புத்தன்... சித்தார்த்தன்... ஹெஸ்ஸே...

புத்தன்... சித்தார்த்தன்... ஹெஸ்ஸே...
Updated on
3 min read

உலக கிளாசிக் நாவல்களில் ஒன்று ‘சித்தார்த்தன்’ (Siddhartha). நோபல் விருது பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே இதன் ஆசிரியர். இந்தியாவில் இந்த நாவல் புகழ்பெறக் காரணம், அது அடிப்படையாகக் கொண்ட இந்தியத் தத்துவம்தான். தன்னை அறிவதற்கான தேடல்தான் இந்த நாவலின் பயணம். இந்த நாவலின் காலம் புத்தர் வாழ்ந்த காலகட்டம்.

நாவலின் நாயகனான சித்தார்த்தனின் பயணத்தையும் இந்த நாவலுக்கான ஹெஸ்ஸேயின் பயணத்தையும் ஒப்பிடலாம். ஆன்மிகத் தேடலில் நாவலின் சித்தார்த்தனை, புத்தனிடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்பதுபோல் ஹெஸ்ஸேவையும் சித்தார்த்தன் இடத்தில் வைத்துப் பார்க்கலாம். ஐரோப்பியச் சூழலில் உறுதியான கிறித்துவ மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஹெஸ்ஸே. ஆனால், அதிலிருந்து விடுபட்டுப் புதிய தேடலை நோக்கிச் செல்லவும் அவருக்கு அந்தப் பின்னணியே காரணமாகவும் இருந்தது. அவரது தாய்வழித் தாத்தா, ஹெர்மன் குந்தர்த் திருநெல்வேலியில் இறைப் பணி மேற்கொண்டவர். தமிழ் தெரிந்தவர். திருமணத்திற்குப் பிறகு இன்றைய கேரள மாநிலம் தலசேரியில் தங்கி மலையாளம் கற்று, பைபிளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். மலையாளம் - ஆங்கில அகராதி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். ஹெஸ்ஸேயின் தாய் இந்தக் காலகட்டத்தில்தான் பிறந்தார். ஆனால், மூன்று வயதுக்குப் பிறகு ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லப்பட்டு 15ஆம் வயதில் மீண்டும் இந்தியா வந்து தன் பெற்றோருடன் இணைந்தார்.

ஹெஸ்ஸேயின் தாயும் தந்தையும் தாத்தாவும் பாட்டியும் அனைவரும் கிறித்துவ மத விசுவாசிகள். அதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். அவருடைய தாத்தாவும் பாட்டியும் ஜெர்மனி திரும்பிவிட்டாலும் இந்தியாவின் அம்சத்துடன் இருந்தனர். மலையாளம், தமிழ் போன்ற மொழிகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. அவர்களது பயன்பாட்டில் இந்தியப் பொருள்கள் இருந்தன. மேலும் தாத்தா தன் பேரனுக்கு இந்தியக் கதைகளைக் கூறினார். பிற்பாடு ஹெஸ்ஸேவுக்குள் உருவான இந்தியத் தத்துவத்துடனான தேடலுக்கான விதை இப்படி தூவப்பட்டிருக்கலாம். அதனால்தான் ஜெர்மன் தத்துவவியலாளரான ஆர்தர் சோபன்ஹாரை வாசித்தபோது ஹெஸ்ஸே புத்த தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். மற்றொரு ஜெர்மன் தத்துவவியலாளரான நீட்சேவின் புத்தம் குறித்த எழுத்துகளாலும் ஹெஸ்ஸே கவரப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில் ஹெஸ்ஸே பகவத் கீதையின் மொழிபெயர்ப்புகளையும் வாசித்துள்ளார். ஆசையையும் அகங்காரத்தையும் விடுவதுதான் உண்மையான விடுதலை, ரட்சிப்பு என்பதை இந்தியத் தத்துவங்கள் உணர்த்துவதிலும் சோபன்ஹார், மனிதனுக்குள்ளிருக்கும் விருப்பம் என்னும் பகுத்தறிவற்ற தன்மைதான் துன்பத்துக்குக் காரணம் எனச் சொல்வதிலும் உள்ள ஒற்றுமையை உணர்ந்தார். இதற்குப் பிறகு நாவலின் சித்தார்த்தனைப் போல் அவரும் தேடலுடன் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு 1911, செப்டம்பரில் பயணப்பட்டார். ஆனால், உண்மையில் அவரது ‘இந்தியப் பயணம்’ என்பது இந்தியப் பயணமே அன்று. அவர், இலங்கை, மலேசியா, சுமத்ராவுக்குச் சென்றார். தென்னிந்தியாவுக்கு வரும் திட்டத்தைக் கைவிட்டு சுமத்ராவிலிருந்து ஜெர்மனிக்குத் திரும்பிவிட்டார். ஆனால், இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட சித்தார்த்தனாக இருந்திருப்பார். நாவலில் கமலாவைப் பிரிந்து சித்தார்த்தன் நதிக்கரைக்கு வருவதுபோல் ஹெஸ்ஸே தன் மனைவியிடம் விவாகரத்து பெற்றுவிட்டு இந்தியப் பயணம் மேற்கொண்டார்.

இந்த நாவல், சித்தார்த்தனின் கேள்விகளில் தொடங்குகிறது. ஆச்சாரமான இந்து மதக் குடும்பத்தைச் சேர்ந்த சித்தார்த்தனின் தேடல் அப்போதுதான் தொடங்குகிறது. ஹெஸ்ஸேவுக்கும் இறுக்கமான கிறித்துவக் குடும்பப் பின்னணியின் முரண்பாடு இந்தியத் தத்துவத்தின் மீதான ஈர்ப்பாக மாறுகிறது. தாய், தந்தையரின் அன்பு, ஆசிரியர்களின் அறிவு இவை எல்லாம் இட்டும் நிரம்பாத அவனது பாத்திரத்தைப் பற்றிய கேள்வி நாவலில் சித்தார்த்தனுக்கு எழுகிறது. எல்லாம் நிறைவாக இருப்பதுபோல் தோன்றினாலும் மனதில் நிச்சலனம் ஏன்?

கேள்விகள் அவனை உந்தித் தள்ள, பரதேசம் போகிறான். துறவிகளுடன் துறவிகளாகத் தன் உடைமைகளை விட்டு நடக்கிறான். செல்லும் வழியில் பெண்களை, தாய்மாரை, செல்வத்தை அவன் தலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனுடைய நண்பன் கோவிந்தனும் உடன் பயணிக்கிறான். சித்தார்த்தனுக்கு ஞானத்தை அடையும் சரியான பாதையில்தான் செல்கிறோமோ எனச் சந்தேகம். காணும் ஒவ்வோர் உயிருக்குள்ளும் தன்னைக் காண்கிறான். பறவையாகிப் பறக்கிறான். இறந்த விலங்கின் சடலமாகிப் புழுத்துப்போகிறான். ஆனாலும் சந்தேகம். கோவிந்தன், அவனுக்கு நம்பிக்கை அளிக்கிறான். அவர்கள் கெளதமரிடம் (புத்தர்) செல்கிறார்கள். ஆனால், சித்தார்த்தன் அங்கும் நிலைகொள்ளவில்லை. கோவிந்தனை விட்டுவிட்டுப் புறப்படுகிறான். குறுக்கே ஒரு நதி இடைமறிக்கிறது. அதை ஒரு படகோட்டியின் உதவியுடன் கடக்கிறான். அந்தக் கரையில் ஒரு சம்சார வாழ்க்கை அவனுக்காகக் காத்திருக்கிறது.

கமலாவைச் சந்திக்கிறான். அவள் வழி காரியவாதியாகிறான். ஒரு விளையாட்டில் களிக்காரனைப் போல் சித்தார்த்தன் அதில் ஈடுபடுகிறான். அவள், அவனுக்குச் சிற்றின்பத்தை அளிக்கிறாள். ஏவல் பணியாளர்களையும் எண்ணற்ற செல்வத்தையும் சித்தார்த்தன் சம்பாதிக்கிறான். கமலா அவனுக்கு இன்பத்தை அளிக்கிறாள். ஆனால், இந்த இன்பமெல்லாம் ஒரு கணத்தோற்றம்தான் எனக் கருதுகிறான் சித்தார்த்தன். கமலா, செல்வம், ஏவல் பணியாளர்கள் எல்லாவற்றையும் விட்டுப் புறப்படுகிறான் அவன். மீண்டும் அவனை அந்த நதி இடைமறிக்கிறது. அதே படகோட்டி உதவியுடன் அதைக் கடக்கிறான். அந்தக் கரையில் அவனுக்கான விடை காத்திருக்கிறது. நாவல் இத்துடன் முடியவில்லை. ஆன்மிகத் தேடல் கேட்டுத் தெளிவது அன்று; கண்டு உணர்வது என்பதைக் காட்சிகள் வழியாக நாவல் விவரித்து அந்த நதியைப் போல் செல்கிறது. அதே பழைய நதியில் புதிய நீரோட்டத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in