

‘பள்ளிக் கல்வி: யாருக்கு இல்லை பொறுப்பு?’ என்கிற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’யில் (மார்ச் 16) வெளியான கட்டுரையில், கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்துக்குப் பிறகான மாணவர்களின் நடத்தை குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. ‘ஆசிரியர் கையிலிருந்து பிரம்பு பறிக்கப்பட்டது சரியல்ல’ என்றும் அக்கட்டுரை சுட்டிக்காட்டியது. இது தொடர்பாகச் சில நடைமுறை நிதர்சனங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் ஓர் அரசுப் பள்ளியில் செய்முறைத் தேர்வு முடிந்த நாளில், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் ஒரு வகுப்பறையின் இருக்கைகளைச் சேதம்செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. பல ஆசிரியர்கள் அதைப் பகிர்ந்து, ‘எப்படிப்பட்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறோம்?’ எனும் அங்கலாய்ப்புடன் பெற்றோரிடமும் மக்களிடமும் எதையோ நிரூபிக்க விரும்பினர். பல ஆண்டுகாலமாக ஆசிரியப் பணியில் இருந்துவரும் அனுபவத்தின் அடிப்படையில், இதுபோன்ற நிகழ்வுகளை அணுக வேறொரு பார்வை அவசியம் என்பதே என் கருத்து.
‘இந்தக் கால மாணவர்களே சரியில்லை’ என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் கூற்று. உண்மையில், இப்போது மட்டுமல்ல எக்காலத்திலும் மாணவர்கள் எதிர்காலத்தை நோக்கி சற்று வேகமாகவே பயணிக்கின்றனர். பெருந்தொற்றுக் காலம் மட்டுமல்ல, ஒவ்வொரு காலகட்டத்திலும் மாணவர்கள் வெவ்வேறு வகையான இடர்ப்பாடுகளைச் சந்திப்பது யதார்த்தமானது.
பல்வேறு வகையான சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைக் கையாளுவதற்கான சிறப்புத் திறன் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவசியம். ஆனால், அப்படிப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு. பொதுவாகவே இத்தகைய திறன் சார்ந்த பயிற்சிகள் எதுவும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
மனநல ஆலோசகர்கள், உளவியல் சார்ந்த பயிற்சியாளர்கள், மேலும் சிறப்புத் திறன் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டும் இத்தகைய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டியது இன்றியமையாதது. மாணவர்களைக் கையாளவும் கட்டுப்படுத்தவும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாகப் பிரம்புகளையே நம்பியிருப்பதாகச் சித்தரிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்று தெரியவில்லை.
அதீத கண்டிப்பும், கோபமான வார்த்தைகளும், பிரம்படியும் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களை விலக்கிவைத்ததைத் தாண்டி வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை. சில வேளைகளில் மாணவர்களில் சிலர் ஆசிரியர்களின் கைகளிலிருந்து பிரம்பைப் பிடுங்கி வீசிய சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
பொதுவாகவே, மாணவ-மாணவிகள் இருவரின் எண்ண ஓட்டமும் வெவ்வேறானவை. தனிமனித உளவியல், குழு உளவியல், மாணவர் மனநலம் சார்ந்த நூல்கள் இச்சிக்கலைத் தீர்க்கப் பெரிதும் உதவும். அதற்கு சமூகப் பார்வையும் ஆசிரியர்களுக்கு அவசியம்.
ஆசிரியர்-மாணவர் உறவு என்பது ஒருவர் மேல் ஒருவர் உருவாக்கும் நம்பிக்கை சார்ந்தது. ஆசிரியர்களின் செயல்பாடுகளின் வழியே தெளிவுபெற்ற மாணவர்கள், அவர்கள் தங்களுக்கு நல்லதுதான் செய்வார்கள் என்றே உணர்கிறார்கள். அந்த வகையில் மாணவர்கள் சார்ந்த தெளிவை ஆசிரியர்கள் பெற வேண்டும்.
பெற்றோர்களும் சமூகமும் அதை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும். எந்நாளும் மாணவர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துவிடக் கூடாது. அத்தகைய நம்பிக்கையை ஆசிரியர்களின் சிறப்புத் திறன் நிச்சயம் உருவாக்கும்.
- சுமித்ரா சத்தியமூர்த்தி | அரசுப் பள்ளி ஆசிரியர்; தொடர்புக்கு: sumisathya30@gmail.com