

செல்வக்கேசவராயர், தமிழ் உரைநடையை வளப்படுத்தி யவர்களுள் ஒருவர். கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் தமிழ்ப் பணிக்குச் செலவிட்டவர். இவர் உரைநடை, திறனாய்வு, கட்டுரை, வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், அகராதி உள்ளிட்ட துறைகளில் பெரும் பணிசெய்துள்ளார்.
‘சித்தாந்த தீபிகை’, ‘செந்தமிழ்’ போன்ற பத்திரிகைகளில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அச்சு ஊடகம் என்ற அரிய சாதனம் சுதேசியர்கள் பயன்படுத்த தடை நீங்கிய (1835) காலத்தில் வாழ்ந்தவர். ஆங்கிலப் புலமையோடு தெலுங்கும் தெரிந்திருந்த செல்வக்கேசவாயரால் அன்றைய புலமைமரபில் இயங்கியவர்களான வ.உ.சி., உ.வே.சா., சி.வை.தா., சிங்காரவேலனார், அனவரத விநாயகனார், காஞ்சிபுரம் சபாபதியார், இரா.இராகவனார் உள்ளிட்டவர்களோடு பெரும் தொடர்பிலிருந்தார். பச்சையப்பனார், செல்வங்களைக் கோயில் போன்ற தருமகாரியங்களுக்குச் செலவிடவிருந்த நிலையில் சென்னையின் கலெக்டர் ஜார்ஜ் நார்டன், சீனிவாசனாரோடு இணைந்து அச்செல்வங்களைக் கல்விப் பணிக்குக் கொண்டுவந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
1842இல் பிராட்வேயில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், ரா.பி.சேது போன்ற சிறந்த ஆளுமைகளைத் தமிழுக்குத் தந்தவர். பழந்தமிழ் இலக்கியப் பதிப்பில் ஈடுபடும்போது ஐரோப்பியக் காலனியாதிக்க மரபினருக்குத் தமிழின் அரிய செல்வங்கள் தெரியும்பொருட்டாகவே ஆங்கிலத்தில் முன்னுரை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ‘பழமொழி நானூறு’, ‘ஆசாரக்கோவை’, ‘முதுமொழிக்காஞ்சி’ ஆகியவற்றிற்குச் சிறந்த பதிப்பு கொண்டுவந்துள்ளார். ‘தமிழ் மொழியின் புராதனத்தையும் தமிழர்களுடைய புராதன நாகரிக நிலைமையையும் விளக்குவதற்குக் குன்றின் மேலிட்ட விளக்கைப் போல இன்றளவும் விளங்குவதும் தொன்மையான தலையான சாதனம்’ என்று பழமொழி நானூறைக் குறிப்பிடுவதோடு ‘பல விளங்கா மேற்கோளை விளங்கவைத்த வ.உ.சிதம்பரனாருக்கு நன்றி’ என்று பதிப்பியல் நேர்மையைக் காட்டுகிறார் செல்வக்கேசவராயர். ‘அபிதான சிந்தாமணி’ எனும் கலைக்களஞ்சியம் வெளியிட யாருமே முன்வராத நிலையில் மனம் நொந்து செந்தமிழ்ப் பத்திரிகையில் செல்வக்கேசவராயரின் விளம்பரம் கண்ட பிறகு தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரையார் சென்னைக்கு வந்து வெளியீட்டுக்குரிய அனைத்துப் பொருள்செலவையும் ஏற்று உதவிபுரிந்தார் என்பதைச் சிங்காரவேலனார் அந்நூலின் முன்னுரையில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கிய அச்சாக்கத்திற்குப் பிறகு 1950களில் அதனுடைய கருத்துகளை உள்வாங்க கழக வெளியீட்டு நிறுவனத்தால் சொற்பொழிவுகளாகச் சங்க இலக்கியம் வலம் வந்தது. இதன் மூலம் முன்னைவிடவும் சங்க இலக்கியம் பரவலானது. மக்களுக்கான எளிய மொழியில் உரைநடையில் வெளியிடுவது எல்லாரையும் சென்றுசேர்ந்தது. அதற்கு முன்னதான காலகட்டத்தில் ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்த உழைக்கும் வர்க்கமும் கூலியாள்களும் படித்தறிவதற்காகவே உரைநடையில் வள்ளுவர், கம்பர், குசேலர், கண்ணகி சரித்திரம், கலிங்கத்துப்பரணி, நல்லொழுக்கக் கதைகளை விளக்கும் முகமாக ‘வியாச மஞ்சரி’, ‘அபிநவக் கதைகள்’ உள்ளிட்டவற்றை எழுதிப் பாமர மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தவர் இவர். அதற்கு முன் தமிழ் மொழி, கம்பர், திருவள்ளுவர் ஆகிய இருவரைத்தான் கதியாகக் கொண்டிருந்தது எனலாம். இந்தியவியல், திராவிடவியல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்ட போப், கால்டுவெல் உள்ளிட்டவர்களின் ஆய்வில் கவனஞ்செலுத்தி தக்கவற்றை ஏற்றும் அல்லாதவற்றை நிராகரித்தும் உள்ளார் செல்வக்கேசவராயர். அந்த வகையில் திராவிடக் கருத்துருவாக்கச் சிந்தனைகள் தென்னிந்தியப் பரப்பில் வலுவாகக் காலூன்ற இவருடைய பணி முக்கியமானதாக விளங்குகிறது.
- வா.மு.சே.ஆண்டவர்,
பேராசிரியர்.