Last Updated : 30 Mar, 2023 06:55 AM

Published : 30 Mar 2023 06:55 AM
Last Updated : 30 Mar 2023 06:55 AM

வைக்கம் 100: கடவுளின் தேசத்தில் ஒரு சமூகப் போர்!

பெரியார்

வைக்கம் போராட்டம் தொடங்கிய நாளுக்கு இன்று (மார்ச் 30)நூற்றாண்டு பிறக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் வீதி, கிராம வீதி என்றழைக்கப்படும் சாலைகளில் எல்லோரும் நடந்துவிட முடியாது. கடவுளின் தேசமான கேரளத்தில் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை போன்ற கொடுமைகள் நிலவிவந்தன. இப்படி அனுமதி மறுக்கப்பட்ட சில குறிப்பிட்ட தெருக்களில் நடக்க அனுமதிக்கக் கோரி நிகழ்ந்ததே வைக்கம்போராட்டம். வைக்கம் கோயில் அருகமைத் தெருக்களில் ஈழவரும் புலையரும் நடப்பதற்கான ‘சஞ்சார உரிமை’யைக் கோரி 1924-1925ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட போராட்டம் இது.

சமூக நீதிக்காக சத்தியாகிரகம்: ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் 1924 மார்ச் 30 அன்று முன்னெடுத்த வைக்கம் போராட்டம், கேரள காங்கிரஸ் கமிட்டி அமைத்த தீண்டாமை விலக்குக் குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டது. அரசியல் போராட்டங்களுக்காக மட்டுமே அதுவரை பயன்படுத்தப்பட்ட சத்தியாகிரகம் என்கிற உத்தி, முதன்முதலாக சமூகக் காரணங்களுக்காகப் பயன்பட்டது அப்போதுதான். தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே நடந்துவந்த சத்தியாகிரக முறையை இந்தியாவில் காந்தி முதலில் பரிசோதித்துப் பார்த்தது வைக்கத்தில்தான்.

கே.பி.கேசவ மேனன், கேளப்பன், ஈ.வெ.ரா.பெரியார், ஜார்ஜ் ஜோசப், ஏ.கே.பிள்ளை, டி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயர், அய்யாமுத்து போன்றோர் இப்போராட்டத்தின் முக்கியத் தூண்கள்; ஆலோசகர் காந்தி. சத்தியாகிரகம் தொடங்கிய 10 நாள்களில் தலைவர்கள் இன்றித் தவித்தபோது, சிறையில் இருந்த ஜார்ஜ் ஜோசப், போராட்டத்துக்குத் தலைமை வகிக்கப் பெரியாரை அழைத்தார். தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுப் போராட்டம் முடங்கிய நிலையில், பெரியார் வந்து போராட்டத்துக்கு உயிர்தந்தார் என்று கேரள வரலாற்று ஆய்வாளர் டி.கே.ரவீந்திரன் எழுதியுள்ளார்.

வைக்கம் வீரர்: பெரியாருடன் கோவை அய்யா முத்து, நாகர்கோவில் எம்பெருமாள் நாயுடு, சிவதாணுப் பிள்ளை, காந்தி ராமன், அருப்புக்கோட்டை திருமேனிநாதன், கும்பகோணம் சக்கரவர்த்தி ஐயங்கார், கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர் உள்பட காங்கிரஸ் தமிழர் பலரும் வைக்கம் சென்று போராடினர்; இரு முறை சிறை சென்று கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார் பெரியார்.

இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி வைக்கத்தில் மற்றெவரையும்விட அதிகமாக பெரியார் 141 நாள்கள் முகாமிட்டிருந்தார். அவற்றுள் 74 நாள்களைக் கொடுஞ்சிறையில் கழித்தார். பெரியாரின் மனைவி நாகம்மையார், தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் என்று குடும்பமே வைக்கத்தில் போராடியது.

பெரியார் சிறைப்பட்டிருந்த காலத்தில் நாகம்மையார் வீடு திரும்பிவிடவில்லை. ஒரு முறை நாகம்மையாரும் ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டுப் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பெரியார் வைக்கத்தில் செய்த தியாகத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் இயற்றி வரவேற்றது. ‘வைக்கம் வீரர்’ என்று திரு.வி.க. அவரை அழைத்தார்.

அந்த ஒரு வாக்கு: ஈழவரும் சட்டமன்ற உறுப்பினருமான என்.குமாரன், சஞ்சார உரிமைக்கான தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். 1924 அக்டோபர் 24 அன்று தரப்பட்ட தீர்மானம், நீண்ட காலம் கழித்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின் 1925 பிப்ரவரி 7 அன்று வாக்கெடுப்புக்கும் விடப்பட்டது.

ஈழவருக்குச் சஞ்சார உரிமையைத் தரக் கூடாது என்பதற்கு 22 வாக்குகளும் அவர்களை நடக்க அனுமதிக்கலாம் என்பதற்கு ஆதரவாக 21 வாக்குகளும் பதிவாயின. ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்தான். அந்த வாக்கை அளித்தது அரசின் நியமன உறுப்பினரான ஒரு ஈழவர் என்பது இதில் உள்ள முரண் நகை.

இங்ஙனம் சட்டத்தை நாடிய போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தை நாடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டோர் பெரும்பாலும் வழக்கறிஞர்கள்; ஆலோசனை வழங்கியவர் ‘பாரிஸ்டர்’ காந்தி என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

உயர் சாதியினர் பேரணி: ‘மக்கள் கருத்து என்பது வெடிமருந்து போன்றது’ என்று காந்தி சொன்னது வைக்கம் சத்தியாகிரகத்தின்போதுதான். சமத்துவத்துக்கு ஆதரவாக மக்கள் கருத்தை உருவாக்கிவிட்டால், அரசும் நீதிமன்றமும் அதைப் பின்தொடரத்தான் வேண்டும் என்பது காந்தி என்ற வக்கீலுக்குத் தெரியாதா என்ன! இதற்காகவே ஈழவரின் சஞ்சார உரிமையை ஆதரிக்கும் நிலைப்பாட்டைக் கொண்ட உயர் சாதியினர் மட்டும் கலந்துகொள்ளும் ஆதரவு ஊர்வலத்தை நடத்துமாறு ஆலோசனை கூறினார் காந்தி.

நாயர் சேவைச் சங்கத்தைச் சேர்ந்த மன்னத்து பத்மநாபன் அதை நடைமுறைப்படுத்தினார். திருவனந்தபுரத்தில் பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. மகாராணியைச் சந்தித்து சஞ்சார உரிமைக்கு ஆதரவான 25,000 சாதி இந்துக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றையும் அளித்தனர்.

சமாதானம்: சட்டமன்றத்தில் தீர்மானம் தோல்வியுற்றதால் சத்தியாகிரகிகளின் நம்பிக்கை குலைந்தது; கைது நடவடிக்கையை அரசு நிறுத்திவிட்டதால் பரபரப்பு குறைந்தது; எதிர் சக்திகளின் தாக்குதல்களும் மிகுதியாயின. இருப்பினும் சத்தியாகிரகிகள் போராட்டத்தை விடாமல் தொடர்ந்தனர்.

இனியும் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த அரசாங்கம், பிரச்சினையைத் தீர்த்துவைக்க முனைந்தது. அனைத்துத் தரப்பினரிடமும் பேச காந்தி வரவழைக்கப்பட்டார். சத்தியாகிரகிகள் (பெரியார் உள்படப் பலர்), மரபுவாதிகள் (நீலகண்டன் இந்தன் துருத்தி உள்படப் பலர்), அரசாங்கம் (அரசிகள், காவல் துறை ஆணையர்), தலைவர்கள் (நாராயண குரு, மகாகவி வள்ளத்தோள்) என அனைத்துத் தரப்பினரிடமும் சமாதான வழியைப் பேசினார் காந்தி.

1925 மார்ச் 9 அன்று வைக்கம் வந்த காந்தி, மார்ச் 18வரை சமாதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மகாராணியையும் நாராயண குருவையும் ஒரே நாளில் (1925 மார்ச் 12) அடுத்தடுத்துச் சந்தித்தார்.

வைக்கம் முடிவுகள்: போராட்டம் தொடங்கிய காலத்தில் மரபுவாதிகள் பக்கம் இருந்த அரசாங்கம், முடிவின்போது சத்தியாகிரகிகள் பக்கம் சாய்ந்தது. தாங்கள் கைவிடப்பட்டதை உணர்ந்த மரபுவாதிகள் வேறு வழியின்றி இறங்கிவந்தனர். தங்கள் மரியாதையை முற்றிலும் இழந்துவிடாதபடி நான்கு தெருக்களில் கிழக்குத் தெருவை வைத்துக்கொண்டு, மற்ற மூன்று தெருக்களில் ஈழவரை அனுமதிக்க ஒப்புக்கொண்டனர்.

முழு வெற்றியை அடைய முடியாவிட்டாலும் தீண்டாமையை ஒரு மூலையிலாவது ஒதுக்கி வைக்க முடிந்ததே என்று சத்தியாகிரகிகளும் சமாதானம் அடைந்தனர். ‘இதுவல்ல, கோயில் நுழைவே லட்சியம்’ என்று அப்போதும் சொன்னார் பெரியார். எனினும் ‘தற்கால சாந்தி’யாய் இம்முடிவை ஏற்றுக்கொண்டார்.

போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக 1925 நவம்பர் 17 அன்று சத்தியாகிரகிகள் தீர்மானம் இயற்றினர். 1925 நவம்பர் 23 அன்று நான்கில் மூன்று தெருக்களில் சகலரும் நடக்கலாம் என்பதை அரசு ஆணையாக வெளியிட்டது. 1925 நவம்பர் 29 அன்று வைக்கத்தில் சத்தியாகிரகிகள் சார்பாக கேளப்பன் ஏற்பாட்டில் பெரியார் தலைமையில் மன்னத்து பத்மநாபன் உள்ளிட்ட கேரளத் தலைவர்களும் கலந்துகொண்ட வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

வைக்கம் போராட்டத்தின் விளைவாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1936இல், சகலருக்கும் கோயில்களைத் திறந்துவிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ‘கோயில் நுழைவுப் பிரகடனம்’ வெளியிடப்பட்டது. மன்னரின் 24ஆவது பிறந்தநாள் அறிவிப்பாக அந்தப் பிரகடனம் அமைந்தது. அதை வெளியிட நவம்பர் 12ஆம் நாளைத் திருவிதாங்கூர் அரசு தேர்ந்தெடுத்தது. மன்னரின் பிறந்த நாள் நவம்பர் 7ஆக இருக்க, நவம்பர் 12 என்ற இந்தத் தேர்வு தற்செயலாக இருக்க வாய்ப்புக் குறைவு.

பட்டியல் சாதியினருக்குக் கோயில் நுழைவு உரிமையானது பகுதி பலனைத்தான் தருமே தவிர, முழு விடுதலையை அல்ல. பொருள் ஆதாரமே முக்கியம் என்ற புள்ளியை நோக்கி அம்பேத்கர் பின்னாளில் நகர்ந்துவிட்டதைப் போலவே பெரியாரும் அக்கருத்துக்கு வந்துவிட்டார்.

விளைவாக திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட கோயில் நுழைவுப் பிரகடனத்தைப் பெரியார் உற்சாகமாக வரவேற்கவில்லை. எனினும், வைக்கம் போராட்டம் நிகழவில்லையானால் பின்னாள்களில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புக் குறைவு. இதனாலேயே சமூக நீதி வெற்றிபெற உதவிய வைக்கம் போராட்டம் கொண்டாடப்பட வேண்டிய வரலாற்றுச் சம்பவமாகிறது.

- பழ.அதியமான் | ‘வைக்கம் போராட்டம்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: athiy61@yahoo.co.in

To Read in English: Vaikom 100: A Social Justice War in God’s Own Country

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x