

வியாசர் இயற்றிய மகாபாரதம் ஒரு மாபெரும் இதிகாசப் பிரதி. நவீன இலக்கியத்திற்கு இன்றுவரை கதைகளைக் கையளித்துக் கொண்டிருக்கும் சுரங்கம். பல்வேறு முரண்பாடுகளும் விடுபடல்களும் இடைச்செருகல்களும் கொண்ட அப்பிரதியே இந்திய மரபின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. வியாசர் மகாபாரதத்தை எழுதி முடித்தபோது தற்போதைய வடிவத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் வியாசர் அதற்கு ‘ஜெய’ என்றே பெயர் சூட்டியிருக்கிறார். சூதர்கள் எனப்படும் புராணப் பிரசங்கிகள்தாம் வியாசரின் ‘ஜெய’த்தை மகாபாரதமாக வளர்த்தெடுத்தார்கள். அவர்கள்தாம் பரத வம்சக் கதையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள்; அந்தப் பிரதியின் மீது கவனத்தை உருவாக்கியவர்கள். அப்படியொரு பிரசங்கி மரபில் வந்தவர்தான் ‘மகாபாரத வசன காவிய’த்தை உருவாக்கிய சண்முகக் கவிராயர்.
மகாபாரத வசன காவியம், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாப்பிள்ளையால் இயற்றப்பட்ட பாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டது. நல்லாப்பிள்ளை, வியாசரைப் பின்பற்றிப் பதினெட்டுப் பருவங்களில் மகாபாரதக் கதையைச் செய்யுளில் பாடியிருக்கிறார். ஆனால், இதன் அச்சுப்பதிப்பு 1888இல் முழுமையாக வெளிவந்திருக்கிறது. சண்முகக் கவிராயர், நல்லாப்பிள்ளையின் சுவடியைப் பயன்படுத்தி, நுட்பமாக ஆராய்ந்து 1860இல் மகாபாரத வசன காவியத்தை அச்சில் வெளியிட்டிருக்கிறார். 1860 - 1969 இடைப்பட்ட காலங்களில் இந்நூல் இருபது பதிப்புகளைக் கண்டிருக்கிறது. மூல நூலுக்கு முன்பே வசன காவியம் அச்சில் வெளிவந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். மகாபாரத பிரசங்கியான சண்முகக் கவிராயர், பாரதத்தைப் பொதுமக்களிடம் எளிமையாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை இயற்றியிருக்கிறார்.
நூலின் சமூகப் பின்னணி
காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பியர் தமிழகத்தில் உருவாக்கிய கல்விச் சங்கங்களினூடாகக் கிறித்துவ மதத்தைத் தீவிரமாகப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக வைதீக சமயம் சார்ந்து இயங்கியவர்கள் , மக்களிடம் ஏற்கெனவே செல்வாக்குப் பெற்றிருந்த சைவ/வைணவக் கதைகளை வசனங்களாக வெளியிடத் திட்டமிட்டனர். இதன் தொடர்ச்சியாகவே சண்முகக் கவிராயர் ‘மகாபாரத வசன காவிய’த்தை இயற்றியிருக்கிறார். இதனைத் தொடர்ந்துதான் ‘பெரியபுராணம்’, ‘கம்பராமாயணம்’, ‘திருவிளையாடற்புராணம்’ உள்ளிட்ட சமய நூல்களின் வசனங்கள் அச்சிடப்பட்டு, சமயப் பரப்புரை செய்யப்பட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர்களான இரா.சீனிவாசன், த.குணாநிதி ஆகிய இருவரும் இது குறித்து விரிவாக முன்னுரையில் எழுதியிருக்கின்றனர். பேரா.வீ.அரசுவின் அணிந்துரையும் வசன காவிய உருவாக்கத்தின் சமூகப் பின்புலத்தை ஆராய்ந்திருக்கிறது.
சண்முகக் கவிராயர் தரங்காபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். வசன காவியத்தைத் தவிர ‘கார்வண்ணமாலை’, ‘திருவிளையாடல் கீர்த்தனை’, ‘திருவாதவூரர் புராணம்’ ஆகிய மூன்று நூல்களைப் பதிப்பித்துள்ளார். சாற்றுக்கவிகள் சில அளித்துள்ளார். செய்யுள் நூலொன்றும் சடங்கு நூலொன்றும் இயற்றியுள்ளார். இவரது வாழ்க்கை சார்ந்த மேலதிகத் தகவல்கள் இல்லை. அதனால் இவர் வாழ்ந்தவரை மகாபாரத வசன காவியம் எத்தனை பதிப்புகள் வெளிவந்தன என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. பல பதிப்புகள் பல்வேறு குறைபாடுகளுடன் பதிப்பாளர்களது விருப்பத்திற்கேற்ப பதிப்பிக்கப்பட்டுள்ளன. அரை நூற்றாண்டைக் கடந்து மீள் பதிப்புச் செய்யப்பட்டிருக்கும் இப்புதிய பதிப்பு, சண்முகக் கவிராயரின் முதல் பதிப்பை (1860) ஆதாரமாகக் கொண்டு, அடுத்து வந்த எல்லாப் பதிப்புகளையும் ஒப்புநோக்கி ஓர் ஆய்வுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
பாரதத்தின் மொழிபெயர்ப்புக்கு மூத்த நூல்
தமிழில் ‘பாரதம்’ (பெருந்தேவனார் இயற்றியது), ‘பாரத வெண்பா’, ‘மாவிந்தம்’, ‘அருள்நிலை விசாகர் பாரதம்’, ‘ஆதி பருவத்து ஆதி பருவம்’, ‘அரங்கநாதக் கவிராயர் பாரதம்’, ‘பாரத சார வெண்பா’ எனப் பாரதம் தொடர்பாகப் பல நூல்கள் இருந்தாலும் இவையெதுவும் முழுமையானவை அல்ல. வில்லிபுத்தூரார் பாடிய ‘பாரதம்’ ஓரளவு முழுமையானது. வியாசரின் பதினெட்டுப் பருவங்களில் பத்துப் பருவங்களை மட்டுமே இவர் பாடியுள்ளார். தமிழில் பாடப்பட்டுள்ள பாரத நூல்களில் ‘நல்லாப்பிள்ளை பாரதமே’ முழுமையானது. இது தவிர, ம.வீ.இராமானுஜாச்சாரியார் வியாச பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ‘கும்பகோணம் பாரதம்’ என்று இது அழைக்கப்படுகிறது. எளிமையாகப் படித்துப் புரிந்துகொள்ளும் நடையில் இந்நூல் அமையவில்லை என்ற விமர்சனமும் இந்நூலுக்குண்டு. ம.வீ.இராமானுஜர் மொழிபெயர்ப்பு நூலுக்கு அறுபதாண்டுகளுக்கு முன்பே சண்முகக் கவிராயரால் வசன காவியம் எழுதப்பட்டிருக்கிறது. ஏனோ அவரது பங்களிப்பு வரலாற்று நூல்களால் மறைக்கப்பட்டிருக்கிறது.
சண்முகக் கவிராயரின் வசன காவியம் பல வகைகளில் முக்கியமானது. இந்நூல் நல்லாப்பிள்ளையின் பாரதத்தைத் தழுவி வசனமாக்கப்பட்டிருந்தாலும் சண்முகக் கவிராயர் ஆங்காங்கே திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி உள்ளிட்ட நீதி நூல்களின் பாடல்களை மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளார். பிள்ளையின் பாரதம் வியாசரின் சம்ஸ்கிருத மரபை அடியொற்றியது. கவிராயர், தன் வசன காவியத்தில் தமிழ் மரபுக்கேற்றபடி பல மாற்றங்களைச் செய்திருக்கிறார். போரில் அபிமன்யு இறந்தபின் அவன் உடலை எரியூட்டுவதற்குமுன், அவன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்பதை அறிவிக்கும் சடங்கு செய்யப்படுகிறது. இது கவிராயரின் மாற்றம். பிள்ளை கடவுள் வாழ்த்தைப் பாட பதினைந்து பாடல்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் ஐந்து பாடல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ 131 சருக்கங்கள். கவிராயர் அதனைச் செறிவாக்கி 113இல் அடக்கியிருக்கிறார். விடுபடல்கள் இல்லாமல் ஒரு சருக்கத்தில் இடம்பெற்றுள்ள கதையை அடுத்த பருவத்தில் சேர்த்துச் சொல்லியிருக்கிறார். வால்மீகியின் ‘இராமாயணக் கதை’யைக் கம்பர் தழுவிப் பாடியிருந்தாலும் அதனைத் தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப மாற்றியிருப்பதில்தான் கம்பர் தனித்துத் தெரிகிறார். அதனைத்தான் சண்முகக் கவிராயரும் செய்திருக்கிறார்.
எளிமையான பாரதம்
சண்முகக் கவிராயர் பாரதத்தின் ஒவ்வொரு கிளைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். எதிரில் அமர்ந்திருப்பவருடன் நேரடியாக உரையாடும் தொனியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஐந்து தொகுதிகள், 3,200 பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், மகாபாரதத்தை எளிமையாகப் படித்துப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். கும்பகோணம் பதிப்பிலுள்ள மொழிநடைச் சிக்கல்கள் இந்நூலில் இல்லை. 1860ஆம் ஆண்டின் முதல் பதிப்பையே பதிப்பாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். 162 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ் மொழியின் அமைப்பும் இன்றுள்ள அமைப்பும் வெவ்வேறானவை. எனவே, இன்றுள்ள வாசகர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் பழைய பிரதியைச் செம்மைப்படுத்தியுள்ளனர்.
பத்தி பிரித்தல், சந்தி பிரித்தல், பெயர்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்தல், வடமொழிச் சொற்களைத் தமிழ் நடைக்கு மாற்றுதல், தேவையான இடங்களில் தகுந்த நிறுத்தற் குறியீடுகளைப் பயன்படுத்தல், எழுத்துப் பிழைகளையும் தொடர்பிழைகளையும் களைந்து சிரத்தையுடன் இந்நூலைப் பதிப்பித்துத் தமிழ்ச் சமூகத்திற்குக் கையளித்திருக்கின்றனர். அவ்வகையில் சண்முகக் கவிராயரின் ‘மகாபாரத வசன காவியம்’ முக்கிய வரவாகும்.
- சுப்பிரமணி இரமேஷ்