

கேரள தூதுக் குழு அறிக்கை வெளியீடு
(அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் இந்தியா)
வைக்கம் தூதுக் குழுவின் உறுப்பினர்களான திருவாளர் ஆர்.மாதவன், திருவாளர் குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட் இருவரும் காந்தியை அன்றைய பம்பாயில் சந்தித்து நிகழ்த்திய உரையாடல் குறித்துப் பின்வரும் அறிக்கையை வெளியிட்டனர். ‘தி இந்து’வில் (ஆங்கிலம்) 26.05.1924 அன்று வெளியான இந்த அறிக்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:
கேள்வி: பொதுச் சாலைகளைப் பயன்படுத்துதல் என்னும் குடிமக்கள் உரிமையைப் பெறுவதற்காகவே வைக்கம் போராட்டம் நடத்தப்படுகிறது எனும்போது, இந்தப் போராட்டத்துக்குத் துணைநிற்க வேண்டியது மதங்களைக் கடந்து ஒவ்வொரு குடிநபருக்கும் உள்ள கடமை இல்லையா?
காந்தியின் பதில்: இந்து சமூகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமையைக் கைவிட வேண்டும் என்று இந்துக்களைக் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது என்கிற வகையிலேயே கேரள காங்கிரஸ் கமிட்டி இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்பதற்காகச் சாலையைப் பயன்படுத்த இயலாமல் போகிறது என்பதாலேயே வைக்கத்தில் போராட்டம் நடைபெறுகிறது. இது முற்றிலும் இந்துக்கள் தொடர்பான பிரச்சினை; எனவே, இந்தப் போராட்டத்தில் இந்து அல்லாதாருக்கு இடமில்லை.
கே: போராட்டத்தின் எதிர்காலம் தொடர்பாக நீங்கள் வழங்க விரும்பும் ஆலோசனை என்ன?
ப: நீங்கள் செய்யும் விஷயங்களை அப்படியே தொடரலாம். சத்தியாகிரகத்தில் ஈடுபடும் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உங்களால் இயலும் என்றால் இந்த விவகாரம் தொடர்பான சாதி இந்துக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக வைக்கம் முதல் திருவனந்தபுரம் வரை சாதி இந்துக்களை மட்டும் உள்ளடக்கிய முற்றிலும் அமைதிவழியான, வன்முறையற்ற ஊர்வலத்தை வழிநடத்தி மகாராஜாவைச் சந்தித்து, சாதி அமைப்புக்கு வெளியே உள்ள இந்துக்களின் (கோயில்கள், சாலைகளைப் பயன்படுத்த முடியாத) இயலாமை நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினால் சிறப்பாக இருக்கும்.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்கும் சாதி இந்துக்கள் வெறுங்கால்களுடன் நீண்ட தூரம் ஊர்வலமாக நடந்துசெல்வதில் உள்ள இன்னல்களை எதிர்கொள்ளத் தயார்படுத்தப்பட வேண்டும். வைக்கத்திலிருந்து தொலைவில் இருக்கும் ஊர்களிலும் கிராமங்களிலும் அவர்கள் தங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்துகொள்ள வேண்டும். அமைதியான சூழல் நிலவும் என்று முழுமையாக நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர்கள் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஊர்வலம் நடைபெறும் காலத்தில் வைக்கம் சத்தியாகிரகம் நிறுத்திவைக்கப்படலாம்.
புலையர்களின் உரைக்கான பதிலுரை (நமது சிறப்பு நிருபர், அசோசியேட்டட் ஸ்பெஷல் சர்வீஸ்) ஆலுவா, மார்ச் 18.
வைக்கத்தில் அமைந்துள்ள சத்தியாகிரக ஆசிரமத்தில் நேற்று மாலை நடைபெற்ற மாநாட்டில் சுமார் 3,000 புலையர்களை மகாத்மா சந்தித்தார். அப்போது அரசு கலால்வரித் துறையில் கீழ்நிலை அலுவலராக இருந்த புலையர் ஒருவர் - அந்தச் சமூகத்தவரில் அப்போது மிகப் பெரிய அரசுப் பதவியில் இருந்தவர் - மகாத்மாவை வரவேற்றுப் பேசியதோடு, தீண்டாமை ஒழிப்புக்கான தீவிர முயற்சிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். புலையர்கள் மேம்பட்ட சமூக நிலையை அடைவதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக மகாத்மா கூறினார்.
கோயில் - தெரு நுழைவை எதிர்க்கும் சாதி இந்துக்களின் தகவல் தொடர்பாளரான இந்தன் துருத்தி நம்பூதிரியை மகாத்மா நேற்று காலை சந்தித்தார். அப்போது கோயில்களிலும் சாலைகளிலும் தீண்டப்படாதவர்கள் நுழைவதைத் தடுக்கும் தமது மனப்போக்குக்கு ஆதாரமாக விளங்கும் சங்கர ஸ்ம்ருதியின் மலையாளப் பிரதியை மகாத்மாவிடம் அவர் அளித்தார். அதற்கு நன்றி தெரிவித்த மகாத்மா, அது மொழிபெயர்க்கப்பட்ட பிறகு ஆய்வுக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தார். - (18.03.1925, தி இந்து)
வைக்கம் போராட்டம்: பெண்களின் பங்கேற்பு (அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் இந்தியா) சேர்தலை, மே 23.
போராட்டம் வழக்கம் போல் தொடர்கிறது. திருமதி. ஈ.வெ.ராமசாமி (நாகம்மையார்), திருமதி. கோவிந்தன், திருமதி. தாணுமாலயப் பெருமாள் (பாக்கியம் அம்மாள்) ஆகிய மூன்று பெண்கள் மேற்கு மூலையில் நேற்று சத்தியாகிரகத்தைக் கடைப்பிடித்தனர். திருமதி. நாகம்மையார் தடுக்கப்பட்டபோது, தன் பாதையில் இருந்த தடுப்பின் இடைவெளிக்குள் நுழைய முயன்றார்.
அவர்கள் தங்கள் நிலையிலிருந்தபோது கடுமையாக மழை பொழியத் தொடங்கியது. ஆனாலும் பெண்கள் மழையில் நனைந்தபடியே போராட்டத்தைத் தொடர்ந்தனர். பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளும் அங்கிருந்த ஊர் மக்களும் மழையிலிருந்து காத்துக்கொள்ள அவர்களுக்குக் குடையைக் கொடுத்தபோதும், அத்தகைய அடைக்கலத்தை அவர்கள் மறுத்துவிட்டனர். இரண்டு மணி நேர சத்தியாகிரகத்துக்குப் பிறகு, மற்ற தன்னார்வலர்கள் வந்து அவர்களின் நிலையில் தொடர்ந்தனர்.
தடைசெய்யப்பட்ட பகுதி வழியாக திருமதி. கோவிந்தனை அழைத்துச் செல்ல திருமதி. நாகம்மையார் வலியுறுத்திக் கொண்டிருந்தபோது, முன்னேறிச் செல்லக் கூடாது என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அப்போது அதிகாரிகளை மீறி அவர்கள் செல்ல முடியாது என அருகில் நின்றுகொண்டிருந்த பிராமணர் ஒருவர், அவர்களைச் சற்றே கோபத்துடன் இடைநிறுத்தினார். - (23.05.1924, தி இந்து)
கோயில் நுழைவுப் பிரகடனம் - திருவிதாங்கூர் ஆணைக்கு வரவேற்பு (நமது நிருபர்), எர்ணாகுளம், ஜனவரி 4
எர்ணாகுளத்தின் அரசு அலுவலகங்கள், கோயில் ஆகியவற்றின் முன் இருக்கும் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் அவர்ணர்களுக்குக் கோயில்களைத் திறந்துவிடும் திருவிதாங்கூர் மகாராஜாவின் பிரகடனத்தை வரவேற்றும் அதேபோன்ற பிரகடனத்தை வெளியிட கொச்சின் மகாராஜாவை வேண்டிக்கொள்ளும் விதமாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரம்மஸ்ரீ குரும்பூர் மனக்கல் நாராயணன் பட்டத்ரிபாட் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.
அனைத்து முன்னேற்றங்களையும் எதிர்க்கும் ஐந்தாறு நம்பூதிரிகளைத் தவிர, மற்ற அனைவரும் இந்தப் பிரகடனத்தை ஆதரிப்பதாக அவர் கூறினார். மக்களின் விருப்பத்தை அறிந்து ஆட்சிசெய்பவர் கொச்சின் மகாராஜா என்றும் அவருடைய திவான் ஸ்ரீ ஆர்.கே.சண்முகம் செட்டி அனைத்து விதமான சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போரிட்டவர்; திருவாளர் ஈ.வெ.ராமசாமி நாயக்கருடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றியவர்என்றும் அதனால் அவர்ணர்களுக்குக் கொச்சின் கோயில்களைத் திறந்துவிடும் பிரகடனம் கொச்சின் மகாராஜாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். - (05.01.1937, தி இந்து)
வைக்கம் சத்தியாகிரகம் திரும்பப் பெறப்பட்டது - தீண்டாமை விலக்குக் குழுவின் அறிக்கை, பரூர், நவம்பர் 24
வைக்கம் சத்தியாகிரகம் நேற்று காலை 9 மணிக்குத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தீண்டாமை விலக்குக் குழு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது: ‘சாதி வேறுபாடின்றி, அனைத்து இந்துக்களுக்கும் திருவிதாங்கூரின் பொதுச் சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமான நோக்கத்துடன், சுமார் 1 ஆண்டு 8 மாதங்களுக்கு முன்பு, மகாத்மா காந்தியின் தலைமையிலும் கேரள காங்கிரஸ் தீண்டாமை விலக்குக் குழுவின் சார்பிலும் வைக்கம் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கும் மக்களுக்கும் போராட்டத்தால் விளைந்த முன்னேற்றங்கள் குறித்து, (போராட்டத்தின்) இந்தக் கட்டத்தில் பேசுவது மிதமிஞ்சியதாக இருக்கும் என (நாங்கள்) நினைக்கிறோம். போராட்டத்தின் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தாங்கள் எதிர்கொண்ட சிரமங்களைச் சத்தியாகிரகத்தின் தன்னார்வலர்கள் எவ்வளவு உன்னதமாகத் தாங்கிக்கொண்டனர் என்பதையும், அதன் விளைவுகளையும் பொதுச் சமூகம் நன்றாகவே அறியும்.
சத்தியாகிரகத்தின் நோக்கத்தை எட்டிவிட்டோம் என்பதால், மகாத்மாவின் அறிவுறுத்தலின்படி, வைக்கம் கோயிலின் அணுகு சாலைகளின் நுழைவில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சத்தியாகிரகம், இன்று திரும்பப் பெறப்படுகிறது என்பதைத் தீண்டாமை விலக்குக் குழு பெருமையுடன் அறிவிக்கிறது. ஆள்களாகப் பங்கேற்றும் நிதி அளித்தும் இந்த இயக்கத்துக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.’ - (25.11.1925, தி இந்து)