

வட மாநிலத் தொழிலாளர்களின் வருகை தொடர்பாக எழுந்திருக்கும் விவாதத்தில் சில முக்கிய அம்சங்கள் கூடுதல் கவனத்தைக் கோருகின்றன. உண்மையில், தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை பார்க்காமலோ வேலைக்கு வர விருப்பம் இல்லாமல் இருப்பதாகவோ சொல்ல முடியாது.
வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தபடி, அனைத்து வணிக நிறுவனங்களும், தொழிலதிபர்களும் தமிழர்களுக்கு வேலை வழங்குவதில் தயக்கம் காட்டுவதும் இல்லை. ஆனால், வேலையின் போக்கு அல்லது அதன் தன்மை மாறிவிட்டது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
2010இலிருந்து நமது பொருளாதார உற்பத்தி, சேவை ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்கு மாறிவிட்டது. தங்கள் வேலை நேரத்தைத் தாங்களே நிர்ணயித்துக்கொள்வது, சுய தொழிலில் இருக்கும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றின் காரணமாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள், நடுத்தர வயதினர் - தொழிற்சாலைகள், உணவகங்கள், நிறுவனங்கள் ஆகிய இடங்களில் வேலைசெய்வதைக் குறைத்துக்கொண்டனர் என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது; அது சரிதான்.
ஒருகட்டத்தில், தொழிலாளர் பற்றாக்குறையைச் சரிசெய்ய, இந்நிறுவனங்களின் முதலாளிகள் வட மாநிலங்களை நோக்கித் திரும்பினர். அஸ்ஸாம், ஒடிஷா மாநிலத்தவர்கள் பொதி கட்டுதல் (Packaging), சுமைகளைக் கையாளுதல் (Loading) போன்ற வேலைகளைச் செய்வதில் திறமையானவர்களாக அறியப்பட்டார்கள்.
பிஹார் மாநிலத்தவர்களோ கட்டுமானம், தச்சு வேலை போன்றவற்றைத் திறம்படச் செய்பவர்கள். இதன் காரணமாக, வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டு முதலாளிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.
தவிர, 2000இன் தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் ‘கேன் வாட்டர்’ எனப்படும் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை அதிகரித்துவிட்டது; பலரும் இந்த விற்பனையில் கால்பதித்துள்ளனர். அதே தருணத்தில், கால் டாக்ஸி தொழிலும் வந்துசேர்ந்தது.
கார் அல்லது சரக்கு வாகனம் வாங்க வசதி உள்ளவர்களும் மாதாந்திரத் தவணை செலுத்த முடிந்தவர்களும் இந்தத் தொழில்களில் இறங்கினர். உணவகங்களில் கைப்பேசி மூலமாக ஆர்டர் செய்பவர்களுக்கு உணவு விநியோகம் செய்வதற்கான ஒரு புதிய வேலைவாய்ப்பும் இதே காலகட்டத்தில் உருவானது. தற்போது காய்கறி, மளிகைப் பொருள்களை விநியோகம் செய்யும் வசதிகளும் வந்துவிட்டன. இந்தத் தொழில்களில் நாம் நினைத்த நேரத்தில் வேலை செய்யலாம் என்பது பலரையும் ஈர்த்தது.
இதில் சவால்களும் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. இந்தத் தொழில்களில், தொழிலாளர் அரசுக் காப்பீடு (ESI), வருங்கால வைப்புத்தொகை (PF), சம்பளத்துடன் கூடிய விடுப்பு, போனஸ் போன்ற சலுகைகள் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. ஆனால், குறைந்தபட்சக் கல்வித் தகுதி கொண்டவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை இளைஞர்கள் பலரும் இதுபோன்ற வேலைகளில்தான் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதனால், கட்டுமான வேலை தொடங்கி கடை உதவியாளர்கள் வேலை வரை ஏற்பட்டிருக்கும் இடைவெளியை நிரப்ப வட மாநிலத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே, வட மாநிலத் தொழிலாளர்களின் வருகையை எதிர்மறையான அம்சமாகப் பார்க்க வேண்டியதில்லை.
- கி.சிவராம கிருஷ்ணன் | பொருளாதார ஆய்வாளர்; தொடர்புக்கு: Kaysiva@rediffmail.com