

ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்பது சமகாலப் புவியியல் சகாப்தத்தைக் குறிக்கும் சொல். ‘மானுடச் செயல்பாடுகள் புவியியலைப் பாதிக்கும் காலகட்டம்’ என்பது இதன் பொருள். ஹோலோசீன் என்கிற வெப்பநிலைக் காலகட்டத்தைச் சமகாலத்தில் குறிப்பதற்கான சரியான சொல் இதுவே என அறிவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதன் சுருக்கமான, மையமான பொருள் என்னவென்றால், முதலீட்டிய உற்பத்தி முறையினால் அதிகரிக்கும் மானுட எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவை காற்றில் கரியமில வாயுவின் அளவை அதிகரிப்பதால், பசுங்குடில் (greenhouse) போன்ற வளிமண்டலத்தில் சூரிய வெப்பம் சிறைபட்டுப் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்துவருகிறது என்பதே ஆகும். இது சூழலியல் சிதைவுக்கு, உயிர்களின் அழிவுக்கு, குறிப்பாக மானுட அழிவுக்கு இட்டுச்செல்லும் என்றே பெரும்பாலோர் கருதுகிறார்கள்.
உலகின் தேசிய அரசுகள் அனைத்தும் புவி வெப்பமடைகிறது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்வதுடன், வெப்பம் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றன.
ஆனால், அதை எப்படிச் செய்வது, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடுகள் என்ன செய்ய வேண்டும், வளரும் நாடுகள் என்ன செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும் வறிய நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவில்லை.
முதலீட்டிய உற்பத்தி முறை என்பது எல்லா நாடுகளும் உற்பத்தியைப் பெருக்க வேண்டும், வளர வேண்டும் என்பதையே நியதியாகக் கொண்டுள்ளதால், உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (Gross Domestic Product) தொடர்ந்த வளர்ச்சியைச் சாதிக்கும் அதே நேரத்தில், சுற்றுச்சூழலையும் எப்படிப் பாதுகாக்க முடியும் என்பதுதான் கேள்வி.
சுருக்கமாகச் சொன்னால் எல்லையில்லா வளர்ச்சி (infinite growth) என்பதை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டியத்துக்கும், எல்லைக்கு உட்பட்ட இயற்கை வளம் (finite resources) என்பதற்கும் உள்ள முரண்பாடேமுக்கியமான முரண்பாடாக மாறியுள்ளது எனலாம்.
இயற்கை குறித்த மார்க்ஸின் சிந்தனைகள்: 140 ஆண்டுகளுக்கு முன் மறைந்த கார்ல் மார்க்ஸ், முதலீட்டியத்தின் மிக முக்கியமான விமர்சகர்களுள் ஒருவர். மூன்று பாகங்களில் எழுதப்பட்ட அவருடைய ‘மூலதனம்: அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனம்’ என்கிற நூல் மிக முக்கியமான முதலீட்டிய விமர்சன நூலாகும்.
‘காபிடல்’ என்பதைத் தமிழில் ‘மூலதனம்’ என்று மொழியாக்கம் செய்வதில் பிழையில்லை. ஆனால் ‘காபிடலிஸம்’ என்பதை ‘முதலாளித்துவம்’ என்று கூறுவதில் ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. அதாவது, மூலதனம் எப்படி முதலீடாகச் செயல்படுகிறது, அதன்மூலம் எப்படித் தொடர்ந்து திரட்டப்படுகிறது (accumulation) என்பதைக் கவனப்படுத்தாமல், முதலாளி அதாவது ‘காபிடலிஸ்ட்’ என்ற நபரை மையப்படுத்தி வருகிறது.
இது எப்படி நடந்தது என்றால், உலக அளவில் மார்க்ஸின் விமர்சனத்தின் ஓர் அம்சம், அதாவது எப்படித் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு, உபரி மதிப்பு என்பது முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்துக்குப் பயன்படுகிறது என்ற அம்சம், அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
தொழிலாளர் வர்க்கத்தின் அணியாக்கமும், அது உற்பத்திச் சாதனங்களைக் கையகப்படுத்தி, பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவது என்கிற அரசியல் லட்சியமும் மார்க்ஸ், எங்கெல்ஸுக்கு இருந்ததால் அதுவே முதலீட்டிய விமர்சனத்தின் பெருமளவு அறியப்பட்ட, செயல்படுத்தப்பட்ட பகுதியாக விளங்கியது.
வேறு சொற்களில் சொல்வதென்றால், வர்க்கப் போராட்டம் என்பதும், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் என்கிற வர்க்க சாராம்சவாதமும் மார்க்சியத்தைத் தொழிற்சங்கவாதமாகச் சுருக்கியது. இவ்வாறு சொல்லும்போது தொழிலாளர்களின், உழைப்பின் முக்கியத்துவத்தையோ, தொழிற்சங்கங்களின் முற்போக்கான மக்களாட்சிப் பங்களிப்பையோ மறுக்க வேண்டியதில்லை.
பிரச்சினை என்னவென்றால், மார்க்ஸ் இயற்கை குறித்துக் கொண்டிருந்த அக்கறை கவனம் பெறாமல் போனதுதான் என்கிறார் டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியரான கொஹை சைட்டோ (Kohei Saito). இந்த ஆண்டு வெளியான இவருடைய ‘Marx in the Anthropocene: Towards the Idea of Degrowth Communism’ (Cambridge University Press, 2023) என்கிற நூல் மார்க்ஸியத் தத்துவத்தை வளப்படுத்தும் மிகச்சிறந்த பங்களிப்பாகும்.
வளர்ச்சி மறுப்புப் பொதுவுடமை: பெரும்பாலான சிந்தனையாளர்கள் மார்க்ஸைப் பேராற்றல் மானுடவாதி (Promethean Humanist), அதாவது மானுடப் படைப்பூக்கமும் உழைப்பாற்றலும் உற்பத்தியை அபரிமிதமாகப் பெருக்கி, மானுட வாழ்வை வளம்பெறச் செய்யும் என நினைத்தவர்; அதாவது உற்பத்தி உறவையே கவனப்படுத்தியவர் - உற்பத்தி முறையை அல்ல என்று எண்ணுகின்றனர். இதன் காரணமாகச் சிவப்புக்கும் (வர்க்க அரசியல்), பசுமைக்கும் (சூழலியல் அரசியல்) தொடர்பில்லை என்றே கருதிவருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட மார்க்ஸ்-எங்கெல்ஸ் கையெழுத்துப் படிகளை, குறிப்பேடுகளை கொஹை சைட்டோ படித்தபோது இயற்கை பற்றி அறிவதில் பிற்கால மார்க்ஸ் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததைக் காண்கிறார்.
அவற்றின் வெளிச்சத்தில் மார்க்ஸின் மூலதனம் உள்ளிட்ட ஆக்கங்களை வாசிக்கும்போது முதலீட்டியத்துக்கும், இயற்கைக்குமான அடிப்படை முரணை மார்க்ஸ் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டுவதைப் பார்க்கிறார்.
இஸ்த்வான் மெசோரஸ் (István Mészáros, 1930-2017)உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் மார்க்ஸின் இந்த அக்கறையைக் கவனப்படுத்தியுள்ளதையும் கருத்தில் கொள்கிறார்.
கார்ல் மார்க்ஸின் முக்கியக் கருத்தாக்கங்களில் ஒன்று, வளர்சிதைமாற்றம் (metabolism) என்பதாகும். மனிதருக்கும் இயற்கைக்கும் உள்ள உறவினை வளர்சிதைமாற்றமாக வர்ணிக்கும் மார்க்ஸ், இதில் முதலீட்டியம் பிளவை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் (metabolic rift).
இந்தப் பிளவு பொருள்ரீதியாகவும், இடரீதியாகவும், காலரீதியாகவும் செயல்படுகிறது. எல்லைக்கு உட்பட்ட இயற்கை வளங்களைச் சுரண்டுவது ஒருவழிப் பாதையாகிறது. இதனைக் கூறும் மார்க்ஸ், முதலீட்டியமோ எல்லையற்ற வளர்ச்சியை எதிர்நோக்குவது என்று எச்சரிக்கிறார்.
மார்க்ஸ் உற்பத்தியைச் சமூகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்போது, தேவைகளின் பெருக்கத்தை, உற்பத்தி - நுகர்வின் பெருக்கத்தைத் தவிர்ப்பதையும் அதன்மூலம் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைப்பதையும் பரிந்துரைத்துள்ளார்.
உற்பத்திப் பெருக்கமல்ல, நுகர்வின் குறைப்பே அபரிமிதத்தை உருவாக்கும். எல்லையற்ற வளர்ச்சி மறுப்பு என்பதே பொதுவுடமையின் சாராம்சம் என்பதை மார்க்ஸிடமிருந்தே பெறலாம் என்பதே நமக்கான திறப்பு.
மார்ச் 14: கார்ல் மார்க்ஸ் 140ஆவது நினைவு நாள்
- ராஜன் குறை கிருஷ்ணன் | பேராசிரியர்; ‘மானுட யத்தனம் என்றால் என்ன?’ நூலாசிரியர்; தொடர்புக்கு: rajankurai@gmail.com