

பல ஆண்டுகளாகவே சென்னை மக்கள் எதிர்கொண்டுவரும் முக்கியப்பிரச்சினைகளில் ஒன்று, கொசுத்தொல்லை. ஆறுகள் - கால்வாய்களிலிருந்து 50%, மழைநீர் வடிகால்களிலிருந்து 40%, வீடுகளிலிருந்து 10% என சென்னையில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றில் தேங்கியுள்ள மாசடைந்த நீரில் உற்பத்தியாகும் கொசுக்களே ஆண்டு முழுவதும் நீடிக்கும் கொசுக் கடிக்குக் காரணம். வீடுகளில் உற்பத்தியாகும் கொசுக்களே மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாகின்றன.
மக்கள் பங்கேற்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, கொசு ஒழிப்பு நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டபோது, மக்கள் இயக்கமாக மாற்ற முடிவெடுத்தோம்.
கொசுக்களின் தோற்றுவாய்: கட்டிடங்களின் உச்சியில் திறந்தநிலையில் விடப்பட்டிருக்கும் நீர்த்தேக்கத் தொட்டிகள், திறந்தநிலைக் கிணறுகள், கோயில் குளங்கள், குட்டைகள், ஏரிகள், கழிவுநீர்த் தொட்டிகள், பற்றாக்குறைக் காலத்தில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களிலும் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களிலும் அதிகளவில் சேகரித்துவைக்கப்படும் நீர் கொசுக்களின் நிரந்தர உற்பத்தி மையங்களாக இருக்கிறது.
மழைநீர் வடிகால்களில் முறைகேடாக அமைக்கப்பட்ட கழிவுநீர் இணைப்புகள், கட்டுமானத் தளங்களில் நீர்த்தேக்கம் போன்றவை தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 1939இன்படி தண்டனைக்குரியவை. ஆனாலும், இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு அரசுக் கட்டிடங்கள் ஏறத்தாழ 30% பங்குவகிக்கின்றன.
சுகாதாரத் தூதுவர்கள்: கொசுத் தொல்லையை முற்றிலும் களைய மிகத் தீவிரமான அரசியல்-நிர்வாக முனைப்பு தேவை. எனவே, சுகாதாரத் தூதுவர்களாகப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தினோம். இவர்களின் பங்களிப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் வீடுகளில் உற்பத்தியாகும் கொசுக்களைக் கட்டுப்படுத்த (10%) உதவின.
வீடுகளில் உற்பத்தியாகும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துதமது குடும்பத்தினரிடமும், அண்டை வீட்டாரிடமும் விளக்கிச் சொல்லுமாறுபள்ளி மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். சில பள்ளிகள் இதை மதிப்பெண்ணுக்குரிய கல்விப் பணியாக அவர்களுக்கு விதித்தன. மூன்று வாரங்கள் நடந்த இந்தச் செயல்பாடுகளால் சென்னைநகரில் கொசுக்களின் அடர்த்தி குறைந்தபட்ச அளவாகக் குறைந்தது. அதன் மூலம் கொசுத் தொல்லையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்தன.
வீடுகளில் கொசு ஒழிப்பு: 2011இல் நாடு முழுவதும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துவந்தது. அப்போது சென்னை நகரில் 300க்கும் குறைவானவர்களே டெங்குவால் உயிரிழந்தார்கள். புகைவழியிலான கொசு மருந்து அடிப்பதை மட்டுமே நம்பாமல் வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாவதை 100% குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எனது குழுவினரிடம் கூறினேன்.
ஒரு நாளைக்கு 100 வீடுகள், ஒரு வாரத்துக்குச் சராசரியாக 500 வீடுகளில் கொசுவின் தோற்றுவாய்களை அகற்றுதல், மக்களுக்கு வீடுகளில் கொசு உற்பத்தியைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் களப் பணியாளர்களை ஈடுபடுத்தினோம்.
இப்படி ஒவ்வொரு வாரமும் கவனம் செலுத்தப்படவேண்டிய 500 வீடுகள்கொண்ட தொகுப்பு (Sector) வரையறுக்கப்பட்டது. 3,500 ஒப்பந்தப் பணியாளர்கள் பயிற்சியளிக்கப்பட்டு, இந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளைப் பூச்சியியல்நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியபோது கொசுக்களின் அடர்த்தி குறைந்திருந்தது.
டெல்லி, மும்பை மாநகராட்சிகளும் இந்தத் தொகுப்புவாரிக் கட்டுப்பாடு அணுகுமுறையைப் பின்பற்றின. வீடுகளுக்குச் சென்று கொசுவின் தோற்றுவாயை அகற்றும் இந்த மாதிரி, தேசிய அளவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படக் கூடியது என்றனர். 2020இல் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அரசு பணிக் குழுவின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நான் இருந்தபோது, இதே மாதிரியைப் பரிந்துரைத்தேன். அது மாநிலம் முழுவதும் பின்பற்றப்பட்டு நல்ல பயன்கள் கிடைத்தன.
ஆள், இயந்திரங்களின் பற்றாக்குறை, கொசுக் கட்டுப்பாட்டுக்கான ஆராய்ச்சியின் போதாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தமது திட்டங்களைப் பொதுச் சுகாதார நிபுணர்கள் தொழில்நுட்பரீதியாகவும் பகுத்தறிவு சார்ந்தும் மாற்றியமைக்க வேண்டியதுகாலத்தின் கட்டாயம். வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி, மேலைநாடுகளில் பின்பற்றப்படும் அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பாடுகளை நவீனமயப்படுத்த வேண்டும்.
நகரத் திட்டமிடலின் தொடக்க நிலையிலிருந்தே அடிப்படைப் பொறியியல்தொழில்நுட்பம் உறுதியாகப் பின்பற்றப்படவேண்டும். இதன் மூலம் வேதிப்பொருள்களுக்காகச் செலவழிக்கப்படும் பெருந்தொகையைக் குறைப்பதோடு கொசுக்களையும் அவற்றால் விளையும் நோய்களையும் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்ற முடியும்.
சுருக்கமாகத் தமிழில்: கோபால்
- பி.குகானந்தம் | முன்னாள் நகர சுகாதார அதிகாரி, சென்னை; தொடர்புக்கு: drkugan@yahoo.com