

தனது இயக்கத்துக்கு இடையூறாக வரும் எந்த சக்தியையும் மீறித்தன் செயல்பாட்டை நிகழ்த்தும் இயல்பைக் கொண்டது கடல். நதிமுகத்துறைமுகங்கள் மாறி, செயற்கையாய் தடுப்புச் சுவரோடு கூடிய துறைமுகக் கட்டமைப்புகள் அமைந்த பின், அத்துறைமுகங்களின் அருகமைக்கடலோரக் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது. கடலுக்குள் செயற்கையாக அமையும் எந்தக் குறுக்கீடும் கடலடி நீரோட்டத்தை, ஒருபுறம் அரித்து மறுபுறம் சேர்க்கும் தன்மையுடையது.
கிழக்கே தூத்துக்குடி துறைமுகம் தொடங்கி, மேற்கே நீரோடிவரை பூமத்திய ரேகையின் அருகமைந்த மன்னார் கடல், இயற்கையான தீவுகளற்ற திறந்தவெளி, வலுவான கடலடி நீரோட்டங்களால் பாதிப்புக்குள்ளாகும் பகுதி. தொடர்ந்த கடலரிப்பின் காரணமாகவே இப்பகுதியில் பெரும்பாலான கடற்கரை ஊர்களில் அலைத்தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன.
அதிகார வர்க்கத்தின் அலட்சியம்: தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்ட பிறகும் தென்பகுதியில் கடற்கரைகள் காணாமல் போவதற்கான காரணம், நிலஅமைவு, களநிலவரம் புரியாத அரசு நிர்வாகக் கோளாறு. தென்கடலில் கடலரிப்புக்கான முக்கியக் காரணிகள் சோழக்காற்றும், சோநீவாடு என்ற மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் கடலடி நீரோட்டமும்.
பாதுகாப்பு என்பது நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவரால் அல்ல; மாறாக, மேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி அமையும் தூண்டில்வளைவுகளாலேயே சாத்தியமாகும் எனப் பாரம்பரிய மீனவர்கள் வலியுறுத்திச் சொன்ன பிறகும், புரிதல் இல்லாமலேயே நேர்க்கோட்டுத் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. தூண்டில்வளைவு என்பது வாழ்விடத்துக்கானது மட்டுமல்ல, அது வாழ்வாதாரமாகிய மீன்பிடித் தொழிலையும் பாதிக்காமல் அமையக்கூடியது.
அதிகார வர்க்கத்துக்கு இந்த வேறுபாடு புரியாததால், தென் தமிழகக் கடலோரமே இன்று அல்லல்பட்டுக் கிடக்கிறது. தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்ட ஊர்களிலும், அலைகள் உருவாகும் ஆழ்கடல் பகுதிக்கு அவை திருப்பப்படாமல், அலை உடையும் கரைப் பகுதியிலேயே திருப்பப்படுவது தொடர்கிறது. தவறான இந்தச் செயல்பாடு, தடுப்புச்சுவர் அமைவையே கேள்விக்குறியாக்கி மீனவ உயிர்களைக் காவு வாங்கியபடி இருக்கிறது.
அதிகரித்த மணல் கொள்ளை: வாழிடம், வாழ்வாதாரப் பாதுகாப்புக்காக இன்று போராடத் துணிந்திருக்கும் கூடுதாழை, திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கிழக்கிலிருக்கும் பாரம்பரியக் கடற்கரை ஊர். ஏனைய ஒற்றை ஆழிக் கடற்கரை ஊர்களைப் போலல்லாது கரை ஆழி, வெலங்கு ஆழி என இரண்டு இயற்கையான இடர்களைத் தினமும் கடந்து தொழில் செய்யும் கூடுதாழை மீனவர்கள், கடந்த 50 ஆண்டுகளாகவே பாதுகாப்புத் தடுப்புச்சுவர் வேண்டித் தொடர்ச்சியாக அரசிடம் விண்ணப்பம் வைத்தபடி இருக்கிறார்கள்.
எண்பதுகளில் ஆரம்பித்து தொண்ணூறுகளின் இறுதியில் உச்சம் தொட்ட அதீத மணல் கொள்ளையால், மணல் தேரிகளின் இயல்பான பாதுகாப்பு தகர்க்கப்பட்டுப் பேரழிவின் விளிம்பைத் தொட்டபோதிலும் அதிகார வர்க்கத்தின் கடைக்கண் பார்வை கூடுதாழைக் கடற்கரை மீது படவேயில்லை.
மணல் கொள்ளைக்குப் பிந்தைய காலத்தில், கூடுதாழையின் நிலஅமைவே முழுமையாக மாறியிருக்கிறது. கச்சான் காலத்தில் எந்த நேரமும் விழுந்து நொறுங்கிவிடும் நிலையில் இருக்கும் வீடுகளில், பிள்ளைக் குட்டிகளோடு எப்படி வாழ்வது எனப் பதறிப்போயிருக்கிறார்கள் மீனவர்கள்.
பாரம்பரிய மீனவர்களின் பங்களிப்பு: பாதுகாப்பற்ற இச்சூழலை அரசு கருத்தில்கொண்டு, உடனடியாகக் கடல்-கடலோரக் களஆய்வு மேற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் அலையடித் தடுப்புச்சுவர் தூண்டில்வளைவாய் அமைத்துத் தர வேண்டும். திட்டச் செயலாக்கத்தில் அலை, கடலடி நீரோட்டங்களின் தன்மை புரிந்த மண்ணின் மைந்தர்களான பாரம்பரிய மீனவர்களின் அறிவுரைகள் ஏற்றுகொள்ளப்பட வேண்டும்.
அமையும் தூண்டில்வளைவுகள் அரச நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு, உரிய காலத்தில் அதன் பராமரிப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். அதீத மணல் கொள்ளையே கடலோரத்தில் கதிரியக்க நோய்களுக்கும், கடலரிப்புக்கும் அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து, கடலோர மண்ணெடுப்பு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுத் தடைசெய்யப்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் கருதி அமையும் துறைமுகத் திட்டங்கள், அதன் அருகமைக் கடற்கரை வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய பிறகே அமைய வேண்டும்.
துறைமுகத் திட்டச் செலவினத்தில் அதன் அருகமைக் கடலோர வாழ்வு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புச் செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் கடலோர வாழ்வு உரிய பாதுகாப்பைப் பெற்று நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் சிறப்பாகப் பங்காற்ற முடியும்.
- ஆர்.என்.ஜோ டி குருஸ் | ‘கொற்கை’ நாவலாசிரியர்,தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com