

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலிருந்து வந்த ஒரு செல்பேசி அழைப்பு குறிஞ்சி மலரைப் பற்றியதாக இருந்தது. அழைத்தவர் யாழ்ப்பாணத்தின் இளவாழையில் பிறந்தவரான தங்கை புஷ்பராணி. இலக்கியங்களி எடுத்துரைக்கப்பட்ட குறிஞ்சி மலர், தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது என்பதுதான் அவரது தேடல்.
மூணாறு, இடுக்கி போன்ற மலைச் சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பற்றிய கேரள அரசு வெளியிட்ட விவரங்கள் மட்டும் அவருக்கு கிடைத்திருக்கின்றன. தமிழக அரசின் இணையதளங்களிலும், சுற்றுலாத் தலங் களிலும் குறிஞ்சி மலர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்று அவருக்குக் கோபம். உண்மைதான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்பதைத் தவிர, நமக்கு குறிஞ்சி மலர் பற்றி என்ன தெரியும்?
உலகின் மூத்த மொழிகள் பலவற்றின் இலக்கியங்களைவிடக் கூடுதல் அழகியல் விவரிப்புகளைத் தமிழ் பெற்றிருப்பதற்குக் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பல நூற்றாண்டுகளாக உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்திவரும் ஐரோப்பியத் தொல் இலக்கியங்கள் சிறப்புக்குரியவை தான் என்றாலும், தமிழ் இலக்கியங்களைப் போல அழகியல் நுட்பத்தை அவை பெற முடியவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், தமிழ் நிலத்தின் மலர்கள்தான் என்று சொல்லலாம். கூர்ந்து கவனித்தால் நறுமணம் பொருந்திய மலர்களின் வனமாகத்தான் சங்க கால இயற்கைச் சித்தரிப்புகளில் பல அமைந்துள்ளன.
ஐரோப்பிய மொழி இலக்கியங்கள் பலவற்றைக் கற்றறிந்தவரும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளுக்கு அடித்தளம் அமைத்தவருமான தனிநாயகம் அடிகளின் ஆய்வு மதிப்பீடுகள் நம்மை வேறு ஒன்றைச் சிந்திக்கவைக்கின்றன. பனி போர்த்திய மேற்கத்திய நாடுகளின் மொழிகளின் செவ்விலக்கியங்கள், ஒரே வெண்மையாகத்தான் தெரிகின்றன. ஆதி காலத்தில் பல வண்ணங்களின் நெருக்கம் ஐரோப்பியர்களுக்கு இல்லை. வண்ணங்கள்தான் மனிதருக்குள் அழகியல் நுட்பத்தை வளர்த்தெடுக்கின்றன.
தமிழ் மக்களின் புவி சார் வாழ்க்கை அலாதியானது. மிதமான வெப்பமும் மிதமான குளிரையும் பெற்றுள்ள இந்த நிலப் பகுதியின் மலர்கள் பல நிறங்களில் பிறப்பெடுத்தவை. தமிழ் மொழியின் செழுமை மிக்க அழகியலும் இந்த வண்ணங்களிலிருந்தும், மலர்களிலிருந்தும் தோன்றியவை. இந்த மலர்களில் முதன்மையானது என்று குறிஞ்சிப் பூவைப் பற்றி பண்டைய தமிழகம் பெருமை கொண்டுள்ளது.
கபிலரின் குறிஞ்சிப் பாட்டு பிறந்து கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இதில் குறிஞ்சிப் பூக்கள் உட்பட 99 பூக்களின் பட்டியல் விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. மலர் தலை உலகு, என்று பூமியைப் பார்த்த தமிழர்கள், ஐந்து வகை நிலங்களை வகுத்தெடுத்து அதற்குத் திணை என்று பெயரிட்டார்கள். திணை ஒவ்வொன்றுக்கும் ஒரு மலரையும் அறிவித்துக்கொண்டார்கள். இதைப் போலவே திணை ஒவ்வொன்றுக்கும் வாழும் நெறி அல்லது திணை ஒழுக்கம் ஒன்றையும் வகுத்துக்கொண்டார்கள்.
குறிஞ்சி மலரின் சிறப்பு அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதன்படி நீலகிரி மலையில் குறிஞ்சி மலர்கள், 2018-ல் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குறிஞ்சிப் பூக்கள் பூக்கின்றனவா என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்புகிறார்கள். இது பற்றிய விளக்கங்களை நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த குறிஞ்சி மலர் ஆர்வலர் மதிமாறன் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார். ஓராண்டுக்கு ஒரு முறை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆறாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி வகைகளும் உண்டு என்கிறார் அவர்.
ஒரு காலத்தில் ஐந்து வண்ணங்களில் குறிஞ்சிப் பூக்கள் இருந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். நீலம், கருநீலம் மட்டும் தான் இப்போது நீலகிரியில் காணப்படுகிறது. குறிஞ்சியின் நீல நிறம்தான் நீலகிரி மலையின் பெயராக அமைந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, மேல்பாவானி, குந்தா ஆகிய இடங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூத்து நிற்கும் காட்சியைப் பார்க்க முடியும்.
பூக்களின் வருகையை வசந்தத்தின் வருகையாக, இங்குள்ள பழங்குடி மக்கள் கருதுகிறார்கள். நீலகிரி மலையில் தோடர், இருளர், பனியர், குறும்பர், காட்டு நாயக்கர் முதலான பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். மலர் பூக்கும் காலத் தொடக்கத்தைத் தங்கள் விழாக் காலத் தொடக்கமாகக் கணக்கிட்டுக்கொள்கிறார்கள். இயற்கையை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் இறை வழிபாட்டுக் கான காலமாக இந்தப் பூக்களின் வருகை யைக் கணக்கிடுகிறார்கள். இவர்களின் மணவிழாக்களும் குடும்ப விழாக்களும் இந்தக் காலத்தில்தான் நடைபெறுகின்றன.
ஆனால், இத்தனை சிறப்பு மிக்க குறிஞ்சி பூக்கும் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. தமிழ் மக்களின் ஆதிப் பண்பாட்டின் அடையாளமாகவும் பெருமையாகவும் கருதப்படும் குறிஞ்சி மலர்களை அழிய விடாமல் பாதுகாப்பதும், அதைக் கொண்டாடுவதும் நம் கடமை. நீலகிரியில் கோடை விழாக்கள் நடத்துவதைப் போல குறிஞ்சி மலர் விழாக்களை நடத்துவதும், குறிஞ்சி மலர் பற்றிய தொல் நினைவுகளை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைப்பதும் காலத்தின் தேவை!
- சி.மகேந்திரன், ஆசிரியர்,
தாமரை இலக்கிய இதழ்,
தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com