மகளிர் தினமும் போராட்டங்களும் ஏன் முக்கியம்?

மகளிர் தினமும் போராட்டங்களும் ஏன் முக்கியம்?
Updated on
2 min read

சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் சிறப்புத் தினங்களில் சிலவற்றை அந்நிய இறக்குமதி என்கிற வகையில் விமர்சித்துப் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது; மகளிர் தினம் அவற்றில் ஒன்று. இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பது குறித்து உரத்துப் பேசுவது இதுபோன்ற பழைமைவாதச் சிந்தனைகளிலிருந்து மக்கள் வெளிவர உதவும்.

பெண்களுக்கு வாக்குரிமை, எட்டு மணிநேர வேலை, சங்கம் வைக்கும் உரிமை, உழைப்புக்கேற்ற ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரஷ்யாவில் உழைக்கும் பெண்கள் 1917இல் அணிதிரண்ட மார்ச் 8ஆம் தேதிதான் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெண் தொழிலாளர்கள் கோரிக்கை என்பது, உலகில் உள்ள உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியதுதான்.

இந்தியாவில் பெண்களின் நிலை: இந்தியாவில்பெண்களுக்கு எதிரான எத்தனையோ ஒடுக்குமுறைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தன. ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் போராடியதன் விளைவாக, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1887இல் உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பெண்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு இந்தியச் சமூகம் கல்வியை மறுத்தது. 1848இல் புனேயின் பிடேவாடாவில் முதல் பெண்கள் பள்ளியை ஜோதிராவ் பூலே-சாவித்திரி பாய் தம்பதியினர் இணைந்து தொடங்கினார்கள்; பாத்திமா பேகம் ஷேக் இதில் முக்கியப் பங்காற்றினார்.

தேவதாசி (தேவரடியார்) முறையை எதிர்த்து, தமிழ்நாட்டில் மூவலூர் ராமாமிர்தமும் அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணியச் செயல்பாட்டாளர் ஏமி கார்மைக்கேலும் போராடினர். மதராஸ் சட்டமன்றத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி, தேவதாசி முறையைத் தடைசெய்வதற்கான மசோதாவைக் கொண்டுவர, 1947இல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், பெண்ணுரிமைக்கான பணியைத் தொடர்ந்து செய்திருக்கிறது.

உரிமைக்கான போராட்டங்கள்: ஒடுக்கப்பட்ட பெண்கள், மார்பை துணியால் மறைக்கக் கூடாது எனத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கட்டுப்பாடுகள் இருந்தபோது, அய்யா வைகுண்டர், ஜார்ஜ் ஜோசப் போன்ற தலைவர்கள் இணைந்து முன்னெடுத்த தோள்சீலைக் கலகமானது, இறுதியில் 1859இல் வெற்றிபெற்றது.

1943இல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முதன்முதலில் மாதர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு வைத்த முதல் கோரிக்கை ‘மானங்காப்போம், பஞ்சம் தீர்ப்போம்’ என்பதே. தொழிலாளர்கள் மீது பண்ணையார்களின் கொடுமை, தலித் மக்களின் மீதான சாதிய ஒடுக்குமுறை உள்ளிட்ட கொடுமைகள் நடந்த காலகட்டம் அது.

மணலூர் மணியம்மா, ஜனகம் இஸ்மாயில், பி.வி.சீனிவாசராவ், கே.பி.ஜானகியம்மாள், பார்வதி கிருஷ்ணன், சுந்தரம்மாள் போன்ற தலைவர்கள் கிராமப்புற வர்க்க, சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினர்.

இந்திய மாதர் தேசியக் கூட்டமைப்பு (NFIW) இயக்கத்தின் கீழ் ஏராளமான பெண்கள் அணிதிரண்டனர். இந்தியாவில் முதன்முதலாக1921இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னைமாகாணங்களிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1927இல் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நடத்திய சௌதார் குளப் போராட்டமும், அன்னை மீனாம்பாள் நடத்திய தலித் பெண்களுக்கான மாநாடும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள். பின்னாள்களில் பெண்களுக்கான கல்வி, அரசியல் அதிகாரம், சொத்துரிமை, மறுமணம், உள்ளிட்ட பல சமூகச் சீர்திருத்த ஜனநாயகக் கோரிக்கையைச் சட்டமாக்கித் தந்தவர் அம்பேத்கர். இந்து சட்ட மசோதாவைக் கொண்டுவரப் பாடுபட்டவர்.

ஆதிக்கச் சுரண்டலும் ஆணாதிக்க ஒடுக்குமுறையும் தொடரும்வரை அதற்கு எதிரான போராட்டமும் எதிர்க்குரலும் இந்திய மண்ணில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும் மகளிரின் மகத்துவத்தை உணர்த்தும் மகளிர்தினக் கொண்டாட்டங்களும் தொடரவே செய்யும்!

- ரமணி | தொடர்புக்கு: aruvi1967@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in