

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம், குழுவின் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மார்ச் 3 அன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘காலநிலை அறிவு இயக்கம்’ விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக இக்கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்தார்.
அரசின் முன்னெடுப்புகள்: இன்றைய உலகின் முதன்மைப் பிரச்சினையான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறது. 2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான காலநிலைத் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கென ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘காலநிலை ஸ்டுடியோ’ (பல்துறை சார்ந்த காலநிலை ஆராய்ச்சி அமைப்பு) அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கெனத் தனித்துவ மாதிரிகளை உருவாக்கவும், அதற்கான ரேடார்களை நிறுவவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு, திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் உயிர்ப்பன்மையைப் பேணவும் பனைமரங்கள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை ஒருங்கிணைக்க நாட்டிலேயே முதல் முறையாகத் ‘தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் குழு: தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்கும் செயல்திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கவும், முதலமைச்சர் தலைமையிலான ‘காலநிலை மாற்ற நிர்வாகக் குழு’ 2022 அக்டோபரில் அமைக்கப்பட்டது.
இக்குழுவில், பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, ஐ.நா.வின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் எரிக் எஸ்.சோல்ஹைம் உள்ளிட்டோர் சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், அரசின் தலைமைச் செயலர், மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர், தொழில், நகராட்சி நிர்வாகம், நிதி, எரிசக்தி, ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம் ஆகிய துறைகளின் செயலர்கள் குழு உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் சுற்றுச்சூழல் துறைச் செயலர் செயல்படுகிறார்.
‘காலநிலை அறிவு இயக்கம்’: காலநிலை நிர்வாகக் குழு தன் குறிக்கோளை எட்டுவதற்கான செயல்முறைகளை வகுத்துக்கொள்ளும் நோக்கில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் முறையாகக் கூடிய நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன; முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகிறது என்பதைச் சில மாதங்களில் அறிவியல்பூர்வமாக அரசு வெளியிடவிருக்கிறது. அதை இக்குழு ஆய்வுசெய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 2070ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 கிராமங்களை மீளும் தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டத்தை இக்குழு தொடங்கியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘காலநிலை அறிவு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிற செயல்பாடுகள்: 2022 டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்; தமிழ்நாட்டில் இயற்கை-காலநிலை மாற்றம் சார்ந்த துறை வல்லுநர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இரண்டு மாத காலத்தில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க ஆவண’மும் அப்போது வெளியிடப்பட்டது.
75 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தில், காலநிலை மாற்றத்தின் தற்போதைய நிலை, தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கடற்கரைகளுக்கான நீலக்கொடிச் சான்றிதழ் திட்டம், திறன்மிகு கிராமங்கள் திட்டம், பசுமைப் புத்தாய்வுத் திட்டம் உள்ளிட்டவை தகுந்த ஆதாரங்கள், புள்ளிவிவரங்களுடன் விரிவாகஎடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆவணத்தின் முக்கிய அம்சமான ‘பசுமைப் பள்ளி’ திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்குத் தலா ரூ.20 லட்சம் என்கிற அடிப்படையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காலநிலை நிதி: இந்தியாவிலேயே முதன்முறையாக, காலநிலை மாற்றம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி திரட்டும் வகையில் ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதி’யைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிதி, காலநிலை மாற்றம் சார்ந்த பல்வேறு முயற்சிகள், தணிப்பு, பசுமைப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேசக் காலநிலை நிதி போன்றவற்றிலிருந்து தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நிதிக்குத் திரட்டப்படும்.
தொகுப்பு: சு.அருண் பிரசாத்