

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் ஆட்சி அதிகாரம் எனும் கருத்தியலுடன் தோன்றிய குரல், மதுரை மண்ணிலிருந்து ஒலித்த மலைச்சாமியின் கலகக் குரல்.
மதுரை அவனியாபுரத்தில், நீர் மேலாண்மை சார்ந்த மடைப்பணி செய்யும் குடும்பப் பின்னணியில் 1956 மார்ச் 11 அன்று பிறந்தவர் மலைச்சாமி. நவீனமடைதல் வழியாக சாதிய இறுக்கத்தை உடைக்க முடியும் என்றும் நம்பிய அவர், அதற்குக் கல்வியறிவு அவசியம் என உணர்ந்தார்.
திராவிடர் கழகத்தின் தொடர்பு, மரபு மீறல் சிந்தனையை அவரிடம் உருவாக்கியது. தான் சார்ந்த வடக்குப் பச்சேரி, பெரிய பச்சேரி ஆகிய ஊர்களின் பெயர்களை ‘பெரியார் நகர்’ என்று மாற்றினார்.
சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் போன்றவற்றின் தேவையை மக்களிடம் எடுத்துரைத்தார். ‘மாணவர் எழுச்சி மன்றம்’, ‘தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் மாணவர் அமைப்பு’ போன்ற அமைப்புகளையும் மலைச்சாமி தொடங்கினார்.
புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், பட்டியலினத்தைச் சேர்ந்த வீரர்கள் காளைகளைப் பிடிப்பதைப் பொறுக்க முடியாமல், 1980இல் ஒரு சாதிய மோதல் திட்டமிடப்பட்டது. பெரியார் நகர் மக்களைத் திரட்டி அதை முறியடித்த மலைச்சாமி கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு தலித் எழுச்சி அரசியலில் முழுக் கவனம் செலுத்தினார்.
சாதிய வன்முறைக்கு எதிராகத் தேசிய அளவில் பரவிய மகர் சமூகத்தின் எழுச்சியின் அடையாளமாக, 1972இல் மகாராஷ்டிரத்தில் ‘தலித் பேந்தர்ஸ்’ (ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்) இயக்கம் உருவாகியிருந்தது.
அமெரிக்கக் கறுப்பின மக்கள் நடத்திவந்த ‘பிளாக் பேந்தர்ஸ்’ கட்சியின் தத்துவார்த்தத் தாக்கம் கொண்ட தலித் பேந்தர்ஸ், ஆட்சி அதிகாரத்தின் வழியாகத் தலித் விடுதலை அடையும் பாதையில் செயல்பட்டது. அதன் ஒருங்கிணைந்த தலைவராக அம்பேத்கரின் துணைவியார் சவிதா அம்பேத்கர் இருந்தார்.
விரைவிலேயே அந்த இயக்கம் மலைச்சாமியை அடையாளம் கண்டுகொண்டது. அதன் நிறுவனர்களில் ஒருவரான அருண் காம்ப்ளே, மலைச்சாமியை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, தலித் பேந்தர்ஸ் எனும் தேசிய அரசியல் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் மலைச்சாமி நிறுவினார். இயக்கத்தின் சார்பாக ‘தலித் விடுதலை’ எனும் இதழும் வெளிவந்தது. ‘பேந்தர் மலைச்சாமி’ என்றே மலைச்சாமி அடையாளம் காணப்பட்டார்.
‘பாரதிய தலித் பேந்தர்ஸ்’ எனும் பெயரில் செயல்பட்ட இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. குறிப்பாக, மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி கிராமத்தில் சாதி இந்துக்கள் வாழும் பகுதியில் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் தண்ணீர் எடுத்தார்கள் என்ற காரணத்தை முன்னிட்டு உருவான மோதலில், காட்டு ராசா என்கிற தலித் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதைக் கண்டித்து 1983இல் மதுரையில் மலைச்சாமி நடத்திய பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரணி, பட்டியலின மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. ‘மாவீரன்’ மலைச்சாமி என அவர் அழைக்கப்பட்டார்.
‘நாம் பிறப்பதற்கு முன் இருந்த சாதியை, இறப்பதற்கு முன் அழித்தே தீர வேண்டும்’ என்கிற எழுச்சிக் குரலுடன் வாழ்நாள் முழுவதும் இயங்கிய மலைச்சாமி, 1989இல் மறைந்தார். தலித் பேந்தர்ஸ் இயக்கம் பின்னாளில் தொல். திருமாவளவன் தலைமையில் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ எனும் அரசியல் கட்சியாகப் பரிணமித்து இன்றைக்கு மிகப் பெரிய அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
மார்ச் 11: ‘பேந்தர்’ மலைச்சாமி பிறந்தநாள்
- கணேஷ் சுப்ரமணி | உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: ganeshebi@gmail.com