மறுவாழ்வு மையங்களில் மனித உரிமை மீறல்கள்

மறுவாழ்வு மையங்களில் மனித உரிமை மீறல்கள்
Updated on
3 min read

விழுப்புரம் அருகேயுள்ள காப்பகம் ஒன்றில் நடந்த மனித உரிமை மீறல்களும், பாலியல் வன்கொடுமைகளும் சில வாரங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தன. ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்த அந்தக் காப்பகத்தில், அவர்கள் மீது மோசமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாகச் செயல்படும் அந்தக் காப்பகம், பதிவு செய்யப்படாமல், முறையான எந்த அனுமதியும் இன்றி இயங்கிவந்திருக்கிறது. அங்கு சேர்க்கப்பட்டவர்களில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள்.

பலரைப் போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றும் முயற்சிகளும் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின்றன. கணிசமானோர் வெவ்வேறு முகாம்களுக்கு யாருக்கும் எந்தவிதத் தகவல்களும் தெரியப்படுத்தாமல் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

அலட்சிய மனோபாவம்: தமிழ்நாடு முழுவதும் இது போன்ற ஏராளமான காப்பகங்கள் இருக்கின்றன. முறையான அங்கீகாரமோ அனுமதியோ இல்லாமல் செயல்படும் காப்பகங்களைக் கணக்கெடுத்தால் நூற்றுக்கணக்கில் இருக்கக்கூடும். விழுப்புரத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் அனைத்தும் பெரும்பாலான காப்பகங்களில் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சென்னையைச் சுற்றி மட்டுமே நூற்றுக்கணக்கான போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை முறையாகப் பதிவுசெய்யப்படாதவை அல்லது பெயரளவுக்குச் சில நடைமுறைகளை மட்டும் காட்டி அனுமதி வாங்கப்பட்டவை. பெரும்பாலான மறுவாழ்வு மையங்களை நடத்துபவர்கள் அதற்கென்று உள்ள எந்தக் கல்வித் தகுதியும் பயிற்சியும் பெறாதவர்கள்.

இப்படியான சூழலில், அங்கு அடிப்படை வசதிகளோ முறையான சிகிச்சைகளோ வழங்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல், அந்த மையங்களில் கொலைகள், தற்கொலைகள், வன்முறை என ஏதேனும் அசம்பாவிதங்கள் எப்போதும் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றது.

அந்தந்த நேரங்களில் மட்டுமே அவர்களுக்காக நாம் பரிதாபப்பட்டுவிட்டு, இந்தச் சம்பவங்களை எளிதாகக் கடந்துவிடுகிறோம். ஒரு மருத்துவமனையிலோ கல்வி நிறுவனத்திலோ இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது கொதித்தெழும் நாம் இப்படிப்பட்ட காப்பகங்களில், மறுவாழ்வு மையங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஏன் கண்டுகொள்வதில்லை?

இதற்கெல்லாம் என்ன தீர்வு? உலகம் முழுவதும் முதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, இந்திய மக்கள்தொகையில் அடுத்த பத்தாண்டுகளில் கணிசமானவர்கள் முதியவர்களாகத்தான் இருப்பார்கள். அதேபோல, சமீப காலத்தில் போதைப் பழக்கங்களும் மனநோய்களும் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன.

அதே நேரத்தில், இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளோ, மறுவாழ்வு மையங்களோ மிகக் குறைவு. மருத்துவத் துறையில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டிலேயே இதுதான் நிலைமை.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ‘மனநல மருத்துவ பராமரிப்புச் சட்டம்’ (Mental Health Care Act 2017) மனநலச் சேவைகளுக்கான மையங்களை முறைப்படுத்தும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மனநலச் சேவை வழங்கும் மையங்களைப் பொதுவாக, ‘மனநலச் சேவை நிறுவனம்’ (Mental Health Establishment) என இச்சட்டம் வகைப்படுத்தியிருக்கிறது. இந்த மையங்களில் நோயாளிகளைச் சேர்ப்பது, சிகிச்சையளிப்பது, நோயாளிகள் வீடு திரும்புதல் போன்ற நடைமுறைகளுக்கான பல்வேறு வழிகாட்டுதல்களை இந்தச் சட்டம் கொடுத்திருக்கிறது.

மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளையும், மறுவாழ்வு மையங்களையும் இந்தச் சட்டம் ஒன்றாகவே கருதுவதுதான் இதில் முக்கியப் பிரச்சினை. இச்சட்டத்தின்படி, நோயாளிகள் தாமாகவே சேர விரும்பினால் போதும், யார் வேண்டுமானாலும் இந்த மையங்களில் நோயாளிகளைச் சேர்க்கலாம்; எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

சிகிச்சை அளிப்பதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை. இதனால் ஏராளமான நோயாளிகள் எந்தச் சிகிச்சையும் இல்லாமல் நீண்ட நாள்கள் இந்த மையங்களில் அடைத்துவைக்கப்படுகிறார்கள். அங்கு நடக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் யாருடைய கவனத்துக்கும் வராமல் போய்விடுகின்றன.

செய்ய வேண்டியவை: மனநல மருத்துவப் பராமரிப்புச் சட்டம் தொடர்பான நமது மாநில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இன்னும் அரசிதழில் வெளியாகவில்லை. அப்படி விதிகளை வகுக்கும்போது தமிழ்நாடு அரசு கீழ்க்கண்டவற்றைப் பரிசீலிக்கலாம்:

மனநோய்கள், போதை-குடிநோய்களுக்கான சிகிச்சையில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. முதல்நிலை, மனநோயைக் குணப்படுத்துவது, குடியினால் உண்டான உடல்-உளவியல்ரீதியான பாதிப்புகளுக்குச் சிகிச்சையளிப்பது. இரண்டாவது நிலை, சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வு. அதற்கான பயிற்சியை அளித்து அவர்களைச் சமூகத்தோடு இணைப்பது.

முதல்நிலை சிகிச்சையை மருத்துவமனையில் மட்டுமே செய்ய முடியும். இரண்டாம் நிலையை மறுவாழ்வு மையங்கள் வழியாக ஒருங்கிணைக்கலாம். அதனால், மனநலச் சேவை நிறுவனங்களை மனநல மருத்துவமனைகள் (Mental Hospital), மறுவாழ்வு மையங்கள். (Rehabilitation centers) என இரண்டாகப் பிரிக்க வேண்டும்.

எந்தவொரு மனரீதியான பாதிப்புக்கும், போதை-குடிநோய் சிகிச்சைக்கும், முதியவர்களின் புத்திசுவாதீனப் பிரச்சினைகளுக்கும் முதலில் மனநல மருத்துவமனைகளிலேயே நோயாளிகள் சேர்க்கப்பட வேண்டும். இந்த மருத்துவமனைகள் மனநல மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சிறிய மனநல மருத்துவமனைகளைத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஏற்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல், தனியார் பங்களிப்போடு சிறிய மனநல மருத்துவமனைகள் தொடங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

மறுவாழ்வு மையங்களைப் பொறுத்தவரை அரசுசாரா நிறுவனங்களின் பங்கேற்பை இந்தத் துறைகளில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், சமூகநலன் தொடர்பான தங்களின் பங்களிப்பை உறுதிசெய்த நிறுவனங்கள், முறையான சமூகநலன், உளவியல் நலன் சார்ந்த கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களை உள்ளடக்கிய, அடிப்படை வசதிகள் போதுமான அளவு இருக்கக்கூடிய மையங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்.

நீண்ட நாள்கள் இருக்கும் நோயாளிகளின் குடும்ப, பொருளாதாரச் சூழலைப் பரிசீலித்து அவர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

மனநோய்களுக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை நாம் பெருமளவு முன்னேறியிருக்கிறோம். நவீன மருத்துவத்தில் ஆரம்பநிலையிலேயே தொடங்கப்பட்ட முறையான சிகிச்சையால் அனைத்து மனநோய்களையும் முழுமையாகக் குணப்படுத்த முடியும். முழுமையாக மீண்ட மனநோயாளிகளைச் சமூகத்துடன் ஒருங்கிணைப்பதன் வழியாக அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் முடியும்.

எனவே, நீண்ட நாள்கள் அவர்களை அடைத்து வைப்பதற்கான தேவையே இல்லை. மனநோய்களுக்கான சேவைகளையும் அதற்கான மருத்துவமனைகளையும் பரவலாக்குவதன் மூலம், அவர்களைப் பராமரிப்பதற்கான ஆசிரமங்களையும், நீண்ட நாள் காப்பகங்களையும் நம்மால் நிரந்தரமாக மூட முடியும். அப்படித்தான் அங்கு நடக்கும் மனிதத்தன்மையற்ற கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

- சிவபாலன் இளங்கோவன் | பேராசிரியர், மனநல மருத்துவர்; தொடர்புக்கு: sivabalanela@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in