அஞ்சலி: பி.வி.சதீஷ் | சிறுதானியங்களின் மீது கவனத்தைத் திருப்பிய முன்னோடி!

அஞ்சலி: பி.வி.சதீஷ் | சிறுதானியங்களின் மீது கவனத்தைத் திருப்பிய முன்னோடி!
Updated on
2 min read

‘இந்தியாவின் சிறுதானிய மனிதர்’ என்றழைக்கப்பட்ட பி.வி.சதீஷ் (77), மார்ச் 19 அன்று காலமானார். ஊடகவியலாளராகத் தன்பணியைத் தொடங்கிய சதீஷ், சிறுதானியங்கள் பற்றிய கவனத்தை இந்திய அளவில் உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர்.

அடிப்படையில் ஊடகவியலாளர். அந்த அனுபவங்களின் துணையுடன் சிறுதானிய உற்பத்திக்கும் பரவலாக்கத்துக்கும் புதிய உத்திகளை அவர் வழங்கினார். பட்டியல் சாதி, பழங்குடிப்பெண் விவசாயிகளுக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார்.

இயற்கை விவசாயத்துக்குப் புத்துயிர்: டெல்லியில் உள்ள இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனத்தில் பட்டம் பெற்ற சதீஷ், தூர்தர்ஷனில் 20 ஆண்டுகாலம் கிராம மேம்பாடு, கிராமக் கல்வி குறித்த நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1970களில், இந்தியாவில் முதன்முறையாகச் செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கிராமப்புறங்களில் ஒளிபரப்பும் திட்டத்தில் (SITE) முக்கியப் பங்கு வகித்தது அவரது தனிச்சிறப்பு.

பசுமைப் புரட்சியின் விளைவாகப் பணப்பயிர்கள், பம்பு செட்டுகள், செயற்கை இடுபொருள்கள் என இந்தியா ஓடிக்கொண்
டிருந்த காலகட்டத்தில், மானாவாரி இயற்கை விவசாயத்துக்கும் சிறுதானியங்களுக்கும் சதீஷ் புத்துயிர் அளித்தார். இதற்காக நண்பர்களுடன் சேர்ந்து 1983இல், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மேதக் மாவட்டத்தில், ‘தக்காண வளர்ச்சிச் சங்கம்’ (Deccan Development Society) என்ற சமூக நிறுவனத்தைத் தொடங்கினார்.

பெண் விவசாயிகளின் மேம்பாடு: தான் பிறந்த கர்நாடக மாநிலத்தைவிட்டு, இன்றைய தெலங்கானாவின் ஜஹிராபாத்துக்கு அருகிலுள்ள பஸ்தாபூருக்குக் குடிபெயர்ந்த சதீஷ், ஓர் எளிய கூட்டு வேளாண் செயல்பாட்டின் மூலம், பட்டியல் சாதி, பழங்குடிப் பெண் விவசாயிகளுக்கு அதிகாரத்தை உருவாக்க முடியும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை உறுதிப்படுத்தி வறுமையை ஒழிக்க முடியும் என்றும் நிரூபித்துக் காட்டினார்.

இன்று ஜஹிராபாத் பகுதியிலுள்ள 75 கிராமங்களில் செயல்படும் மகளிர் விவசாயக் குழுக்களின் மூலம், ஆயிரக்கணக்கான பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துவருகிறது, அவர் நிறுவிய தக்காண வளர்ச்சி சங்கம்.

ஒரே நிலத்தில் பல சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளைப் பயிரிடுவதன் மூலம் மனிதர்கள், கால்நடைகள், பறவைகளுக்கு உணவளிக்க முடியும்; உயிர்ப்பன்மைப் பெருக்கத்துக்கு வித்திட முடியுமென்ற பாரம்பரிய அறிவைப் பெண் விவசாயிகளிடமிருந்து சதீஷ் கற்றுக்கொண்டார். 2000இல் தேசிய உயிர்ப்பன்மை சார்ந்த வியூகம் மற்றும் செயல் திட்டத்தை (National Biodiversity Strategy and Action Plan) உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

மக்கள் கைகளில் மரபு விதைகள்: சதீஷின் முயற்சியால், அரசின் ஜவாஹர் வேலைத் திட்ட உதவியுடன், உள்ளூரில் பொதுமக்களுக்கு அரிசிக்குப் பதிலாகச் சிறுதானியங்கள் வழங்கப்பட்டன. இம்முயற்சி அரசு அறிக்கைகளில் பாராட்டைப் பெற்றது. முக்கியமாக, மரபு விதைகள் மக்கள் கைகளில் இருப்பதன் மூலமே உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று உரக்கச் சொன்னவர் சதீஷ்.

மரபு விதைத் திருவிழாக்கள் இன்று வழக்கமாகிவிட்டன. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்பே மரபு விதைகள், மூலிகைகள், நாட்டுக் கால்நடைகள், கோழிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் வகையில் உயிர்ப்பன்மை விழாக்களை (Biodiversity Festival) ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாக்களாக சதீஷ் நடத்திக்காட்டினார்.

புத்தாக்க முயற்சிகள்: ஊர் ஊராக மாட்டு வண்டிகளில் செல்லக்கூடிய ‘நடமாடும் உயிர்ப்பன்மை விழா’க்களையும் ஒருங்கிணைத்தார். அவரது தலைமையில், சிறுதானியங்களைக் கிராம அளவில் சந்தைப்படுத்த முடியும் என்று தக்காண வளர்ச்சி சங்கம் நிரூபித்துக் காட்டியது.

ஹைதராபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சங்கத்தின் பெண்கள் நடத்தும் ‘Ethnic Caf’, அவரது புதுமை முயற்சிக்குச் சான்றாக உள்ளது. அடிப்படையில் ஊடகவியலாளர் என்பதால், கிராமப்புறப் பட்டியல் சாதிப் பெண்கள் ஆவணப்படங்கள் எடுக்க சதீஷ் பயிற்சியளித்தார்.

இந்தியாவின் முதல் கிராமப்புற சமூக வானொலியான ‘சங்கம் வானொலி’யை உருவாக்கி வழிநடத்தினார். தெலங்கானாவோடு நில்லாமல் இந்திய அளவில் சிறுதானியங்களைப் பரவலாக்குவதில் முனைப்புக் காட்டினார். இதற்காக, 2007இல் இந்திய சிறுதானியக் கூட்டமைப்பை (Millet Network of India) உருவாக்கினார்.

தெலங்கானாவில் நடந்த விழா ஒன்றில் இக்கூட்டமைப்பைத் தொடங்கிவைத்தவர் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார். குடியரசுத் தலைவரின் ‘பெண் சக்தி விருது’ (Nari Shakti Puraskar), இந்தக் கூட்டமைப்புக்கு 2018இல் வழங்கப்பட்டது.

தெலங்கானா பட்டியல் சாதி, பழங்குடிப் பெண் விவசாயிகளின் பணிகள், தக்காண வளர்ச்சிச் சங்கத்தின் மூலம் 1996இல் இத்தாலியின் ரோமில் நடந்த உணவு உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டன.

2019இல் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் ‘பூமத்திய ரேகைப் பரிசு’ (Equator Prize) தக்காண வளர்ச்சிச் சங்கத்துக்கு வழங்கப்பட்டது. பன்னாட்டு சிறுதானிய ஆண்டில் தன் இயற்கை எய்திவிட்ட பி.வி.சதீஷ், இந்தியா எங்கும் உள்ள மகளிர் சிறுதானிய முன்னெடுப்புகளின் வழிகாட்டியாக என்றும் வாழ்வார்.

- க.சரவணன் | தொடர்புக்கு: saravananfreedom@gmail.co

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in