுகிறது, உலகமே கடன்கார உலகமாக மாறிக்கொண்டிருக்கிறதா?

கடந்த சில பத்தாண்டுகளாகச் சர்வதேசப் பொருளா தார அறிஞர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு, அதற்கு மிக எளிதான காரணத்தையும் கூறினார்கள் - அதுதான் ‘வரி ஏய்ப்பு’. அமெரிக்காவிலிருந்து செல்லும் பணம், அங்கே செலவாகக் காட்டப்படுகிறது; இன்னொரு நாட்டில் வரவு வைக்கப்படுகிறது என்றனர். அந்தப் பணம் அமெரிக்காவிலிருந்து வெளிநாடு செல்வதன் நோக்கம் - கண்ணில் தெரியாமல் மறைந்துபோவதுதான்!

இந்த நிலையில்தான், சுவிட்சர்லாந்திலும் லக்ஸம்பர்க் கிலும் உள்ள மத்திய வங்கிகள் வெளிநாட்டவர்கள் தங்கள் வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளில் போட்டுள்ள தொகைகள் பற்றித் தெரிவித்த தகவல்களை ஆராய்ந்த சுக்மேன், வரி ஏய்ப்பு எவ்வளவு என்பதை ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டுபிடித்தார். செல்வத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வை இந்த பணப் பதுக்கல் ஏற்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ரூ. 12 லட்சம் கோடி

உலகின் மொத்த செல்வ மதிப்பில் சுமார் 8%, அதாவது, 7.6 டிரில்லியன் டாலர்கள் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) மதிப்புக்குப் பணம் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்படுவதாகவும், வரி செலுத்தாமல் இருக்கச் சலுகைகள் தரும் வெளிநாடுகளில் அவை கொண்டுபோய்ச் சேர்க்கப்படுவதாகவும் தெரிவித் தார். இந்தப் பணம் கணக்கில் காட்டப்பட்டு, வரி விதிக்கப் பட்டிருந்தால் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வரியாகவே நாடுகளுக்குக் கிடைத்திருக்கும். இந்தத் தொகையில் பெரிய, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் ஏய்த்ததெல்லாம் சேரவில்லை!

அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் பலவற்றின் லாபத்தில் 20% வெளிநாடுகளுக்குச் சட்ட விரோதமாகக் கடத்தப்படுவதாகவும், இந்த வரி ஏய்ப்பு காரணமாக, அமெரிக்க அரசுக்கு கம்பெனிகள் வரி மூலம் இப்போது கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு வரிவருவாய் குறைவாகவே கிடைப்பதாகவும் அவர் கணக்கிட்டிருக்கிறார்.

பிக்கெட்டியின் மாணவர்

‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’என்று அழைக் கப்படும் உயர் கல்விக்கூடத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் கபிரியேல் சுக்மேன். பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பணிபுரியும் தாமஸ் பிக்கெட்டி என்ற உலகப் புகழ்பெற்ற பொருளியல் பேராசிரியரின் மாணவர்தான் சுக்மேன். வரி ஏய்ப்பு தொடர்பாகத் தான் செய்த ஆராய்ச்சிகளைத் தொகுத்து சுக்மேன் கடந்த ஆண்டு வெளியிட்ட, ‘நாடுகள் இழந்த செல்வம்' (த மிஸ்ஸிங் வெல்த் ஆஃப் நேஷன்ஸ்) என்ற புத்தகம் அமோகமாக விற்றது. ஆடம் ஸ்மித் எழுதிய ‘நாடுகளின் செல்வம்' (த வெல்த் ஆஃப் நேஷன்ஸ்) என்ற நூலை அடியொற்றியது இப்புத்தகம்.

சுக்மேன் கூறும் வரி ஏய்ப்புத் தொகை, இதுவரை நினைத்திருந்த பலவற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் அளவுக்கு மிகப் பெரியது. “சீனா இப்போது உலகின் உரிமையாளர் ஆகிவிட்டது, அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடன்கார நாடுகளாகிவிட்டன” என்ற கருத்துகளெல்லாம் தவறு என்பதை சுக்மேனின் புத்தகம் விளக்குகிறது. வரி ஏய்ப்பு காரணமாகவே, பெரிய நாடுகள் கடன்கார நாடுகளைப் போலக் காட்சி தருகின்றன என்கிறார் சுக்மேன். ஐரோப்பிய பணக் காரர்களும் தொழிலதிபர்களும் வெளிநாடுகளில் ரகசிய மாகச் சேர்த்திருக்கும் தொகைகளைக் கூட்டினால், ஐரோப்பா மிகப் பெரிய பணக்காரக் கண்டமாகிறது. அமெரிக்காவின் கடன் சுமை 18%-லிருந்து சரிபாதியாகக் குறைந்துவிடும்.

வரி ஏய்ப்பது யார்?

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும், ஆண்டுக்கு சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களும்தான் இப்படி வரி ஏய்ப்புகளைச் செய்பவர்கள். இவர்களைவிட வசதி குறைவானவர்கள் வேறு வழியில்லாமல் வருமான வரி செலுத்துகின்றனர். இதனாலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிடுகிறது. தனிநபர் வரி ஏய்ப்பைத் தடுக்க அமெரிக்க அரசு, 2010-ல் வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி அமெரிக்கர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் அதுபற்றிய விவரங்களை அமெரிக்க அரசுக்குத் தராவிட்டால் அந்த நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை நடவடிக்கைகளைக் கொண்டுவர முடியும்.

வரி செலுத்துவோரிடம் 1980-களில் ஏற்பட்ட மன மாற்றமே இந்த வரி ஏய்ப்புக்கு முக்கியக் காரணம் என்கிறார் சுக்மேன். 1950-கள், 1960-கள், 1970-களில் வரி விகிதம் மிகமிக அதிகமாக இருந்தது. அப்படியிருந்தும் பணக்காரர்கள் வரித் தொகையைக் குறைக்குமாறும் கேட்டதில்லை, வரி கட்டாமல் ஏய்க்கவும் முயற்சித்தது இல்லை. அமெரிக்க அதிபராக ரொனால்ட் ரேகன் பதவியேற்ற காலம்முதல்தான் வரி ஏய்க்கும் எண்ணம் பரவியது என்கிறார் சுக்மேன். “அரசாங்கம் மிகப் பெரிய அசுரன், அதற்கு நம்முடைய வரிப் பணத்தைக் கொடுக்காமல் அதைப் பட்டினி போடவேண்டும்” என்றே பலர் நினைத்தனர்.

பெருமளவில், லட்சக் கணக்கானோர் வரிகளை ஏய்க்கும்போது நாட்டின் பொருளாதாரப் புள்ளிவிவரங்களே அர்த்தமற்றதாகிவிடுகின்றன. இதனால், பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் முடிவதில்லை, நல்ல கொள்கைகளை வகுக்கவும் முடிவதில்லை. சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்ற எண்ணமே அடிபட்டுப்போகிறது. வரிகளை விதித்து மக்களிடம் அவற்றை ஒழுங்காக வசூலிக்க வேண்டும் என்ற அரசின் முதல் கடமை இங்கே தவறிவிடுகிறது. அடுத்து, வேலைவாய்ப்பு உருவாவதை இது தடுத்துவிடுகிறது. வெளிநாடுகளுக்கு மூலதனத்தைக் கடத்திச்சென்று, அங்கேயே வேலைவாங்கி, அங்கேயே பணத்தைப் பதுக்க நினைப்பதால் உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. இதனால், உள்நாட்டு முதலீடு களும் குறைந்துவிடுகின்றன.

உலக வரலாற்றில் திருப்புமுனை

வரிகளை மதித்துச் செயல்பட வேண்டும் என்ற சட்டத்துக்குப் பல தடைகள் இருந்தாலும், வங்கிகள் தங்களிடம் கணக்கு வைப்பவர்கள்குறித்த ரகசியங்களைக் காக்க வேண்டும் என்ற நியதியைச் சட்டம் மூலம் உடைத் திருப்பது உலக வரலாற்றில் திருப்புமுனை என்கிறார் சுக்மேன். இந்தச் சட்டம் இருந்தாலும் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து தீவிரமாக முயன்றால்தான் இந்தச் சட்டத்துக்கு முழுமையான பலன்கள் கிடைக்கும். அமெரிக்காவில் வீடு, மனை, அடுக்ககம் ஆகிய தொழில் தொடர்பாக தேசிய அளவில் பதிவுப் புத்தகம் பராமரிக்கப்படுவதைப் போல ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையிலும் கிடைக்கும் வருமானத்தைப் பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான் வருவாய் எங்கே, எப்படிப் பதுக்கப்படுகிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியும் என்கிறார் சுக்மேன். செல்வம் எவ்வளவு என்று கணக்கிடாவிட்டால், அதன் மீது வரி விதிப்பது எளிதாக இருக்காது என்கிறார்.

உலக அளவில் இப்படிப் பதிவேடு பராமரிக்கப்பட்டால் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், வரி விதிப்பு இல்லாத நாடுகளில் தங்களுக்கு அந்தப் பணம் கிடைத்ததாகப் பொய் சொல்ல முடியாது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதலில் இந்த தேசியப் பதிவேடுகளைப் பராமரிக்கும் வேலையைத் தொடங்க வேண்டும்.

வரி செலுத்தாமல் ஏய்ப்பதற்குப் பொருளாதார, அரசியல், தார்மிகக் காரணம் ஏதும் இருக்க முடியாது. மறைக்கப்பட்ட செல்வம் மூலம் பெறப்படும் அரசியல் செல்வாக்குதான் இதற்குக் காரணம். எங்கும் பரவ லாகக் காணப்படும் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியாத அரசு, தன்னுடைய ஊழலைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதே உண்மை.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x