Published : 06 Jul 2014 11:00 AM
Last Updated : 06 Jul 2014 11:00 AM

சுற்றுச்சூழலும் சுயநலமிகளின் வேலையும்

மனிதர்களால் சூடேற்றப்பட்ட புவி விவகாரத்துடன் மூன்று விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. முதலாவதாக, கரிப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இரண்டாவதாக, கரிப்புகை வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதால் பொருளாதார வளர்ச்சி சற்றே மந்தப்படும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது கடினமான செயல் அல்ல. மூன்றாவதாக, இதன் பின்னால் உள்ள அரசியல் நடவடிக்கைகள் கடினமானவையே.

ஏன் அப்படிக் கடினமாக இருக்க வேண்டும்? ஆதிக்கச் சக்திகளின் பலம் அப்படிப்பட்டதா?

இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனித்த பிறகு, ஆதிக்கச் சக்திகளால் இது கடினமாகவில்லை என்ற வியப்பூட்டும் முடிவுக்கு வந்தேன். ஆதிக்கச் சக்திகளும் இந்த விஷயத்தில் பங்காற்றுகிறார்கள். ஆனால், வேறு பங்காளர்களும் இருக்கின்றனர். பருவநிலை மாறுதல்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் முடிவுகளும் பரிந்துரைகளும் அரைகுறை யானவை, பக்குவமில்லாதவை என்று நினைக் கும் அளவுக்கு பெட்ரோல்-டீசல் துறை வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. உண்மையில், பருவநிலைகள் மாறாமலிருக்க நடவடிக்கைகள் எடுப்பதைக் கடினமாக்குவது சித்தாந்தமும் அறிவுலகுக்கு எதிரான சக்திகளும்தான். மேலும், இதை ஆராயும்முன், இதன் பொருளியல் அம்சத்தை மட்டும் பார்ப்போம்.

கரிப்புகை குறைப்பு லாபகரமான நடவடிக்கையே

கரிப்புகை வெளியேற்றத்தைக் குறைப்பதென்றால் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பது தெரிந்ததே. சுற்றுச்சூழலியலாளர்களை வெறுக்கும் அமெரிக்க வர்த்தக சபை மிகக் குறைந்த செலவில் இது தொடர்பாக ஆய்வு ஒன்றையும் மேற்கொண்டது. நம்முடைய அனுபவ அறிவு ஒரே திசையைத்தான் சுட்டிக்காட்டுகிறது. 1980-களின் தொடக்கத்தில், அமில மழையை நிறுத்த முயற்சி செய்தால் பொருளாதாரம் குலைந்துவிடும் என்று பழமைவாதிகள் எச்சரித்தார்கள். ஆனால், கந்தக அமில விஷயத்தில் உற்பத்திக்கு வரம்பு கட்டி விற்பனையைக் கட்டுப்படுத்தியதில் நன்மையே விளைந்திருக்கிறது. அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்கள் 2009 முதல் இந்த அடிப்படையில்தான் செயல்பட்டுக் கரிப்புகையையும் குறைத்திருக் கின்றன, பொருளாதாரரீதியாக லாபமும் அடைந்துவருகின்றன.

செலவு அதிகமாகுமா?

சுற்றுச்சூழலைக் காக்கும் இந்த நடவடிக்கைகளில் செலவு அதிகமாகாதா? ஆம், ஆகும். ஆனால், நீங்கள் நினைப்பதைப் போல அதிகமாக இல்லை. ‘நிலக்கரிக்கு எதிரான போர்' என்ற கருத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற இயக்கம் தொடங்கியது. உடனே, நிலக்கரித் துறையை நம்பியுள்ள ஏராளமானோருக்கு வேலை போய்விடும், அது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் நிர்ப்பந்தங்களால் அல்ல - தாமாகவே வேலைவாய்ப்புகளை நிர்வாகங்கள் குறைத்துவிட்டன.

மாற்றுமுறையில் நிலக்கரியை வெட்டி எடுப்பதால் ஏராளமாக இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை வெகு கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் சுமார் 2.5 லட்சம் பேருக்கு 1970-களில் வேலை தந்தது ‘கிங் கோல்' நிறுவனம். ஆனால், இப்போது அடுக்குச் சுரங்க முறையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதால் ஏராளமான ஆள்குறைப்பு செய்யப்பட்டுவிட்டது. அமெரிக்கா முழுக்க வேலைபெறுவோரில் ஒரு சதவீதத்தில் 16-ல் ஒரு பங்கு பேர்தான் இப்போது நிலக்கரி வெட்டியெடுப்பில் ஈடுபடுகின்றனர். அப்படியானால், சுற்றுச்சூழலைக் காக்க சில நியதிகளை நிர்ணயிப்பதால் நிலக்கரித் துறைக்குப் பொருளாதார ரீதியாக இழப்பு அதிகமில்லை என்று நன்கு புலனாகிறது.

வரம்பில்லாத சுயநலம்

அதே வேளையில், தங்கள் தொழிலையே முற்றாகத் தடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்களும், தொழிலாளர்களும் இருக்கின்றனர். சுயநல நோக்கிலான தங்களுடைய கொள்கை நல்லது, அரசு எப்போதுமே பிரச்சினை செய்யத்தான் இருக்கிறது என்று நினைப்போரைக் குறித்து என்ன சொல்வது? வரம்பே இல்லாமல் சுயநல நோக்கில் செயல்படக் கூடாது, அப்படிச் செய்தால் உலகமே நாசமாகிவிடும். இதிலிருந்து மீள அரசுத் தலையீடுதான் ஒரே வழி. சுதந்திரக் கருத்தாளர்களுக்கு இது நேரடி சவால்.

பருவநிலை மாறுதலால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும், அப்படி மாறுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்குறித்தும் நடக்கும் கலந்துரையாடல்களில் பருவநிலை வாதத்தை எதிர்ப்பவர்கள் மற்றவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்க முரட்டுத்தனமாக மறுக்கின்றனர். பருவநிலை மாறுதல்களுக்குக் கரிப்புகை வெளியேற்றம் போன்ற செயல்களே காரணம் என்று அறிவியலாளர்கள் கூறும்

போது, கோபம் அவர்கள் மீதும் பாய்கிறது. உலகில் எல்லா அறிவியலாளர்களும் தேவையின்றி அஞ்சுவதாகவும், சுற்றுச்சூழலியலாளர்களுடன் கைகோத்துச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். வலதுசாரிகள் எப்போதுமே அறிவியலாளர்களை நம்பியதுமில்லை விரும்பியதுமில்லை.

எனவே, புவிவெப்பமடைவதைக் குறைக்கவும், நீண்ட காலத் திட்டங்கள் உதவியுடன் தடுக்கவும் நாம் மேற் கொள்ளும் முயற்சிகளுக்குத் தடையே அறிவியலுக்கு எதிரான இந்த விரோதப் போக்குதான். கரிப்புகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் ஏற்படும் பொருளாதார இழப்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு அவசியமில்லாத காலம் இது. ஆனால், வேண்டுமென்றே பசுமை இல்ல வாயுக்கள் குறித்தும் புவிவெப்பமாதல்குறித்தும் ஏதும் தெரியாது என்று நடிப்பவர்களின் அப்பாவித்தனத்தையும் அவர்களுடைய இறுமாப்பையும் மீறி நாம் செயல்படுவது அவசியம்.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x