

சங்க இலக்கியங்களை அதிகமாக மொழி பெயர்த்த அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி. 13 நூல்களை மொழிபெயர்த்துள்ளார்; இரு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகவில்லை. ஆக 15 சங்க இலக்கிய நூல்களை மொழிபெயர்த்த ஒரே பேராசிரியர் தட்சிணாமூர்த்திதான். இவரது இப்பணிக்காக, சாகித்திய அகாடமி நிறுவனம் ‘பாஷா சம்மான்’ விருதை அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான விருது இது. இதற்கு முன் இவ்விருதை பேராசிரியர்கள் கா.மீனாட்சிசுந்தரம் (2013),
ச.வே.சுப்பிரமணியன் (1999) ஆகியோர் பெற்றுள்ளனர். சாகித்திய அகாடமி வழங்கும் விருதுகளில் இதுவே முதன்மையானது. சாகித்திய அகாடமி தலைவரும் செயலாளரும் பரிசு பெறும் அறிஞர் இருக்கும் இடத்துக்கே வந்து இவ்விருதை வழங்குவர்.
மொழியாக்க அறிஞர்
தமிழாசிரியராக இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது தட்சிணாமூர்த்தியின் சிறப்பு. ஆங்கிலத்தை முதல் மொழியாகப் பயின்றவர்கள் மட்டுமே பரவலாக மொழியாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழை முதல் மொழியாகக் கொண்டு மொழியாக்கத்தில் ஈடுபட்டு, சாதனை படைத்தவர்களில் தட்சிணாமூர்த்திக்கு முதன்மையான இடமுண்டு. செவ்விலக்கியப் பிரதிகள் குறித்த ஆழங்காற்பட்ட ஆய்வு, அதில் தோய்ந்து, அதன் பல பரிமாணங்களையும் உணர்ந்து மொழிபெயர்க்கும் வாய்ப்பு இவருக்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அகநானூறு (1999), நற்றிணை (2001), குறுந்தொகை (2007), பத்துப்பாட்டு (2012) ஆகிய நூல்களை மொழிபெயர்க்கும்போது, கவிதை வடிவத்தில் மொழியாக்குவது, உரைநடை வடிவத்தில் செய்வது என்ற இரண்டு அடிப்படைகள் உண்டு. இவர் எட்டுத்தொகை நூல்களைக் கவிதை வடிவிலும் பத்துப்பாட்டை உரைநடை வடிவிலும் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்களை இதற்கு முன் மொழிபெயர்த்துள்ளவர்களின் பிரதிகளை எல்லாம் வாசித்து, அதில் நிகழ்ந்துள்ள பொருள்திரிபுகளைச் சுட்டிக்காட்டி, தனது மொழியாக்கத்தில் அவற்றை எவ்வாறு சரிசெய்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இவரது மொழிபெயர்ப்பு என்பது ஆய்வு நோக்கில் செய்யப்பட்டது. அத்தன்மைகளை முன்னுரையில் விரிவாகக் கொடுத்துள்ளார். அகநானூற்றுப் பிரதியை முழுமையாக முதன்முதலில் மொழிபெயர்த்தவர் இவர். மொழிபெயர்ப்புப் பணியைத் தவமாகக் கருதி சங்கப் பிரதிகளை மிகுதியாக மொழிபெயர்த்த பெருமை இவரைச் சாரும்.
செவ்விலக்கியப் பிரதிகளில் ஈடுபாட்டுடன் செயல் பட்டதோடு, நவீனப் பிரதிகளை மொழிபெயர்ப்பதிலும் அக்கறை செலுத்தியுள்ளார். பாரதிதாசன் நூல்களை மிகுதியாக இவரைத் தவிர வேறு எவரும் மொழிபெயர்க்கவில்லை. சாகித்திய அகாடமிக்காக அறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய ‘கம்பன்: ஒரு புதிய பார்வை’ எனும் நூலையும் மொழிபெயர்த்துள்ளார்; பக்தி இலக்கியங்கள் சிலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.
சங்க இலக்கிய நூல்களைப் போலவே ஆறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் 32 தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பெரும் சாதனை படைத்திருக்கிறார். இவரைச் சாகித்திய அகாடமி சரியாகவே இனம் கண்டு கௌரவித்துள்ளது.
சங்க இலக்கிய உரையாசிரியர்
ஐங்குறுநூறு பிரதிக்கு தட்சிணாமூர்த்தி எழுதிய உரைக்கு இணையான இன்னொன்றைச் சொல்ல முடியாது. ஐங்குறுநூறு உரை, ஔவை சு.துரைசாமிப் பிள்ளை போன்றவர்கள் இந்நூலுக்கு எழுதிய உரைகளை ஒப்பிட்டு இவர் உரை எழுதியுள்ளார். இந்நூலின் தனித்தன்மைகளைச் சுட்டிக்காட்டி உரை எழுதியுள்ளார். தமது உரையை இவர் புத்துரை என்று குறிப்பிடுகிறார். இவ்வுரை எந்தப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு எழுதுகிறார் என்பதையும், முன்னர் வந்த உரைகளில் எந்தெந்தப் பகுதியை உள்வாங்கிக் கொண்டார் என்பதையும் நேர்மையாகப் பதிவுசெய்துள்ளார். எனவே இவர் உரையாக்கம் என்பது ஆய்வோடு இணைந்த உரையாக அமைந்திருப்பதைக் காண முடியும். மூவரோடு இணைந்து உருவான பரிபாடல் உரையில், இவர் நான்கு பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். உரை முழுவதற்கும் இவர் எழுதியுள்ள முன்னுரை பல அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது.
சங்க இலக்கிய ஆய்வாளர்
இவரது முனைவர் பட்ட ஆய்வு, ‘சங்க இலக்கியம் உணர்த்தும் மனித உறவுகள்’ எனும் பொருளில் அமைந்தது. சங்க காலச் சமூக அமைப்பு பற்றி பேராசிரியர் க.கைலாசபதி செய்துள்ள ஆய்வு மரபைத் தான் தொடர்வதாகப் பதிவுசெய்கிறார். மனிதக் கூட்டத்தில் உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன, இதில் சங்கப் பிரதிகள் மூலம் அறியவரும் உறவு முறைகள் எத்தகையன என்பது இவரது ஆய்வு. ஆண்-பெண், காதலன்-காதலி, கணவன்-மனைவி, தலைவன்-பரத்தை ஆகிய உறவுநிலைகளைச் சங்கப் பாடல்கள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பது குறித்த சமூகவியல் ஆய்வாக இவரது ஆய்வு அமைந்துள்ளது. இதைப் போல கலைஞர்-வள்ளல், வேந்தர்-குறுநில மன்னர் என்ற மரபுகள் குறித்தும் இவர் ஆய்வுசெய்துள்ளார்.
இவரது ஆய்வுக் கட்டுரைகள் ஐந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சுமார் 100 கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சங்க இலக்கியப் புலவர்கள் பற்றிய குறிப்புகள், தொகுப்பு மரபு தொடர்பான உரையாடல்கள், பாடவேறுபாடுகள் ஆகிய பல துறைகள் குறித்த விரிவான ஆய்வுகளாக இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன.
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்
தட்சிணாமூர்த்தியின் புகழ்பெற்ற நூல் ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’. தமது ஆசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரத்துக்குக் காணிக்கையாக்கப்பட்ட இந்நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. பேராசிரியர், அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர். இவரது ஆய்வுகள் அனைத்தும் பண்பாட்டுக் கூறுகள் குறித்து விரிவாகப் பேசுபவை. இவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றைப் பேசுவதாக மேற்குறித்த நூல் அமைந்துள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இது அடிப்படை நூல். தமிழக வரலாறு, தமிழ்ப் பண்பாட்டு வரலாறு ஆகிய துறைகள் குறித்த பல்வேறு நுணுக்கமான தகவல்களைக் கொண்டது இந்நூல். இந்நூல் தமிழ்நாட்டின் வெகுசனத் தளத்தில் இவரை அறிமுகப்படுத்தியுள்ளது. 35ஆவது வயதில் இவர் எழுதிய இந்நூல், இன்றைய அவருடைய 85ஆவது வயதிலும் உயிர்ப்புடன் பேசப்படுகிறது.
முப்பத்து நான்கு ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தவர். இவரது மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார்கள். பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் இவருடைய மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இளநிலை தாவரவியல் பயின்றேன். அப்போது இவர் எனக்குத் தமிழாசிரியர். இவருடைய நேரடித் தாக்கத்திற்குட்பட்ட நான், முதுகலை தமிழ் படிக்கத் தொடங்கினேன். இவரால்தான் நான் தமிழ் மாணவன் ஆனேன். இவருடைய ஆசிரியத்துவத்தின் ஆற்றல், என்னைப் போல் பலர் மாணவர்களைப் புலமையாளர்களாக வடிவமைத்துள்ளது. மதுரைச் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராகப் பணியேற்று அந்நிறுவனம் புதிய பார்வையில் வளர கால்கோளிட்டவர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெடுவாக்கோட்டை என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் முதல் தலைமுறை பட்டதாரி. சிறந்த ஆசிரியர், தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றாசிரியர், செவ்விலக்கியப் பிரதிகளை நுண்மையாகப் பயின்றவர், சங்கப் பிரதிகள் குறித்த ஆய்வாளர், உரையாசிரியர், செவ்விலக்கியப் பிரதிகளை மொழிபெயர்த்தவர். இவரின் இந்த அரும் பணிகளுக்காக சாகித்திய அகாடமி ‘பாஷா சம்மான்’ விருது வழங்கியுள்ளது.
- வீ.அரசு
தமிழ்ப் பேராசிரியர்
தொடர்புக்கு: arasuveerasami@gmail.com