

சிவகங்கை மாவட்டம் கீழடியில், கீழடி அருங்காட்சியகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 5 அன்று திறந்துவைத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டுவரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்கலைப்பொருள்கள் (artefacts) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரைக்குத் தென்கிழக்காக, 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது கீழடி. இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வு, தமிழ்நாட்டில் சங்க காலத்தில், வைகை ஆற்றின் கரைகளில் நகர நாகரிகம் (urban civilisation) செழித்திருந்ததற்கான ஆதாரங்களை வழங்குகிறது.
கீழடி அகழாய்வு அறிக்கை: இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (Archaeological Survey of India – ASI), 2013-14ஆம் ஆண்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகைச் சமவெளிப் பகுதியில் 293 தளங்களில் அகழாய்வு மேற்கொண்டது; அதில் கீழடியும் ஒன்று. தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில், 2014 மற்றும் 2016 ஆண்டுகளில், கீழடியில் இரண்டு கட்டங்களில் அகழாய்வு நடைபெற்றது.
இந்த அகழாய்வின் அறிக்கையை, இந்தியத் தொல்லியல் ஆய்வக இயக்குநர் வி.வித்யாவதியிடம் சில வாரங்களுக்கு முன் அமர்நாத் சமர்ப்பித்தார். 12 அத்தியாயங்களுடன் 982 பக்கத்துக்கு நீளும் இந்த அறிக்கை, கீழடியின் வரலாற்றுப் பின்னணி, அகழாய்வின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பதிவுசெய்திருக்கிறது.
கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள 18,000 தொல்கலைப்பொருள்களில், 5,800 பொருள்கள் முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்டவை. அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவரும் 110 ஏக்கர் பரப்பில், அகழாய்வு நடைபெற்றிருக்கும் பகுதிகளின் வெறும் 2% பற்றி மட்டுமே அறிக்கை பேசுகிறது என்பது, கீழடி பொதிந்துவைத்திருக்கும் வரலாற்றின் ஆழத்தை உணர்த்துகிறது.
சங்க காலம்: பொ.ஆ.மு. (கி.மு.) 3ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. (கி.பி.) 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம், மதுரையில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களால் ‘சங்க காலம்’ எனப் பெயரிடப்பட்டது. இந்தக் காலகட்டத்தை, கீழடி மறுவரையறை செய்கிறது.
தமிழ்நாடு தொல்லியல் துறை, கீழடியில் 2019இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்கலைப்பொருள்கள் ஒன்றின் காலகட்டம், பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. 353 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆறு தொல்கலைப்பொருள்களில் ஒன்று, கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புக்காக (carbon dating) அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதன் காலகட்டம் பொ.ஆ.மு. 580 எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
இது சங்க காலத்தின் காலகட்டத்தைக் கூடுதலாக 300 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்தக் காலகட்டம், மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கிறது: வரலாற்றுத் தொடக்கத்துக்கு முந்தைய காலம் (பொ.ஆ.மு. 800 முதல் பொ.ஆ.மு. 500 வரை), வரலாற்றுத் தொடக்கக் காலம் (பொ.ஆ.மு. 500 முதல் பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டு வரை), வரலாற்றுத் தொடக்கத்துக்குப் பிந்தைய காலம் (பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 300 வரை).
நகர நாகரிகம்: சங்க காலத்தில் தமிழ்நாட்டின் நகர நாகரிகம் பற்றிய விரிவான பதிவுகள் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன. கீழடியின் செங்கல் கட்டுமானங்கள், ஆடம்பரப் பொருள்கள், உள்நாட்டு-வெளிநாட்டு வர்த்தகம் என நகர நாகரிகத்துக்கான எல்லா கூறுகளையும் கீழடி கொண்டிருப்பதாகத் தமிழ்நாடு தொல்லியல் துறை உறுதிப்படுத்துகிறது. வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் தொழில்ரீதியாக மேம்பட்ட நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதற்குக் கீழடி சான்று பகர்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளில், வரலாற்றுத் தொடக்கக் காலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொகுதிகள் மிக அரிதாகவே கிடைத்திருக்கின்றன. அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, வேறு எங்கும் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொகுதிகள் கண்டறியப்படவில்லை.
இந்தப் பின்னணியில்தான், கீழடியில் காணப்படும் கட்டிடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பெச்சங்களை ஆய்வுசெய்தபோது, அவற்றில் 53% எருது, பசு, எருமை, ஆடு ஆகிய விலங்குகளைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது; இது கீழடியில் கால்நடை வளர்ப்பு செழிப்பாக இருந்துள்ளதைக் காட்டுகிறது.
சிந்துவெளித் தொடர்பு? சிந்துவெளி நாகரிகத்துடனான கீழடியின் சாத்தியமுள்ள தொடர்புகள் பற்றிய அறிக்கை வெளியான பிறகு, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வைத் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது (2017). கீழடி அகழாய்வின் தொல்லியல் கண்காணிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா, அஸ்ஸாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மூன்றாம் கட்ட அகழாய்வில் ‘குறிப்பிடத் தகுந்த கண்டுபிடிப்பு’ ஏதும் இல்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், பொதுமக்களின் நினைவிலிருந்து கீழடி கிட்டத்தட்ட அகலத் தொடங்கியது; அகழாய்வு 400 மீ. நீளத்துடன் நிறுத்தப்பட்டது என்கிற விமர்சனமும் எழுந்தது. வைகை ஆற்றங்கரையோரம் செழித்து வளர்ந்திருந்த பண்டைய தமிழ் நாகரிகம் பற்றிய தகவல்களை மட்டுப்படுத்துவதாக மத்திய அரசு மீது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர்.
இந்தப் பின்னணியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தலையிட்ட பிறகு, தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அனுமதித்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு மேற்கொண்டுவருகிறது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்கலைப்பொருள்களைக் கொண்டு, கீழடி தொல்லியல் தளத்தை வைகைச் சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியாக ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். கீழடி நாகரிகத்துக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் சுமார் 1,000 ஆண்டு பண்பாட்டு இடைவெளி இருந்தாலும், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சில பொருள்களில் உள்ள அடையாளங்கள், சிந்துவெளியின் குறிகளுடன் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகின்றன. எனினும், சிந்துவெளிக்கும் கீழடிக்குமான தொடர்பை உறுதிப்படுத்த, இன்னும் ஆழமான அகழாய்வும் அது பற்றிய விரிவான ஆய்வுகளும் தேவை.
அடுத்த கட்டம்: கீழடி அகழாய்வின் 9ஆம் கட்டம், 2023 மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக் காலம் (பொ.ஆ.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டு), வரலாற்றுத் தொடக்க காலம் (பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டு) வரையிலான விடுபட்ட இணைப்புகளைக் கண்டறிவதற்கான அதிமுக்கியமான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைத் தொல்லியலாளர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
பத்தாம் ஆண்டை நெருங்கிவரும் கீழடி தொடர் அகழாய்வில் வெளிப்பட்ட வரலாற்று வெளிச்சம், தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றின் புதிய திசையைத் துலக்கப்படுத்தியுள்ளது. அது மக்களைச் சென்றடையும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவிப்பு வரும்வரை காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை எந்தக் கட்டணமும் இன்றி அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடலாம் எனத் தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது.
தொகுப்பு: சு.அருண் பிரசாத்