வரலாறு ஒரு கதை போல...

அழுந்தூர் கோயில்
அழுந்தூர் கோயில்
Updated on
3 min read

சில சுவையான கதைகள் வரலாறு போல வாழ்வதும் சில ஊர்களின் வரலாறு கதைகளைப் போல நிகழ்வுகளின் தொடரிணைப்பால் உருவாவதும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. அழுந்தூரின் வாழ்க்கை இரண்டாம் வகையினது. வெளிச்சம் பெறாதிருந்த அச்சிற்றூரின் வரலாறு ஒரு தொடர்கதையைப் போலவே பல்வேறு காலக்கட்டச் சான்றுகளின் கண்டுபிடிப்பால் பேருருக்கொண்டது.

திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் 18 கி.மீ. தொலை விலுள்ள அழுந்தூர் வளம் குறைந்த சிற்றூர். 1985இல் அவ்வூரில் அரிசி அரைக்கும் ஆலை வைத்திருந்த சத்திய நாராயணன்தான் அவ்வூரின் வரலாற்றுக்கு முகவரி எழுதிய முதல் மனிதர். ஊரில் பழங்காலக் கோயில் ஒன்று சிதைந்திருப்பதாகவும், ஆங்காங்கே சிற்பங்கள் புதையுண்டும் சிதறியும் கிடப்பதாகவும் எங்கள் வரலாற்றாய்வு மையத்திற்குத் தகவல் தந்தார் அவர்.

ஆய்வில் துலங்கிய வரலாறு

மேலுறுப்புகளை இழந்த விமானத்தின் எஞ்சிய பகுதியாகக் கருவறையும் சிறிய முகமண்டபமும் அதற்கும் முன்னுள்ள பெருமண்டபத்தையும் இணைக்கும் பகுதியாக ஓர் இடைநாழியுமே முதல் பார்வையில் பதிவான கோயிலின் படப்பிடிப்பு. வளாகத்துக் கல்வெட்டுகளைப் படியெடுத்தபோது, அக்கோயில் முற்பாண்டிய மன்னர் வரகுணன் பெயரால், ‘வரகுணீசுவரம்’ என்று வாழ்ந்தமையும் சோழ வேந்தரான முதற் குலோத்துங்கர் காலத்தே சிதைந்திருந்த அக்கோயிலை, ஊர் மக்கள் சீரமைத்து வழிபாடு தொடரச் செய்தமையும் தெரியவந்ததுடன், பெருமண்டபம், இடைநாழிகை இரண்டும் அக்காலத்தேதான் உருவாக்கப்பட்டன என்ற உண்மையும் வெளிப்பட்டது.

பெருமண்டபத்தின் வடசுவர் சிதறிக் கிழக்குச் சுவர்ச் சாளரம் இடம்பெயர்ந்திருந்த அக்கோயிலின் பின்புறத்தே, மரத்தடியில் சில சிற்பங்கள். மண்மேட்டில் புதையுண்ட நிலையில் சில சிற்பங்கள். மாவட்ட ஆட்சித்தலைவரின் இசைவும் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் வழிகாட்டலும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களின் இணைவும் அனைத்துச் சிற்பங்களையும் அரசு அருங்காட்சியகத்தில் சேர்க்க உதவின.

அச்சிற்பங்களுள் பல, பொதுக்காலம் (கி.பி.) 8-9ஆம் நூற்றாண்டுக் கலையமைதியில் இருந்தன. அவற்றுள் நெடிய விஷ்ணு திருமேனியும் ஒன்று. வரகுணீசுவரத்தில் இடம்பெற்றிருக்க முடியாத அச்சிற்பம், அப்பகுதியிலிருந்த ஏதோ ஒரு பெருமாள் கோயிலுக்கு உரியது என்பதறிந்ததும், அழுந்தூரில் அத்தகு பெருமாள் கோயில் ஏதும் இல்லாமையின், படியெடுத்த கல்வெட்டுகளிடம் அடைக்கல மானோம்.

குலோத்துங்க சோழ விண்ணகரம்

வரகுணீசுவர வளாகப் பலித்தளத்திலிருந்து படியெடுக்கப் பட்ட பல துண்டுக் கல்வெட்டுகளை இணைத்துப் பார்த்தபோது உண்மை வெளிப்பட்டது. பிற்பாண்டிய மன்னர் மாறவர்மர் குலசேகரர் காலத்தில் (பொ.கா. 14ஆம் நூற்றாண்டு) அழுந்தூரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் இருந்தமை தெரியவந்தது. விஷ்ணு சிற்பத்தின் காலமும் கல்வெட்டு சுட்டிய கோயிலின் பெயரும் கால முரண் காட்டினாலும், பொ.கா. 8, 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் இருந்த பழங்கோயில் சோழர் காலத்தில் சிதைவுற்று, முதற் குலோத்துங்கர் காலத்தே சீரமைக்கப்பட்டிருக்கலாம் என்ற சிந்தனைக்கு, வரகுணீசுவரத்தின் மற்றொரு கல்வெட்டுத் தூணாய் நின்று துணையானது.

பாண்டிய மன்னர் வரகுணரின் பெயரிலமைந்த சிவன் கோயில் சிதைவுற்று சோழவேந்தர் முதற் குலோத்துங்கர் காலத்தில் திருப்பணி பெற்றாற் போலவே இங்கிருந்த பழைமையான விஷ்ணு கோயிலும் காலப்போக்கில் சிதைந்து முதற் குலோத்துங்கர் காலத்தே சீரமைக்கப்பட்டிருக்கலாம். வரகுணீசுவரம் போல் சிறப்புப் பெயரேதும் கொள்ளாமல் பெருமாள் கோயிலாகவே விளங்கிய அழுந்தூர் விஷ்ணு கோயில், சீரமைக்கப்பட்ட காலத்து மன்னர் பெயரில் குலோத்துங்க சோழ விண்ணகரமாகியிருக்கலாம்.

இந்த எண்ணவோட்டம் சிற்பத்தின் காலத்திற்கும் கல்வெட்டுப் பெயரின் காலத்திற்கும் இடையிலிருந்த முரணை நேர்செய்தது. அதற்கேற்ப, 2005இல் கோயிலருகே புதிய கட்டுமானத்திற்காக அகழ்ந்தபோது கிடைத்த முச்சதுர இருகட்டுத் தூண் அமைந்தது. அதன் சதுரங்களில் கண்ணன், ராமர், விஷ்ணு தொடர்பான பிற்சோழர் கலையமைதியிலான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அத்தூண் குலோத்துங்க சோழ விண்ணகர மண்டபத்தை அலங்கரித்ததாகலாம்.

இப்பகுதியில் கிடைத்த சோழர் காலத் தவ்வைத்தேவி, கொற்றவைச் சிற்பங்கள் பல்தெய்வ வழிபாடு இவ்வூரில் இணக்கமுற நிகழ்ந்தமை சுட்டின. கல்வெட்டுத் துண்டொன்று சோழர் காலத்தே பிச்சியார் மடம் என்ற பெயரில் திருமடம் ஒன்று இங்கு விளங்கியதையும் அம்மடத்தவர் கோயில் திருப்பணியில் துணைநின்றதையும் உணர்த்த, சாளரக் கல்வெட்டு, அழுந்தூர் ஊரார் பொ. கா. 11ஆம் நூற்றாண்டில் எடுப்பித்த வரகுணீசுவரத்துப் பெருமண்டபத்தை, ‘வரகுணவிச்சார மண்டபமாக’ அடையாளப்படுத்தியது. குலோத்துங்கர் காலத்தில் எழுப்பப்பட்டிருந்தபோதும், கோயில் யார் பெயரை ஏற்றிருந்ததோ, அவர் பெயரையே தாங்கள் கட்டிய மண்டபத்திற்கும் சூட்டிய அழுந்தூர் ஊராரின் பேருள்ளம் போற்றற்குரியது.

வரகுணீசுவரம் தொடர்ந்து செழித்திருக்க ஊரார் தம் ஆளுகையிலிருந்த மென்செய், புன்செய் நிலவிளைவில் ஒரு கலத்துக்கு ஒரு நாழி என அளக்க ஒருப்பட்டதுடன், அக்காலத்தே வழக்கிலிருந்த காசான திரமத்தில் தலைக்கு இரண்டு திரமம் வழங்கவும் முடிவெடுத்தனர். அழுந்தூர் நிலங்கள் குளப்பாசனம் பெற்றதைக் கல்வெட்டிலுள்ள தட்டான்குளம், கணக்கன்குளம் எனும் சொல்லாட்சிகள் சுட்ட, எள், வரகு, தினை முதலிய புன்செய்ப் பயிர்களும் நெல்லும் இங்கு விளைந்தமையைக் குலசேகரர் கல்வெட்டால் அறிகிறோம்.

சிவன் கோயில் பெருமண்டபத்தில் இரண்டு சோழர் கால அளவுகோல்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, இம்மண்டபம் கட்டச் சிற்ப அறிஞர்கள் பயன்படுத்திய தச்சமுழம். மற்றொன்று நிலமளக்கப் பயன்பட்ட குழிக்கோல். இத்தகு அளவுகோல்கள் கல்வெட்டுப் பொறிப்புகளுடன் சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் இன்றும் காணக் கிடைக்கின்றன.

திருப்பணி நடத்திய சுந்தரபாண்டியர்

சடையவர்மர் சுந்தரபாண்டியர் காலத்தில் இக்கோயில் மற்றொரு திருப்பணிக்கு ஆளானமை, 2005இல் இங்கு கிடைத்த பலகைக் கல்வெட்டால் தெரியவந்தது. அதை முன்னிருந்து நிகழ்த்தியவராக இப்பகுதியிலிருந்த பெரியநாட்டான் திருமடத்து மழவராயர் அறிமுகமாகிறார். அவரது மடம் அஞ்சிவந்தாருக்குப் புகலிடமாக விளங்கியதையும் கல்வெட்டு உணர்த்துகிறது. பின்னாளிலும் இங்கு ஒரு திருப்பணி மேற்கொள்ளப்பட்டதையும் அதில் பெரியநாட்டு முத்தரையர், உள்ளூர் வண்ணார் உள்ளிட்டோர் பங்கேற்றதையும் இரண்டு கல்வெட்டுகள் வெளிச்சப்படுத்துகின்றன.

இங்குள்ள பிடாரித் தோப்பு, அய்யனார் தோப்பு இரண்டிலும் சோழர் கால, நாயக்கர் காலத் தெய்வ வடிவங்கள் உள்ளன. அழுந்தூருக்கு அருகிலுள்ள செட்டிஊருணிப்பட்டியில் கிடைத்த நாயக்கர் காலக் கல்வெட்டு, அழுந்தூரில் நந்தவனமும் தெப்பக்குளமும் இருந்ததாகக் கண்காட்டுகிறது. தெப்பக்குளம் என்ற சொல்லாட்சி, இக்குளத்தில் தெப்பக்காட்சி நிகழ்ந்ததை உறுதிப்படுத்துகிறது.

பொ.கா. 8, 9ஆம் நூற்றாண்டிலிருந்து நாயக்கர் காலம்வரை இங்கு கிடைத்துள்ள தொடர்ச்சியான வரலாற்றுச் சுவடுகள் அழுந்தூரின் வாழ்க்கையை வரைபடமாகத் தருகின்றன. வேளாண் பெருமக்களின் மேலாண்மையில் செழித்திருந்த இவ்வூரின் நில வகைகள், பயிராக்கம், பாசன வசதிகள், பல்வேறு வகையிலான அளவைகள், காசு வகைகள், திருமடங்கள், அவற்றின் செயற்பாடுகள், இப்பகுதியில் செழித்திருந்த கட்டடச் சிற்பக் கலைகள், கோயிலாட்சி, இங்கு வாழ்ந்த மக்களிடையே வழக்கிலிருந்த வழிபாட்டுச் சிந்தனைகள், கோயில் நடைமுறைகளுக்கும் ஊர் மக்களுக்கும் இடையிலிருந்த நேரடித் தொடர்புகள் என அழுந்தூரின் ஆயிரமாண்டுக் கால வரலாற்று நடை ஒரு கதை போலச் சான்றுகளின் கூற்றாய் நம் முன் காட்சி விரிக்கிறது.

சடையவர்மர் சுந்தரபாண்டியர் காலத்தில் இக்கோயில் மற்றொரு திருப்பணிக்கு ஆளானமை, 2005இல் இங்கு கிடைத்த பலகைக் கல்வெட்டால் தெரியவந்தது. அதை முன்னிருந்து நிகழ்த்தியவராக இப்பகுதியிலிருந்த பெரியநாட்டான் திருமடத்து மழவராயர் அறிமுகமாகிறார். அவரது மடம் அஞ்சிவந்தாருக்குப் புகலிடமாக விளங்கியதையும் கல்வெட்டு உணர்த்துகிறது.

- இரா.கலைக்கோவன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in