

ஓரிடத்தில் உட்கார்ந்தே ‘கேம்ஸ்’ விளையாடுவதால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்கள் ஏராளம்: குழந்தைப் பருவத்திலேயே கண்ணாடி அணியும் நிலை, உடற்பருமன், தூக்கமின்மை, எரிச்சல், பொறுமையின்மை, படிப்பிலும் உணவிலும்கூட அலட்சியம், எல்லாவற்றிலும் அவசரம், வீட்டுக்கு வரும் விருந்தினரோடு பேசி மகிழாமல் ஒதுங்கியிருத்தல்...
முக்கியமாக, சிறுமிகள் 10 வயதில் அல்லது அதற்குள்ளாகவே பருவமடைதல் என அச்சமூட்டும் பாதிப்புகளாக அவை நீள்கின்றன. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாடிய பாரதி, இன்றிருந்தால் ‘நீ உட்கார்ந்து விளையாடாதே பாப்பா’ என்று எழுதியிருக்கக் கூடும்.
குழந்தைகளுக்குக் கேடு: குழந்தையின் முதல் விருப்பம், இனிப்போ, ஆசிரியரோ, அம்மா-அப்பா, நண்பர்களோகூட அல்ல. ‘புதியன காண்பது’ தான். குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் தப்பிக்க, அவர்கள் கையில் திறன்பேசியைத் திணிப்பது தற்காலிகத் தீர்வாக இருக்கலாம்.
ஆனால், அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நிரந்தரக் கேடு. பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் வீடுகளில் பணம் இருக்கும், குழந்தைகளுடன் செலவிட நேரம்தான் இருக்காது. அந்த வீட்டுக் குழந்தைகள் திறன்பேசியில் புழங்குவது அதிகரித்துவருகிறது. இதில் தந்தைக்கும் பொறுப்பிருப்பதை மறந்துவிட்டு, தாயை மட்டுமே குற்றம்சொல்வது நம் சமூக வழக்கம்.
முன்மாதிரி யார்? - ஆபாசத் தளங்களைப் பற்றிக் கவலைப்படுகிறோம். அதைவிடவும் ஆபத்தான, மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சித் தொடர்களையும், வன்முறைகள் பெருகி வழியும் திரைப்படங்களையும், சமூக வலைதளங்களில் அர்த்தம் கெட்ட காணொளிகளையும் பார்க்கும் பெற்றோர்கள், ‘என் குழந்தை இப்படி இருக்கிறதே’ என்று கவலைப்படுவதில் அர்த்தமென்ன இருக்க முடியும்? செய்தித்தாள்களைக்கூட செல்பேசியில் பார்க்காமல், வீட்டில் வாங்கிப் படிக்கும் பழக்கமுள்ள பெற்றோரைப் பார்த்துத்தானே குழந்தையும் வாசிப்பை நேசிக்கும்… பெற்றோர்தானே குழந்தைகளின் முன்மாதிரி?
தமிழ்நாட்டு விளையாட்டுகள்: வீட்டுக்குள் விளையாடும் சதுரங்கம், தாயம், பரமபதம், பல்லாங்குழி, சொல் விளையாட்டு, தெருவில் ஓடி விளையாடும் கண்ணாமூச்சி, இசை நாற்காலி, பம்பரம், கிட்டிப்புள், பச்சைக்குதிரை, கபடி, கோலிக்குண்டு, திருடன் - போலீஸ், கிளித்தட்டு, நொண்டி ஆட்டம், தட்டாங்கல், பூப்பறித்தல், சைக்கிள் டயர் வண்டி என எத்தனையோ சிறுவர் விளையாட்டுகள் தமிழ்நாட்டில் இருந்தன. அவற்றை மீட்டு, பள்ளிகளில் பழக்கப்படுத்தினால் அவையெல்லாம் தானாகவே வீட்டுக்குள் வந்துவிடும்.
குழந்தையின் மூளை வளர்ச்சியில் 90%, அதன் 5 முதல் 10 வயதிலேயே நிறைவடைந்துவிடுகிறது என்பதால், ஆரம்பப் பள்ளியிலேயே வழக்கமான விளையாட்டுகளோடு நமது தமிழ்நாட்டு விளையாட்டுகளையும் விளையாட வைத்தால், மொழி அறிவோடு படைப்பூக்கமும் வளரும்.
திறன்பேசி விளையாட்டுகள் தனிமையை நோக்கியும், ‘எல்லாம் நானே’ என்றான உலகில் குழந்தைகளைத் தள்ளுவதுடன், விட்டுக்கொடுத்தல் எனும் உயர் பண்பை அறியாமலே குழந்தைகளை வளர வைத்துவிடும். கற்பனைக்கு இடமில்லாத வறண்ட, இயந்திரத்தனமான குழந்தைமை ஆபத்தானது. மாறாக, பெற்றோருடன் வெளியில் போய் பூங்கா, விளையாட்டு, நூல்நிலையம், இசை நிகழ்ச்சிகளைப் பார்த்தல்தான் குழந்தைக்கு நல்ல பயிற்சியாகும்.
கவனம் அவசியம்: பெரியவர்களும்கூடச் சில நேரம் வேண்டாத இணைய இணைப்புகளில் சிக்கிச் சீரழிகிறார்கள். இப்படியான சூழலில், இணையதள விளையாட்டுகளில் தொடங்கும் நம் குழந்தைகள் காலப்போக்கில் மேற்சொன்ன விபரீத வலைகளில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அமெரிக்காவில் 6 வயதுச் சிறுவன் தன் தந்தையின் திறன்பேசியில், செயலி வழியாக ஒரே இரவில் 80 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கிய அதிர்ச்சிச் சம்பவம், நம் ஊரிலும் நடக்காது என்று சொல்ல முடியுமா?
பொதுவாகவே, இணையப் புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. இணைய வசதியுள்ள திறன்பேசி, மேசைக் கணினி, மடிக் கணினி ஆகியவற்றில் அவசியமற்ற செயலிகள் (Apps), மின்-விளையாட்டுத் தளங்கள் குழந்தைக்குக் கிடைக்காத வண்ணம் மின்-பூட்டு (Child-Lock) போட்டு வைப்பது அவசியம். பிறகு குழந்தைகள் வளர வளர, அந்த மாதிரியான ஆபத்துகளை அவர்களிடமே சொல்லிப் புரியவைப்பது இன்னும் அவசியம்.
இதில் திறன்பேசி மட்டுமல்லாமல், ஆயிரம் ரூபாயிலிருந்து லட்சம் ரூபாய் விலையில் விற்கும் மின்-விளையாட்டுக் கருவிகள் பணத்துக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்கும் பெருங்கேடு என்பதை பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அரசும் கல்வித் துறையும் இதில் அவசியம் உதவ வேண்டும்.
தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தாமல் முன்னேற்றம் இல்லைதான். ஆனால், அது குழந்தைகளின் வளர்ச்சியில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பக் கல்வித் திட்டத்திலும் மாற்றம் நிகழ வேண்டும்.
- நா.முத்துநிலவன் | கவிஞர், ஓய்வுபெற்ற ஆசிரியர்; தொடர்புக்கு: muthunilavanpdk@gmail.com