

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளால் ஏற்படும் தீமைகள் குறித்துத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில்கூட வட இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தின. இந்த அவலத்தைத் தடுக்கும் ஆயுதம் நம் கைகளில்தான் இருக்கிறது.
ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே வதந்திகளைப் பரப்புவதில் புளகாங்கிதம் அடைகின்றனர். இது சமூக விதிமுறைகளுக்குப் புறம்பான செயல் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
ஆனால், இயல்பான நடத்தையைக் கொண்டிருக்கிற மீதமுள்ள 99% பேரில் பலர் அந்த வதந்தியைச் சரி என நம்பி, அதை நண்பர்களுக்கு அவசரமாகப் பகிர்ந்துகொள்வதுதான் ஆபத்தானது.
சமூக வலைதளங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 2022 அக்டோபர் மாதம் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்தது.
அதன்படி எந்தவொரு சமூக வலைதளத்திலும் போலிச் செய்திகள், வதந்திகள், அவதூறுகள் போன்றவற்றை யார் முதலில் பதிவேற்றம் செய்தார்கள் என்பதை அந்தந்தச் சமூக வலைதள நிறுவன உரிமையாளர்கள் கண்டறிந்து, அரசுக்குச் சொல்ல வேண்டும்; சம்பந்தப்பட்ட பதிவரின் பெயர், அடையாளத்தைக் கண்டறிவதற்காக மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில் அதிகபட்ச அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் அல்லது மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.
பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்பவர்களுக்கு, சட்டப்படி தண்டனை வழங்குவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்படும்போது, அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து, சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஊகித்து, உடனடியாக நீக்க வேண்டியது சமூக வலைதள நிறுவனத்துக்கு உள்ள பொறுப்பு.
சில தருணங்களில் - கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் - அப்படியான பதிவுகள், காணொளிகள் நீக்கப்படுகின்றன. ஆனால், நீக்கப்படுவதற்கு முன்பு ஏராளமானோருக்கு அந்த வதந்தி பரவிவிடுகிறது. அது வெவ்வேறு வடிவங்களில் இன்னும் பலரைச் சென்றடைந்துவிடுகிறது.
பதிவுகளை நீக்கும் நடவடிக்கைகளைத் துரிதமாகச் செய்ய சமூக வலைதள நிறுவனங்கள் முன்வர வேண்டும். சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்து ஆராய்ந்து அவை உண்மையா, பொய்யா என அறிவிக்கும் உண்மையறியும் தளங்கள் (Fact Checking sites) செயல்படவே செய்கின்றன. அதுபோன்ற நிறுவனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கி, போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க முன்வர வேண்டும்.
சில இணையதள - காணொளி ஊடகங்கள், பரபரப்பை உருவாக்கும் நோக்குடன் சமூகப் பொறுப்பின்றிக் காணொளிகள், பேட்டிகளைப் பதிவேற்றம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை மேம்படுத்திக்கொள்வது அவசியம்தான்.
அதேவேளை, நவீனத் தொழில்நுட்பக் கருவிகளையும் இணையதள வசதிகளையும் சமூகப் பொறுப்புடன் நாம் கையாள்வதும் அவசியம். ஒவ்வொரு பதிவும் மற்றவர்களின் மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது, சமூகத்தில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியெல்லாம் சிந்தித்து, அதற்கேற்ப ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்!
- அ.இருதயராஜ் | பேராசிரியர், லயோலா கல்லூரி தொடர்புக்கு: iruraj2020@gmail.com