பஞ்சாப் பதற்றம்: இன்னொரு பிந்த்ரான்வாலேயா அம்ரித்பால்?

பஞ்சாப் பதற்றம்: இன்னொரு பிந்த்ரான்வாலேயா அம்ரித்பால்?
Updated on
3 min read

கடந்த சில காலமாக மீண்டும் பேசுபொருளாகி யிருந்த காலிஸ்தான் விவகாரம், லண்டன் இந்தியத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியை இறக்கி, காலிஸ்தான் கொடியை சீக்கியர்கள் சிலர் ஏற்றியதைத் தொடர்ந்து பரபரப்பான விவாதமாக மாறிவிட்டது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் போராட்டம் நடத்தியபோதும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டபோதும், பஞ்சாபில் ட்ரோன் மூலம் போதைப்பொருள் - ஆயுதக் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தபோதும் ஏற்படாத பதற்றம் இப்போது பெரிய அளவில் எழுந்திருக்கிறது.

அமித் ஷாவுக்கு மிரட்டல்: சில வாரங்களுக்கு முன்னர் பஞ்சாபில் சுதந்திரமாக உலவியபடி காலிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவான வாதங்களை ஊடகங்களிடம் வெளிப்படையாகப் பேசிவந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங், இன்றைக்கு மிகப் பெரும் தேடுதல் வேட்டையின் இலக்காகியிருக்கிறார். சாகசப் பாணியில் அவர் தப்பிச் சென்றுவிட்டதாகச் செய்திகள் பரவினாலும், சட்டத்துக்குப் புறம்பாக அவர் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாகவே அவரது தந்தையும் வழக்கறிஞரும் வாதிடுகின்றனர்.

ஒரு காலத்தில் பஞ்சாபையும் நாட்டையும் அதிரவைத்த ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேயைப் போல இன்றைக்குத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயற்சிக்கும் அம்ரித்பால், காலிஸ்தான் இயக்கத்தின் நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டால், இந்திரா காந்திக்கு ஏற்பட்ட கதிதான் நேரும் என்கிறரீதியில் சில நாள்களுக்கு முன்னர் பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், “காலிஸ்தான் இயக்கத்தை நசுக்கிவிடுவதாக அமித் ஷா தான் மிரட்டுகிறார். இதே நிலைப்பாட்டைத்தான் இந்திரா காந்தி கொண்டிருந்தார். நான் இந்திரா காந்தி படுகொலையைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், பொற்கோயில் தாக்குதலுக்குப் பின்னர் 10 ஆண்டுகள் மிக மோசமான காலகட்டமாக இருந்ததைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்” என்று விளக்கம் கொடுத்தார் அம்ரித்பால். எனினும் அவரது பேச்சு மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது வெளிப்படை.

காலிஸ்தான் இயக்க வரலாறு: 17ஆம் நூற்றாண்டில் - குரு கோவிந்த் சிங்கின் காலத்தில் - தங்களுக்கென ஒரு தனி ராஜ்ஜியம் வேண்டும் எனும் எண்ணம் சீக்கியர்களிடம் எழுந்தது. சீக்கிய சமூகத்தைக் குறிக்கும் சொல் ‘கால்ஸா’. காலிஸ்தான் என்றால் ‘கால்ஸாக்களின் நிலம்’ என்று பொருள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்து-சீக்கியர் பிளவை அதிகரிக்கும் முயற்சிகள் நடந்தன. சீக்கியர்கள் அதிக அளவில் படைகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

சுதந்திரம் கோரி கிளர்ச்சி செய்த இந்துக்களை அடக்க சீக்கியப் படைகளைப் பிரிட்டிஷ் அரசு பயன்படுத்திக்கொண்டது. பிரிட்டிஷார் வெளியேறும்போது தங்களுக்கெனத் தனி நாடு அமையும் எனும் நம்பிக்கையில் பெரும்பாலான சீக்கியர்கள் இருந்தனர். எனினும், சுதந்திரப் போராட்டத்தில் சீக்கியர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதற்கு பகத் சிங், உதம் சிங் போன்ற தீரர்களின் தியாகங்களே உதாரணம்.

அதே நேரம், 1929 டிசம்பரில் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, ‘பூரண சுயராஜ்ஜியம்’ எனும் முழக்கத்தை நேரு முன்வைத்தபோது, அகாலி தளத் தலைவர் மாஸ்டர் தாரா சிங் அதை ஏற்கவில்லை. வட மேற்கு இந்தியாவில் சீக்கியர்களுக்கெனத் தன்னாட்சி பெற்ற பிரதேசம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அதன் பின்னணியில் இருந்த அம்சம். ஆனால், மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்படக் கூடாது என நேரு கருதினார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் அதைப் பற்றிப் பரிசீலிக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. 1946 மார்ச் மாதம் பஞ்சாபைத் தனி நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை அகாலி தளம் கொண்டுவந்தது. அரசமைப்பு நிர்ணய அவை, இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சீக்கிய மதத்தைக் கருதியதால், அதுபோன்ற முயற்சிகள் அங்கீகரிக்கப்படவில்லை. இவை அனைத்தும் இந்து ஆதிக்கத்தின் வெளிப்பாடுகள் என சீக்கியத் தலைவர்கள் கருதினர்.

சுதந்திரத்துக்குப் பின்னர்: தேசப் பிரிவினையின்போது கடும் இழப்புகளைச் சந்தித்த சீக்கியர்கள், முஸ்லிம்களுக்கென பாகிஸ்தான் உருவானது போலத் தங்களுக்கெனத் தனி நாடு உருவாகாதது குறித்த அதிருப்தியில் இருந்தனர்; அது படிப்படியாக வளர்ந்துவந்தது. 1970இல் மேற்கு லண்டனில் காலிஸ்தான் இயக்கம் முறைப்படி இயங்கத் தொடங்கியது.

1982இல் அகாலி தளமும், தம்தமி தக்ஸால் இயக்கத் தலைவரான ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேயும் காலிஸ்தான் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்தனர். வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தன. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பிந்த்ரான்வாலேயை வளர்த்துவிட்டதே இந்திரா காந்தி அரசுதான் எனும் குற்றச்சாட்டும் உண்டு.

பஞ்சாபின் பல பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது. பொய் வழக்குகளில் காவல் துறையினரால் அப்பாவி சீக்கிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக அதிருப்தி நிலவியது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்மம் அதிகரித்திருக்கிறது எனும் பிரச்சாரத்தை வெளிநாடுவாழ் சீக்கியர் அமைப்புகள் முன்னெடுத்தன. அதன் வாயிலாக, வங்கதேசத்தைப் போலத் தங்களுக்கென தனிநாடாக காலிஸ்தானை நிறுவ முயற்சி மேற்கொண்டனர்.

இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பெரும்பங்கு வகித்தது. வன்முறை அதிகரித்த நிலையில், 1984இல் ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையை இந்திரா அரசு தொடங்கியது. அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்த பிந்த்ரான்வாலே தலைமையிலான சீக்கிய அமைப்பினர்மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் பிந்த்ரான் வாலே உள்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டில் இந்திரா காந்தியை, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அவரது மெய்க்காப்பாளர்கள் படுகொலை செய்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கலவரங்களில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

உண்மையில் அந்தக் காலகட்டத்தில் டெல்லியிலும் வெளிநாடுகளிலும் வசித்த சாமானிய சீக்கியர்களில் கணிசமானோர் காலிஸ்தான் தொடர்பாகத் தீவிரமான ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், டெல்லி படுகொலை அவர்களை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியது.

தனிநாடு வேண்டும் எனும் எண்ணம் பெரும்பாலான சீக்கியர்கள் மத்தியில் வேரூன்றியது. 1986 ஏப்ரல் 29 அன்று காலிஸ்தான் எனும் தனிதேசம் உருவானதாக சீக்கிய அமைப்புகள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், அரசு மேற்கொண்ட பெருமுயற்சிகள் மூலம் பஞ்சாபில் அமைதி திரும்ப ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆகின.

இன்றைய சூழல்: காலிஸ்தான் குறித்து அமைதிவழியில் பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதியளிப்பதாக வாதிடுபவர் அம்ரித்பால்; அதைத் தேசத் துரோகமாகச் சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்கிறார். அமைதி குறித்து உதட்டளவில் பேசும் அவர், அஜ்னாலா காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த தனது ஆதரவாளர் ஒருவரை மீட்க வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் சகிதம் ஆதரவாளர் படையுடன் சென்று போலீஸாருடன் மோதியது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் சொல்லிக்கொள்கிறார்.

ஆனால், அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடனும் போதைப் பொருள் கும்பலுடனும் இணைந்து செயல்படுகிறார் என்பதுதான். சட்ட அங்கீகாரம் இல்லாமல் அவர் நடத்தும் போதை மறுவாழ்வு மையங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இடங்களாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஐஎஸ் (Islamic State) பயங்கரவாதிகளுடனும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் எனும் குற்றச்சாட்டின்பேரில் 150க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நடவடிக்கை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என அகாலி தளம் கட்சித் தலைவர்களும், எஸ்ஜிபிசி (சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி) உள்ளிட்ட அமைப்புகளும் கண்டிக்கின்றனர்.

முக்கியமாக, நாட்டுப்பற்று மிக்க சீக்கியர்கள்மீது அரசியல் ஆதாயத்துக்காகப் பழிபோடும் முயற்சி நடப்பதாக அகாலி தளம் கண்டித்திருக்கிறது. ஆம் ஆத்மி அரசு கலைக்கப்பட்டு புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அகாலி தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆதரவு இல்லை: இப்படியான சம்பவங்கள் நடக்கும்போது, சீக்கியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இயல்பாகவே நாட்டுப்பற்றுக்குப் பெயர்போன சீக்கியர்கள் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை ஏற்கவில்லை.

உண்மையில், இந்திரா காந்தி காலத்தில், ஆரம்பத்தில் பிந்த்ரான்வாலேவுக்குக் கிடைத்த அரசியல் ஆதரவுத் தளம் அம்ரித்பாலுக்கு இல்லை. பெரும்பான்மையான சீக்கிய மக்கள் மத்தியிலும் அம்ரித்பாலுக்கு ஆதரவு இல்லை. அதே சமயம், வேலைவாய்ப்பின்மை, போதைப் பொருள் புழக்கம் போன்ற பல எதிர்மறை அம்சங்களால் சோர்வடைந்திருக்கும் சீக்கிய இளைஞர்களில் பலர் அவரால் கவரப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தால், இணைய முடக்கம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களைப் பஞ்சாப் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை, அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்துவருவதால், பஞ்சாபின் பதற்றச் சூழல் விரைவில் தணியும் என்று எதிர்பார்க்கலாம்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in