ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! 12: தேர்தல் கவனிப்பு

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! 12: தேர்தல் கவனிப்பு
Updated on
2 min read

தமிழர்களின் வரலாற்றில் தேர்தல் என்பது பழமையான ஒன்று. குடவோலை முறையும், அதைக் குறிப்பிடும் உத்திரமேரூர்க் கல்வெட்டும் பரவலாக அறிமுகமானவைதான். ஆனால், அது குலுக்கல் முறையிலான தேர்வாகும். பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேர்வுசெய்யும் முறை ஆங்கிலேயர் ஆட்சியில்தான் அறிமுகமானது.

தொடக்கத்தில் அரசுக்கு வரி கட்டுவோருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதால் வேட்பாளர்களும் வரி கட்டுவோராகவே இருந்தனர். இதனால் இவர்கள் வீற்றிருக்கும் சட்டமன்றத்தால் சாமானியனுக்குப் பயன் இல்லாது போயிற்று.

இதை உணர்ந்தமையால், ‘எண்ணத்தில் நூறுடனே/ இருபத்தெட்டுப் பேர்கள் உண்டு/ பண்டத்தில் ஏதுமில்லை/ பகட்டினில் மயங்காதீர்/ சட்டசபை மட்டசபை/ சௌகரியம் அற்ற சபை/ இச்சபையின் ஸ்தாபிதத்தால்/ எய்தும் பயன் ஏதுமில்லை’ என்றெல்லாம் சாமானியர்கள் பாடியதுண்டு.

விடுதலைக்குப் பின்: இந்திய விடுதலைக்குப் பின், வயது வரையறையை மட்டும் அளவுகோலாகக் கொண்டு வாக்குரிமை வழங்கப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கென்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கென்றும் தனித்தனிச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்ட கிராமப்புறங்களே மிகுந்திருந்த, கல்வி பரவலாகாத சமூகச் சூழலில் சின்னங்கள் சராசரி மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையனவாக அமைந்தன.

ஏரில் பூட்டப்பட்ட இரட்டைக் காளைச் சின்னம் காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கதிர் அரிவாளும், பாரதிய ஜனசங்கம் கட்சிக்கு அகல் விளக்கும், வேறு இரண்டு கட்சிகளுக்குக் கலப்பையைத் தோளில் சுமந்து செல்லும் உழவனும் ஆலமரமும் சின்னமாக வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களைக் காரில் அழைத்துவரும் வழக்கம் பரவலாக இருந்தது.

ஆனால், பெரும்பாலும் வாக்குச்சாவடியிலிருந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச்சென்று விடமாட்டார்கள். இதன் அடிப்படையில், தன் உதவியைப் பெற்றுக்கொண்டவர் தன்னைப் புறக்கணிக்கும் நிலையில், ‘எலெக்சன் கார் சவாரி மாதிரி ஆகிப்போச்சு’ என்ற புலம்பலும் உருவானது.

வாக்குச் சாவடிக்கு அருகில் உப்புமா, காபி, சோற்றுப் பொட்டலம் என்பன வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. சமைத்த உணவைச் சாப்பிட விரும்பாத மேட்டிமையோருக்குக் குளிர்பானம் வழங்கப்பட்டது. இவ்வழக்கத்தை மையமாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கவிஞரான வெ.நா.திருமூர்த்திஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகழும் தர்க்க வடிவிலான பாடலை இயற்றித் தன் கலைக்குழுவுடன் திருச்சி நகரில் வலம்வந்தார். அதன் ஒரு பகுதி வருமாறு:

‘ஒரு ரூபாய் தாரேன்/ உப்புமா காபி தாரேன்/ ஓட்டு போடுற பெண்ணே...... பாத்துப்போடு’ என்று ஆண் கலைஞர் பாடியதும் எதிர்ப் பாடலாக, ‘உன் ஒரு ரூபாயும் வேணாம்/ உப்புமா காபியும் வேணாம்/ நீங்க தீய வச்ச கூட்டம்/ ஒங்களத் தீத்துக் கட்டப்போறேன்’ என்று பெண் கலைஞர் பாடுவார். நாட்டார் பாடல் ஒன்றின் தழுவலான இது, பாடப்பட்ட ஆண்டு 1952. இப்போது ஒரு ரூபாய் நெற்றிக்காசுக்குத்தான் உதவும்.

வாக்களிப்பதற்குப் பணம் வழங்குதல் தனி மனிதனை மையமாகக் கொண்டோ அல்லது ஊர்ப் பொதுச் செலவை (பெரும்பாலும் ஊர்க் கோயில்) மையமாகக் கொண்டோ அமையும். சில ஊர்களில் சாதித் தலைவரோ, பெருநிலக்கிழாரோ மொத்தமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர் விருப்பப்படி பிரித்துக் கொடுப்பார். இதன் வளர்ச்சி நிலையாகத் தங்க அணிகலன், வெள்ளியாலான பொருள்கள், மின்னணுக் கருவிகள், நான்கு இலக்கத்தில் ரொக்கம், கிடா விருந்து என ‘கவனிப்பு’ விழுது பரப்பி நிற்கிறது.

சில நிகழ்வுகள்: 1952 பொதுத் தேர்தலின்போது தஞ்சை மாவட்டம் இன்றைய நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய மாவட்டமாக இருந்தது. இம்மாவட்டத்தில் செயல்பட்டுவந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சில நூறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாக இருந்துள்ளது. ஆனால், தேர்தலில் நான்கு பேர் சட்டமன்றத்துக்குத் தேர்வாகினர். இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது, அதன் விவசாயச் சங்கத்தின் உறுதியான செயல்பாடுகள்தான்.

விவசாய இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் மணலி கந்தசாமி தலைமறைவாக இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். தோழர் பி.ராமமூர்த்தி மதுரை மத்தியச் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு மதுரையில் வென்றார். இவர்கள் இருவரும் தேர்தல் பரப்புரைக்குச் செல்லாமலேயே வென்றனர்.

இன்றைய நிலை: ஆங்கிலக் கவிஞர் கோல்டுஸ்மித் அவர் காலத்திய இங்கிலாந்தின் தேர்தல் நடைமுறைகள் குறித்து எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: ‘ஒரு வேட்பாளரின் தகுதி பெரும்பாலும் அவர் தரும் விருந்துகளின் எண்ணிக்கையைக் கொண்டே அளவிடப்படுகிறது.

அவருடைய தொகுதி மக்கள் ஒன்றாகக் கூடி அவருடைய செலவில் சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய ஆதரவைத் தருகிறார்கள். ஆனால், அந்த ஆதரவு அவருடைய நேர்மைக்கோ அறிவுக்கோ அல்ல. அவர் கொடுத்த சாப்பாடு மற்றும் பிராந்தியின் தரத்தைப் பொறுத்தே அமைகிறது.’

இப்போது இந்நிலையை இங்கிலாந்து கடந்துவிட்ட நிலையில், வாக்காளர்கள் என்போரைக் கடந்து தமிழ்நாட்டின் சில அரசியல் கட்சிகளிலும் இப்போக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அவை நடத்தும் மாவட்ட, மாநில அளவு மாநாடுகளில் பேராளர்களைக் ‘கவனிக்கும்’ அணியே வெற்றிபெறும் என்ற நிலை உருவாகிவருகிறது. சில சமய அமைப்புகளுக்கு உள்ளேயும்கூட இப்போக்கு ஊடுருவி நிற்கிறது. பூமராங்கும் வளைதடியும் எறிந்தவரிடமே திரும்பி வருவதுபோலத்தான் இதுவும்.

- ஆ.சிவசுப்பிரமணியன் | பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர்; தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in