

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலை முதல் கேட்கும் கேள்விகளுக்கு மாலையில் ஒட்டுமொத்தமாகப் பதிலளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை, காலையில் ஒரு முக்கிய விஷயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் காயிதே மில்லத் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.
பிரதமர் நேரு மாலையில் பதிலளிக்க வந்தார். அப்போது அவையில் காயிதே மில்லத் இல்லை; ரமலான் மாதம் என்பதால் நோன்பு திறப்புக்காக (இப்தார்) வெளியே சென்றிருக்கிறார் என்று நேருவுக்குச் சொல்லப்பட்டது. கூடவே, நோன்பு, நோன்புத் திறப்பின் மாண்புகள் குறித்தும் அவருக்குத் தெரியவந்தது. உடனே, நாடாளுமன்றத்தில் நோன்புத் திறப்புக்கும் தொழுகை நடத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்தார்.
1997இல் வாழப்பாடி ராமமூர்த்தி ஏற்பாடுசெய்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கலந்துகொண்டார். 1998 முதல் அதிமுக சார்பில், தன்னுடைய சொந்த செலவில் இப்தார் நிகழ்ச்சியை ஜெயலலிதா நடத்தத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பாக அவர் அதிகம் பேசியதில்லை. முதன்முறையாக, அதிமுக அரசு 2002இல் கஞ்சிக்காகப் பள்ளிவாசல்களுக்கு இலவசப் பச்சரிசி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
1981ஆம் ஆண்டு முதல், தமிழ் மாநில தேசிய லீகின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், தன்னுடைய கட்சி சார்பில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்துவந்தார். அந்நிகழ்ச்சியில் திமுகவினரும் அதன் தோழமைக் கட்சியினரும் கலந்துகொள்வர். மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி, 2007ஆம் ஆண்டுவரை இப்தார் விருந்தில் கலந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போதைய முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலினும், 2008 முதல் 2019 வரை கலந்துகொண்டார். கடந்த ஆண்டு முதல் முறையாக திமுக சார்பில் இப்தார் விருந்து நடத்தப்பட்டது.
இப்படியொரு இப்தார் விருந்து இதுவரை தமிழ்நாட்டில் நடந்ததில்லை. மண்ட பத்தின் வாயிலில் இஸ்லாமிய மாணவர்களும் மாணவிகளும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் வந்ததும் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தேறின. தனது தந்தை கருணாநிதி, தன்னுடைய இறுதிக் காலம்வரை எப்படி இஸ்லாமியர்களோடு நெருக்கத்தோடும் நட்புணர்வோடும் இருந்தார் என்பதைத் தனது உரையில் சுட்டிக்காட்டிப் பலரையும் நெகிழவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இப்தார் விருந்து போன்றவை சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன. மாற்று மதத்தைச் சேர்ந்தோர், இஸ்லாமியரின் புனித வழிபாட்டு முறையைப் பற்றிய புரிதலோடு கலந்துகொள்வதுதான் இப்தார் விருந்தின் வியக்கத்தக்க விளைவு. கூடவே, நோன்புத் திறப்பு என்பது பிராத்தனைக்கான நேரம். இத்தருணத்தில் நோன்பு சார்ந்த மாண்புகள், இஸ்லாமியர்கள் வாழ்க்கை முறைக் கோட்பாடுகள், மக்களிடையே மத நல்லிணத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கம் ஆகியவைதான் முக்கியம்.
மாவட்டம்தோறும் அரசியல் கலப்பு இல்லாத ‘ஜமா-அத்’துகள், அறக்கட்டளைகள் நடத்தும் இப்தார் விருந்து பெரிய முரண்களையும் வெறுப்புகளையும் ஆற்றுப்படுத்துகிறது. அதோடு, கலாச்சார ஒன்றுகூடலாக இருக்கிறது. அரசியல், இதர விஷயங்களுக்காக இப்தார் நிகழ்வு நடத்தப்படுவது அதன் உண்மையான நோக்கத்தைச் சிதைக்கிறது. இப்தார் விருந்து நடத்தும் எல்லாருக்கும் இந்த விஷயத்தில் கவனம் தேவை.
- புதுமடம் ஜாபர்அலி | தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com