

மனானந்தா சாட்ரியா ஒடிஷாக்காரர். கோவைக்கு அருகே அன்னூரில் ஒரு நூற்பாலையில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார். பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. இந்த மாதத் தொடக்கம்வரை; அதாவது சமூக ஊடகங்களில் அந்த வதந்தி பரவும்வரை.
தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்கிற வதந்தி பொய்யான படங்களோடும் காணொளிக் காட்சிகளுடனும் சுற்றிச்சுற்றி வந்தது. ‘இதில் உண்மை இல்லை, தமிழர்கள் எங்களிடம் மிகுந்த நேயத்துடன் நடந்துகொள்கிறார்கள்’ என்கிறார் மனானந்தா.
என்றாலும் ஊர் திரும்புகிறார். ஏன்? ‘வீட்டிலுள்ளவர்கள் பயந்து போயிருக்கிறார்கள், அவர்கள் வரச் சொல்கிறார்கள்’. சென்னை சென்ட்ரல், தாம்பரம், கோவை, திருப்பூர் முதலான ரயில் நிலையங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகள் நேர்கண்ட தொழிலாளர்கள் பலரும் இதையேதான் சொன்னார்கள். இன்னும் சிலர், ‘ஹோலிப் பண்டிகை வருகிறது, அதற்காகப் போகிறோம்’ என்கிறார்கள். இரு சாரரும் விரைவில் திரும்பிவிடுவோம் என்கிறார்கள். சென்னையிலும் திருப்பூரிலும் ஆய்வு மேற்கொண்ட பிஹார், ஜார்க்கண்ட் அதிகாரிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
பரவிய விஷமம்: இந்த அபாண்டத்தின் ஊற்றுக்கண் எது? தமிழக அரசின் புலனாய்வு, ‘தைனிக் பாஸ்கர்’, ‘தன்வீர் போஸ்ட்’ முதலான இந்தி ஊடகங்களைக் கைகாட்டுகிறது (தங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி இதை யாரோ செய்திருப்பதாக ‘தைனிக் பாஸ்கர்’ விளக்கமளித்துவிட்டது).
12 வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தூக்கிலிடப்பட்டதாக உத்தரப் பிரதேச பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் படேல் உம்ராவ் டிவிட்டரில் பதிவிட்டார். அது பல்லாயிரம் பேரால் பார்க்கப்பட்டது, பகிரப்பட்டது. விரைவில் அது ஒரு பச்சைப் பொய் என்பது நிரூபணமானது. அந்தப்பதிவை அவர் நீக்கினார். அத்துடன் அவர் பொறுப்பு தீர்ந்தது.
இன்னும் சில வட இந்திய ஊடகவியலாளர்களும் இந்தப் புரளியைப் பரப்பினார்கள். வதந்தி பற்றி எறிந்தபோது (மார்ச் 4) பிஹார் சட்டமன்றத்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சியினரால் குற்றம்சாட்டப்பட்டார். அவர் செய்த குற்றம்? ‘பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது தமிழ்நாடு, அதன் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் பிறந்தநாள் விழாவில் தேஜஸ்வி கலந்துகொண்டார்’ - இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்க வெறும் வதந்திகளே அவர்களுக்குப் போதுமானவையாக இருந்தன.
இந்த வதந்தியைப் பரப்பியவர்களின் நோக்கம் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துவது என்றால், அதில் அவர்கள் தோற்றுவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பங்கப்படுத்துவது அவர்கள் நோக்கம் என்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சீன உதாரணம்: ஒரு வளர்ந்துவரும் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது. சீனா உலகின் தொழிற்சாலையாக விளங்குவதற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே காரணம். ஆகவே நாம் சீன உதாரணத்தைப் பரிசீலிக்கலாம். சீனாவில் நகரங்கள்தோறும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றில் பணிபுரிவோர் மிகுதியும் அயல் மாகாணங்களின் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். சீனக் குடிமக்களுக்கு அவர்களது ஊராட்சிகள் ‘ஹுக்கூ’ (Hukou) எனப்படும் குடியுரிமை அட்டையை வழங்குகின்றன.
இவை அந்தந்த ஊரில்தான் செல்லுபடியாகும். அரசு வழங்கும் கல்வி, மருத்துவம், வீட்டு வசதி முதலானவற்றைப் பெற ஹுக்கூ வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலை நிமித்தம் நகரங்களுக்குப் புலம்பெயர்வார்கள். அவர்களுக்கு மட்டும் நகரங்களில் பணிபுரிய அனுமதி கிடைக்கும். பிள்ளைகள் தாத்தா - பாட்டியுடன் கிராமங்களிலேயே இருப்பார்கள். புலம்பெயர்ந்த கணவனும் மனைவியும் ஆண்டுக்கு ஒருமுறை பண்டிகைக் காலத்தில் வீடு நோக்கி ஓடி வருவார்கள்.
இந்தச் சீன உதாரணம் முழுமையாகப் பின்பற்றத்தக்கதல்ல. எனினும், அதிலிருந்து சில அம்சங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கலாம். முதல் கட்டமாக அவர்களைப் பற்றிய முழுமையான தரவுகள் வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராமேஸ்வரத்தில் இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு மீனவப் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்து எரித்துக் கொன்றுவிட்டார்கள். அப்போது நகரில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் பெயர், அடையாளம், தொழில், வாழிடம் முதலானவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று ராமேஸ்வரம் நகராட்சி அறிவித்தது.
இதைத் தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சிகளும் செய்ய வேண்டும். நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் சட்டத்தின் மாட்சிமையை நிறுவுவதற்கும் இந்தத் தரவுகள் அவசியமானவை. அடுத்ததாக, புலம்பெயரும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சஊதியம் உறுதிசெய்யப்பட வேண்டும். இதனால் அவர்கள் உள்ளூர் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு மட்டுப்படும். அவர்களுக்கு முறையான வாழிடத்துக்கும் பாதுகாப்புக்கும் வகை செய்யப்பட வேண்டும். முன் குறிப்பிட்ட தரவுகள் இதற்கு உதவும்.
மாற்றாந்தாய் மனப்போக்கு: இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கும் கணிசமான பங்கிருக்கிறது. முதலாவதாக, தமிழ்நாட்டின்மீது வன்மத்தோடு வதந்தியைக் கட்டவிழ்த்துவிட்ட வட இந்திய ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்த வேண்டும். அடுத்து, தமிழர்களில் சிலருக்கு வட இந்தியத் தொழிலாளர்கள்மீது ஒவ்வாமை இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இந்த ஒவ்வாமைக்கு மத்திய அரசின் பாரபட்சமும் ஒரு காரணம். தமிழ்நாடு கல்வியிலும் செல்வத்திலும் சிறந்த மாநிலம். அதனால் மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவின் 5.96% மக்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் மொத்த உற்பத்தியில் 9% அளவுக்குப் பங்களிக்க முடிகிறது.
நாட்டின் 16.51% மக்களைக் கொண்டிருக்கும் உத்தரப் பிரதேசமும் அதே அளவுக்கு மட்டுமே பங்களிக்கிறது. ஆனால் வரி வருவாயிலிருந்து தமிழகத்துக்கு 6% வழங்கும் மத்திய அரசு, உத்தரப் பிரதேசத்துக்கு 17% வழங்குகிறது. இதனால் நமது மாநிலத்துக்கு அவசியமான பல திட்டங்களை நிறைவேற்ற முடிவதில்லை.
திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வந்த நாள்களில் உரிமைக்குக் குரல் கொடுப்பதற்காக ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ எனும் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்தித் திணிப்பை எதிர்த்து அறிவிப்புப் பலகைகளில் தார் பூசுவது உள்ளிட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவையெல்லாம் வட மாநிலத்தவரை ஒருவிதக் கசப்புணர்வுடன் பார்க்கும் மனோபாவத்தை இங்கே சிலரிடம் வளர்த்துவிட்டது என ஒரு கருத்தாக்கம் நிலவுகிறது.
அதில் தர்க்கம் இல்லாமல் இல்லை. மறுபுறம், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு சார்ந்த பணியிடங்கள் வட இந்தியர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. போட்டித் தேர்வுகள் தமிழ்ப் பண்டிகை நாள்களில் நடத்தப்படுகின்றன. இன்னும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் நிறைவேற்றிய சட்ட வரைவுகள் ஆளுநராலும் குடியரசுத் தலைவராலும் முடக்கப்படுகின்றன.
இந்தப் பட்டியல் நீளமானது. இவை மத்திய அரசின் மீதும் அதைக் கட்டுப்படுத்துகிற வட இந்திய அரசியல் மையங்களின் மீதும் தமிழர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் ஒரு பகுதி வட இந்தியத் தொழிலாளர் மீதும் திரும்பியிருக்கலாம். ஆனால், தமிழ்நாடு அரசும் மக்களும் இந்த வதந்திப் புயலின்போது காட்டிய நிதானமும் கண்ணியமும் பெருமைப்படத்தக்க ஒன்றே.
என்ன செய்யலாம்? - புலம்பெயர் தொழிலாளர்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். அப்படி கண்ணியமாக நடத்தப்படும் மனானந்தா போன்றவர்கள், அதைத் தங்கள் வீட்டாரிடமும் அண்டை அயலிலும் சொல்ல வேண்டும். அரசு புலம்பெயர் தொழிலாளரைக் குறித்த தரவுகளைச் சேகரிக்க வேண்டும். அவர்களுக்கு முறையான வாழிடமும் ஊதியமும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும். கூடவே தமிழ்நாட்டின் மீதான மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- மு.இராமனாதன் | எழுத்தாளர், பொறியாளர்; தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com