

திட்டமிட்ட பொருளாதாரத்தின் ஒருபகுதியாக சுதந்திர இந்தியாவின் மத்திய மாநில அரசுகளின் ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் இருந்து வந்துள்ளன. மாநில அரசின் நிதிநிலை அறிக்கை, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு உள்பட்டு இருக்கும்.
ஆரம்பப் புள்ளி: விடுதலையை நெருங்கிக்கொண்டிருந்த நாள்களில் சுதந்திர இந்தியாவின் பொருளாதாரப் பாதை எப்படி இருக்க வேண்டும் என்கிற விவாதம் தொடங்கியது. தனியார் துறை, பொதுத் துறை இவற்றின் அளவும் பங்கேற்பும் எப்படி இருக்க வேண்டும் என்பது அந்த விவாதத்தின் மையமாக இருந்தது.
1928இல் சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஐந்தாண்டுத் திட்டம் என்கிற வடிவத்தில் பொருளாதார நடவடிக்கைகளைத் திட்டமிடத் தொடங்கி வெற்றிபெற்றிருந்த நேரம் அது.
15 ஆண்டுத் திட்டத்தின் அடிப்படையில் புதிய இந்தியா செயல்படலாம் என, கர்நாடகத்தைச் சேர்ந்த பொறியாளரும் அறிஞருமான விஸ்வேஸ்வரய்யா ஓர் ஆலோசனையை முன்வைக்க, சோவியத் பாணியில் ஐந்தாண்டுத் திட்டத்தையும், அடிப்படைத் தொழில்கள் அனைத்தும் அரசுத் துறையாக இருக்க வேண்டும் எனும் யோசனையையும் ‘மக்கள் திட்டம்’ என்ற பெயரில் பொதுவுடைமை இயக்கத்தின் சார்பாகத் தோழர் எம்.என்.ராய் ஓர் ஆலோசனையாக முன்வைத்தார். இந்திய தேசிய காங்கிரஸ் நேருவின் தலைமையில் பம்பாய் தொழிலதிபர்களான டாட்டா, பிர்லா போன்றோரை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்தது. அக்குழு முன்வைத்த ஆலோசனைகள் ‘பம்பாய் திட்டம்’ (Bombay Plan) என்றும் ‘டாட்டா-பிர்லா திட்டம்’ (Tata-Birla Plan) என்றும் அறியப்பட்டன.
அதிகப் பலன் யாருக்கு? - புதிய சுதந்திர இந்தியாவின் அரசு, பாம்பே திட்டத்தை ஏற்று நடைபோடத் தொடங்கியது. அதன்படி, உடனடியாக லாபம் தரும் தொழில்களெல்லாம் தனியார் துறையிலும் அதிகமான முதலீட்டைக் கோரும் சுரங்கங்கள், அடிப்படைக் கட்டுமானங்கள் எல்லாம் பொதுத் துறையிலும் இருக்கட்டும் எனத்தீர்மானிக்கப்பட்டது.
அந்தப் பொதுத் துறைகளையும் ஏற்று நடத்தும் வல்லமையும் சக்தியும் தனியாருக்கு எப்போது வளர்கின்றனவோ, அப்போது இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார் ஏற்றுக்கொள்ளலாம் என்பதே பாம்பே திட்டத்தின் அடிப்படை.
முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவுற்ற பின்னணியில் (முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-56, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1956-1961) ஏற்பட்டிருந்த பொருளாதார வளர்ச்சி யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதை ஆய்வுசெய்து, பொதுவுடைமை இயக்கத் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, ‘Indian Planning in Crisis’ எனும் நூலை வெளியிட்டார்; பின்னர் ‘Crisis Into Chaos: Political India 1981’ என்கிற நூலையும் வெளியிட்டார்.
சுதந்திர இந்தியாவின் பொருளாதாரம் வளச்சியடைந்தது உண்மைதான். ஆனால், அதன் பலன்கள் எளிய மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை; மாறாகப் பொருளாதார இடைவெளி அதிகரித்துள்ளது; இந்தியாவின் ‘டாப் 20’ முதலாளிகளே இதனால் பயன்பெற்றுள்ளனர் என்பதைப் புள்ளிவிவரங்களோடு அந்நூல்களில் எடுத்துரைத்தார்.
நிதிநிலை அறிக்கைகள் பெரும்பாலும் இந்த ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு உள்பட்டே அமைந்திருந்தன. ஐந்தாண்டுத் திட்டங்களின் திட்ட இலக்குகளை நிறைவேற்றும் கடமை 2014ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய அரசின் நிநிநிலை அறிக்கைக்கு இருந்துவந்தது. 2014இல் மோடி அரசு திட்டக் குழுவே (Planning Commission) தேவையில்லை என்று அதைக் கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ என்கிற ஓர் ஆலோசனை மன்றத்தை உருவாக்கியது.
தமிழ்நாட்டின் நிலை: சமூக நீதி, கல்வி, பெண் கல்வி, அடிப்படைச் சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இந்த இடத்தை அடையும் வகையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைகள் அமைந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்கூட மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 போன்ற பெண்கள் ஆற்றல் பெற உதவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பைச் சீராக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.
சமீபத்தில் ஓர் அரசு ஆரம்பப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். பள்ளி மேலாண்மைக் குழு பற்றிப் பேச்சு வந்தபோது, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை புலம்ப ஆரம்பித்துவிட்டார். ‘‘அதெல்லாம் நகரங்களில்தான் சாத்தியம். இதுபோன்ற குக்கிராமங்களில் அன்றாடம் கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பாடு என்கிற நிலையில் இருக்கும் மக்கள், ஒருநாள் ஊதியம் கொடுத்தால் பள்ளிக்கூடத்துக்கு வருகிறோம் என்கிறார்கள், என்ன செய்வது?” என்று ஆதங்கப்பட்டார்.
பள்ளியைச் சொந்தம்கொண்டாடும் சமூகமாக உள்ளூர் சமூகம் மாற வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துடன் பள்ளி மேலாண்மைக் குழு போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், அவற்றில் பங்கேற்கும் நிலையில் கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்க்கை இல்லை.
அன்றாடம் கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பாடு எனும் நிலையில் வாழ்பவர்கள் அவர்கள். வேளாண் நிதிநிலை அறிக்கை எனத் தனியாக ஓர் அறிக்கை வைக்கப்படும் சூழலில் விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், விவசாயிகளின் கடன் சுமை போன்றவை அரசின் கவனத்தில் இருக்க வேண்டும்.
மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போடுவதுதான் நிதிநிலை அறிக்கையின் சாராம்சமாக இருக்க வேண்டும். பற்றாக்குறை பட்ஜெட் தயாரித்து பற்றக்குறையை ஈடுகட்ட மக்கள்மீது வரியைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
அது பள்ளத்தை மேலும் பள்ளமாக்கும் செயலாக முடியும். கடையருக்கும் கடையராக இருக்கும் ஏழை மக்களுக்குச் சென்றடையும் வகையில் நிர்வாக அமைப்பும் ஊழலற்றதாக, செயல்படக்கூடியதாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
- ச.தமிழ்ச்செல்வன் | எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்; தொடர்புக்கு: tamizh53@gmail.com