மொழிபெயர்ப்புப் பிழைகளுக்குத் தரும் விலை

மொழிபெயர்ப்புப் பிழைகளுக்குத் தரும் விலை
Updated on
2 min read

காலம், 1980ஆம் ஆண்டு. இடம், அமெரிக்க நாடு. ஃப்ளோரிடா நகரம். ஒரு பெரிய மருத்துவமனை. வில்லி ராமிரெஸ் என்ற 18வயது விளையாட்டு வீரர் கோமா நிலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருடன் வந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பானிஷ் மொழி மட்டுமே தெரியும். ராமிரெஸ்ஸுக்கு என்ன நேர்ந்தது, அவர் எப்படி கோமா நிலைக்குs சென்றார் என்ற அடிப்படைத் தகவல்கள் மருத்துவர்களுக்கு அவசியம் தேவை. அவர்களுக்கோ ஸ்பானிஷ் மொழி தெரியாது. மருத்துவப் பணியாளர் ஒருவருக்குத் தெரியும். அவரை அவசரமாகத் தருவிக்கிறார்கள். அவரிடம் குடும்ப உறுப்பினர்கள் ஸ்பானிஷ் மொழியில் சொன்ன தகவல்: ராமிரெஸ் ‘intoxicado’ நிலையில் உள்ளார். பணியாளர் மருத்துவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்ன தகவல்: ராமிரெஸ் ‘intoxicated’ நிலையில் உள்ளார்.

தோற்றத்தில் வந்த பிழை

‘intoxicated’ நிலை என்பதை மிக அதிகமாகப் போதை மருந்து சாப்பிட்டதால் ஏற்பட்ட கோமா நிலை என மருத்துவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அதற்குரிய சிகிச்சையை உடனே தொடங்குகிறார்கள். ஓரிரு நாட்களில் வீரரின் இரு கைகளும் கால்களும் முற்றிலும் செயல் இழக்கின்றன. சிறிதுகூட அசைவு இல்லாமல் போகிறது. அதிர்ந்துபோன மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் ராமிரெஸ்ஸை முழு மறுபரிசோதனை செய்கிறார்கள். கோமா நிலையை உண்டாக்கிய உண்மையான காரணம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு. போதை மருந்து அன்று என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்; பேரதிர்ச்சி அடைகிறார்கள். தவறான சிகிச்சை தரப்பட்டதை உணர்கிறார்கள். மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்குச் சிகிச்சை தராமல் போதை மருந்தால் எற்பட்ட கோமா என நினைத்துத் தவறான சிகிச்சை தரப்பட்டதை ஒத்துக் கொள்கிறார்கள்.

தவறான சிகிச்சைக்கு இழப்பீடாக ராமிரெஸ்ஸுக்கு மருத்துவமனை 71 மில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுத்தது. பெருந்தொகை கிடைத்தது பெரிய லாபம்தான். ஆனால் இழந்த கைகால்கள் மீண்டும் கிடைக்குமா? இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மருத்துவப் பணியாளர் செய்த மொழிபெயர்ப்புப் பிழை. ஸ்பானிஷ் மொழியில் ‘intoxicado’ என்பதன் பொருள் ‘விஷத்தால் மயக்கமுற்ற நிலை’. ஆங்கிலத்தில் ‘intoxicated’ என்பதன் பொருள் ‘போதை மருந்தினால் மயக்கமுற்ற நிலை’. ஆனால், இரண்டு சொற்களும் ஒரே பொருளுடையவைபோல போலித் தோற்றம் தருகின்றன. இப்படித் தோற்றத்தில் ஒன்று போலவும் பொருளில் இரண்டாகவும் வேறுபட்டு நிற்கும் இரு சொற்களுக்கு மொழி வல்லுநர்கள் ‘false friends’ என்ற பெயரைத் தந்துள்ளார்கள்.

கொம்புகள் முளைத்த கதை

காலம் பொது ஆண்டு 3ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த கிறித்தவப் பழைய வேதாகமம் இரு முறைகள் மொழி மாறி வந்தது. மூல எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கும் பின்னர் கிரேக்கத்திலிருந்து லத்தீனத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்டது. அது நிறைவு தருவதாக இல்லை. அப்போதிருந்த போப் ஆண்டவருக்கு அது ஏற்புடையதாக இல்லை. அக்காலத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு எல்லாம் மகா குருவாகக் கருதப்பட்டவர் புனிதர் ஜெரோம். போப் ஆண்டவர் அவரை அழைக்கிறார். வேதாகமத்தில் உள்ள குறைகளைச் சரிசெய்யுமாறு பணிக்கிறார். அத்திருப்பணியைக் கவனம் குன்றாக் கடும் உழைப்புடன் ஜெரோம் மேற்கொள்கிறார். பழைய வேதாகமத்தை மூல எபிரேய மொழியிலிருந்தே நேரடியாக லத்தீனத்திற்கு மொழிபெயர்க்கிறார். பல மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்.

எபிரேயத்திலுள்ள ’karan’ என்கிற சொல்லை ஜெரோம் ‘keren’ என நினைத்துவிடுகிறார். முதல் சொல் முகத்தில் தோன்றும் ‘இரு தெய்வீகக் களை அல்லது பொலிவு’ அல்லது ‘தேஜஸ்’ என்ற பொருள் கொண்டது. இரண்டாவது சொல்லின் பொருள் ‘இரு கொம்புகளை உடைய’ என்பதாகும். ‘கொம்புகளை உடைய’ என்ற பொருளுடைய ‘keren’ எனும் தவறான சொல்லைச் சரியான சொல் என்று கருதி மொழிபெயர்த்துவிடுகிறார். அந்தப் பிழை சாகாவரம் பெற்றுவிட்டது. அது மொழிபெயர்ப்புப் பிழை என்பது உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோவுக்குத் தெரியாது. புனிதர் ஜெரோமின் மொழிபெயர்ப்பில் பிழை இருக்கமுடியுமா? அதனால் மைக்கேல் ஏஞ்சலோ தான் வடித்த மோசஸின் பளிங்குச் சிலைக்கு இரண்டு கொம்புகளை வைத்தார்.

- கே.தியாகராஜன்

பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in