சொல்… பொருள்… தெளிவு | மாதவிடாய் விடுப்பு

சொல்… பொருள்… தெளிவு | மாதவிடாய் விடுப்பு
Updated on
2 min read

மாணவியருக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமாறு டெல்லியைச் சேர்ந்த சைலேந்திர மணி திரிபாதி பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தார். அந்த மனுவைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நபர் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

மனுவை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கேவியட் மனு தாக்கல் செய்தார். மாணவியின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அதைக் குறிப்பிட்டனர். ‘பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும்பட்சத்தில் பெரும்பாலான நிறுவனங்களில் இதைக் காரணம்காட்டிப் பெண்களை வேலைக்கு எடுக்கத் தயங்குவார்கள்.

இது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பிரச்சினை. அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது’ என்று சொன்ன தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை மத்திய அரசின் குழந்தைகள் - மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும்படி அறிவுறுத்தி, கடந்த மாதம் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

பிஹாரில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பதைப் பொதுநல மனுவில் சுட்டிக்காட்டியதுடன், ‘இது மகப்பேறு நலன் சட்டம் 1961 பிரிவு 14க்கு எதிரானது. கூட்டாட்சி, மாநில அரசின் கொள்கைகள் போன்றவற்றின் பெயரால் பெண்களைப் பிரித்துப் பார்ப்பது தவறு.

மாதவிடாய் நாள்களில் பெண்கள் அனைவரும் உடலியல், உளவியல்ரீதியாக ஒரே மாதிரி பிரச்சினைகளைச் சந்திக்கையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையில் பெண்கள் நடத்தப்படுகின்றனர். இந்தியக் குடியுரிமை பெற்ற பெண்கள் அனைவரும் மாதவிடாய் விஷயத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும்’ எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்தியாவில் மாதவிடாய்: இயற்கை நிகழ்வான மாதவிடாய் தீட்டு என்று இந்தியாவில் இன்றைக்கும் நம்பப்படுகிறது. மாதவிடாய் நாள்களின் மூடநம்பிக்கைகள் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததால், மாதவிடாய் சுகாதாரம் குறித்தும் பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை.

இந்தியாவில் 15–24 வயதுக்கு உள்பட்ட பெண்களில், 49.6% பேர் மாதவிடாய் நாள்களில் துணிகளைப் பயன்படுத்துவதாக தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 தெரிவிக்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள பெண்களில் 77.6% பேர் மாதவிடாய் நாள்களில் சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் எனவும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.

பொருளாதாரம்: மாதவிடாய் நாள்களின் சுகாதாரம் என்பது பெண்களின் சமூக – பொருளாதார நிலையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. சமூக அந்தஸ்தில் மேம்பட்ட நிலையிலிருக்கும் பெண்கள், மாதவிடாய் நாள்களில் சிறப்பான முறையில் (95.1%) சுகாதாரத்தைப் பேணுகிறவர்களாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இது குறித்துப் போதிய அக்கறை (53.6%) செலுத்த முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். பெண்கள் எளிதில் வாங்க முடிகிற தொலைவில் நாப்கின்கள் கிடைப்பதைப் பொறுத்தும் அவர்களின் மாதவிடாய் சுகாதாரம் அமைகிறது.

அரசின் கொள்கை: மாதவிடாய் விடுப்பு அளிக்கப்படுவதாகச் சொல்லப்படும் பிஹாரில்தான் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம்மிகக் குறைவு (59%); மாதவிடாய் சுகாதாரத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது (98.4%). மாநில அரசுகளின் கொள்கை முடிவுகள்,ஆட்சியில் இருப்போரின் அரசியல் நிலைப்பாடுகள் போன்றவை பெண்களின் சுகாதாரத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்பதை இது உணர்த்துகிறது.

தடைபடும் வளர்ச்சி: கல்வி நிறுவனங்களிலும் பணியிடங்களிலும் இருக்கிற கட்டமைப்புப் போதாமை மாதவிடாய் நாள்களில் பெண்களைப் பெருமளவில் பாதிக்கிறது. போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை இல்லாதது, தண்ணீர்த் தட்டுப்பாடு, நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாதது, கழிப்பறையைப் பயன்படுத்த நேரம் கொடுக்கப்படாதது உள்ளிட்ட பல காரணங்கள் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன.

இதனால், பலர் வேலையைவிட்டு நிற்கிற சூழல் ஏற்படுகிறது. அந்த முடிவை எடுக்க முடியாதவர்கள், கருப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். அரசின் பெரும்பாலான கொள்கைகளில் முறை சாராப் பணியாளர்கள் விடுபடுவது போலவே,மாதவிடாய் நாள்களில் அவர்களின் அவஸ்தையும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

ஆதரவும் எதிர்ப்பும்: மாதவிடாய் விடுப்பு குறித்துப் பெண்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கு எதிரான கருத்துகளும் எழுந்தவண்ணம் இருக்கின்றன. மகப்பேறு விடுப்பே பெண்கள் அனுபவிக்கும் சலுகையாகத்தான் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கிறது. மாதவிடாய் விடுப்பையும் பெண்கள் பொழுதுபோக்க எடுக்கும் விடுப்பாகவே பலர் கருதச் சாத்தியம் உண்டு.

பெண்களின் பணி வாழ்க்கையை மகப்பேறு பாதிப்பதைப் போலவே மாதவிடாய் விடுப்பும் பாதிக்கக்கூடும். உச்ச நீதிமன்றத்தின் கருத்தும் இதைத்தான் உணர்த்துகிறது. ‘நிறுவனங்களின் இந்தப் பாலினப் பாகுபாட்டு அணுகுமுறையை மாற்றுவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமே தவிர, மாதவிடாய் விடுப்பை மறுபரிசீலனை செய்வது பெண்களுக்குச் செய்யும் அநீதி’ என்பது ஆதரவாளர்களின் வாதம்.

மாதவிடாய் என்பதை, பெண்களுக்கு நிகழும் உடலியல் நிகழ்வு என்று சுருக்கிவிடாமல், மனித குலத்தின் மறுஉற்பத்தியில் ஈடுபடுகிறவர்கள் பெண்களே என்கிற விரிவான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். அதில் நாம் காட்டுகிற அலட்சியம் எதிர்காலச் சந்ததியின் நலனை நேரடியாகப் பாதிக்கும்.

தொகுப்பு: பிருந்தா சீனிவாசன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in