எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்: நிழலும் நிஜமும்

எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்: நிழலும் நிஜமும்
Updated on
3 min read

ஆஸ்கர் விருது பெற்றுள்ள ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தைத் தமிழ்நாடே கொண்டாடிவருகிறது. இவ்வளவு காலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்த காட்டுநாயக்கன் பழங்குடிகளின் வெற்றி இதுவென்றும், ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரித்தவரும் பெண்கள் என்பதால் பெண்களின் வெற்றி என்றும் பேசப்படுகிறது.

இந்த ஆவணப்படத்தில் தாயையும் தன் மந்தையையும் இழந்த இரண்டு யானைக் கன்றுகளை பொம்மன், பெள்ளி என்கிற பழங்குடித் தம்பதி வளர்க்கிறார்கள். அரசு வனத்துறை சார்பில் முதுமலை தெப்பக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் முகாமின் பணியாளர்கள் என்கிற வகையில், இந்த யானை பராமரிப்புப் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ரகு, அம்மு என்கிற அந்த இரண்டு யானைக்கன்றுகளுடன் அவர்களுக்கு உள்ள நெருக்கமான உறவுதான் இந்தப் படத்துக்கான அடிப்படை. இந்தப் படத்தை இயக்கியவர் ஊட்டி/மும்பையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ்.

காட்டு யானைகள், பழங்குடிகள், காட்டுயிர் அறிவியல் போன்றவற்றோடு பெரிய பரிச்சயம் இல்லாதவர்களை இந்த ஆவணப்படம் கவர்வதற்கு அதிக சாத்தியம் உண்டு. வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதுபோலவும் பரஸ்பரம் அன்பைப் பொழிந்துகொள்ளும் வகையிலும் பேருயிர்களான யானைகளுடனும் மனிதர்கள் நல்ல உறவை பேண முடியும் என்பதை இந்தப் படம் முன்வைக்கிறது. சட்டென்று உணர்ச்சிவசப்படக்கூடிய, இயல்பாகப் பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய நமது சமூகத்தில் இந்தப் படம் கவனம்பெற்றதில் ஆச்சரியமில்லை.

முகத்தில் அறையும் பிரச்சினைகள்

யானை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல. பழங்குடிகளின் மரபு அறிவுக்கு அதில் பெரும்பங்கு உண்டு. இன்றைக்கும் காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள், வனத் துறையினருக்குப் பழங்குடிகளே களத்தில் உதவிவருகிறார்கள். காடு, உயிரினங்கள் குறித்த கூருணர்வு, ஆபத்தை முன்பே உணர்வது-கையாள்வது சார்ந்த அவர்களுடைய மரபு அறிவே இதற்குக் காரணம். இந்த மரபு அறிவு இன்னும் முழுமையான அங்கீகாரத்தைப் பெறவில்லை. படம் இதை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. வனத்துறையில் யானைகளைப் பராமரிக்கும் பணி ஒரு பெண்ணுக்குத் தரப்பட்டுள்ளதன் முக்கியத்துவம் பெள்ளி வழியாக இந்தப் படத்தில் பதிவாகியுள்ளது. பழங்குடிகள் மூலமாகக் காடுகளைக் காப்பாற்ற முடியும் என்கிற அம்சமும் வெளிப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆக்கபூர்வமான அம்சங்கள் என்று இவற்றைச் சுட்டிக்காட்டலாம்.

ஏற்கெனவே பழக்கப்படுத்தப்பட்ட யானைகளுக்கும் ஆதரவற்ற யானைக் கன்றுகளைப் பராமரிக்கவும் முகாம்கள் தேவைதான். ஆனால், காட்டு யானைகள் சார்ந்து இந்தப் படம் முன்வைக்கும் சித்திரம் ஒரு முகம்தான். இதுவே முற்று முழுதானதல்ல. மற்றொருபுறம் காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளி இதுவரை இல்லாத வகையில் தீவிரமடைந்துவருகிறது. காட்டுப் பகுதிகளை, யானை வழித்தடங்களை நாம் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டு, யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாகத் தவறாக அடையாளப்படுத்திவருகிறோம். அந்தக் கற்பிதத்தை இந்தப் படம் பெரிதாக அசைக்கவில்லை.

யானைகளுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 150 கிலோ தாவர உணவு, 200 லிட்டர் தண்ணீர் தேவை. இதற்காகக் காலம்காலமாக நடந்து பழகிய தங்கள் வழித்தடங்களுக்கு அவை திரும்புகின்றன. இரை, தண்ணீர் பற்றாக்குறை அவற்றின் மீது திணிக்கப்படும்போதும், தடங்கள் அடைக்கப்படும்போதும் ஊருக்குள்ளும் வயல்களுக்குள்ளும் நுழைகின்றன. இப்படி வரும்போது மின் வேலியிட்டு, நஞ்சு வைத்து, ரயில் தடம் அமைத்து அவற்றைச் சாகடிக்கிறோம்.

இந்த வகையில் தாயையும் மந்தையையும் இழந்தவைதான் ரகு, அம்மு யானைக் கன்றுகள். ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட அதே வாரத்தின் தொடக்கத்தில், தர்மபுரி மாவட்ட வயல் ஒன்றில் மின்வேலியைத் தொட்டதால் மூன்று யானைகள் பலியாகியுள்ளன. இந்த நிகழ்விலும் இரண்டு யானைக் கன்றுகள் ஆதரவற்றதாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மின் வேலியால் மின்சாரம் தாக்கி 89 யானைகள் பலியாகியுள்ளன. பிரச்சினை இவ்வளவு தீவிரமாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினைகள் ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் கவன எல்லைக்குள் வரவில்லை.

விருதும் பின்னணிக் காரணங்களும்

இந்த முறை ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் ஷௌனக் சென் இயக்கிய ‘ஆல் தட் பிரீத்ஸ்’ நெடிய ஆவணப்படமும் குறும்பட்டியலுக்குத் தேர்வாகியிருந்தது. டெல்லியில் காற்று மாசுபாட்டால் உருவாகும் கருமேகங்களைத் தாண்டி வானத்தில் பறக்க முடியாமல் கீழே விழுந்து காயமடையும் பறவைகளைக் காப்பாற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் இருவரைக் குறித்த படம் இது. கான் திரைப்பட விழா ‘தங்கக் கண்’ விருதை அப்படம் பெற்றிருக்கிறது. உலக சினிமாவின் உச்ச விருதாக மதிக்கப்படும் அதை இந்தப் படம் பெற்றபோது, இந்திய ஆவணப்படத் துறையினரைத் தவிர வேறு யாரிடமும் எந்தச் சலனத்தையும் காண முடியவில்லை.

உண்மையில் ஆஸ்கர் விருது அமெரிக்கத் திரையுலகத்துக்குக் கொடுக்கப்படும் விருது மட்டுமே. சமீபகாலமாக உலகை வரித்துக்கொள்ள அந்த விருது பல்வேறு அம்சங்களைக் கையாண்டுவருகிறது. அழகிப் போட்டிகள் நடத்தி இந்தியாவில் அழகுப் பொருள்கள், ஆடை அலங்காரம், அழகுபடுத்திக்கொள்ளுதல் சந்தை எப்படிக் கைப்பற்றப்பட்டதோ, அதேபோன்ற ஒரு பின்னணி ஆஸ்கர் விருதுகளுக்கும் உண்டு. தென்கொரியப் படங்கள் குறும்பட்டியலுக்குத் தேர்வானது, ‘பாரசைட்’ திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்ற பிறகு, அந்நாட்டுத் திரைப்படச் சந்தையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடத்தை ஹாலிவுட் திரைப்படங்கள் பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய அளவில் 10 சதவீதச் சந்தையை மட்டுமே ஹாலிவுட்டால் இதுவரை பிடிக்க முடிந்திருக்கிறது. எனவே, ஹாலிவுட் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கமும் ஆஸ்கர் விருதுகளில் உண்டு. ஒருபுறம் தாராளவாதம், உலகமயத்தை எதிர்க்கிறோம். மறுபுறம் ஆஸ்கர் விருதுகளைக் கொண்டாடுகிறோம் என்றால், எங்கே இருக்கிறது பிழை?

அதேபோல் ஆஸ்கர் விருதுத் தேர்வு நடைமுறை, அதற்கு ஆதரவு திரட்டுதல் மிகவும் செலவுபிடிக்கக் கூடியது. மெக்சிகன் திரைப்படமான ‘ரோமா’ 2019இல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டபோது, அதற்கான ஆதரவைத் திரட்ட நெட்பிளிக்ஸ் 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்தது. இப்போது ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருதுபெறவும் பல கோடிகள் செலவுசெய்யப்பட்டிருக்கும். ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ தயாரிப்பாளர் குனீத் மோங்கா, மாதவிடாய் தொடர்பான ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ படத்தின் தயாரிப்பாளராக ஏற்கெனவே 2019இல் ஆஸ்கர் ஆவணப் பட விருது பெற்றவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அறிவியல்பூர்வ தீர்வுகள்

நகர்ப்புற மக்கள் யானைகளையும் பழங்குடிகளையும் ஆச்சரியமாகப் பார்க்கும் பிம்பத்தை ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் வலுப்படுத்துகிறது. காடழிப்பு, காட்டுயிர்கள் கொல்லப்படுதல் - துன்புறுத்தப்படுதல் சார்ந்து நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒருவிதக் குற்ற உணர்வு நகர்ப்புறவாசிகளுக்கு இருக்கிறது. அந்தக் குற்ற உணர்வுக்குத் தீர்வு தேட முயல்வதைவிட, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைப்பதே பொதுவான போக்காக இருக்கிறது. ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ போன்ற படங்கள் வெற்றிபெறுவதற்கும் பொது வரவேற்பை எளிதாகப் பெறுவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

அதே நேரம், நடைமுறையில் மனிதர் – யானை எதிர்கொள்ளல் பிரச்சினை சார்ந்து செயல்படும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும் நம்மிடையே செயல்பட்டுவருகிறார்கள். இரு தரப்புக்கும் சேதமில்லாமல் பிரச்சினையைக் கையாள்வதற்கு என்.சி.எஃப். அறக்கட்டளையைச் சேர்ந்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் வால்பாறைப் பகுதியில் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகிறார்கள். யானைகள் ஊருக்குள் வருவதைக் குறைக்கவும் மீறி யானைகள் வந்தால் மனிதர்கள் தற்காத்துக்கொள்வதற்குமான அறிவியல்பூர்வ நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும். இந்தச் செயல்பாடுகளுக்காக மதிப்புமிக்க ‘வைட்லி விருது’ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றையும் ‘ரொமான்டிசைஸ்’ செய்யும் தன்மை பார்ப்பதற்கும், படமெடுக்கவும் அழகாக இருக்கலாம். ஆனால், அவை நெடுங்காலத்துக்கு நீடிக்கும் அறிவியல்பூர்வமான பலன்களைத் தருமா என்கிற கேள்வியின் அடிப்படையிலேயே பிரச்சினைகளை அணுகுவது நல்லது. எனவே, ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ வழியே ஒருவர் காட்டுயிர் உலகத்தை அறிய முற்பட்டாலும் அதைத் தாண்டி புரிந்துகொள்ள வேண்டிய பிரச்சினைகள் அதிகமுள்ளன. அதை உள்வாங்கிக்கொண்டு காடுகள், காட்டுயிர்கள் சார்ந்த பிரச்சினைகளை அணுகுவதே நிரந்தரத் தீர்வை நோக்கிய பயணமாக அமையும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in