

தமிழ்நாட்டில் 35 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த லாட்டரிச் சீட்டு, 2003இல் தடைசெய்யப்பட்டது. லாட்டரிச் சீட்டால் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த முக்கிய முடிவை எடுத்தது. 19 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த லாட்டரிச் சூதாட்டம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் சூதாட்டமாகப் பரிணமித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் தினமும் பணத்தை இழப்பவர்கள் ஏராளம்; பணத்தை இழந்து, நிம்மதியைத் தொலைத்து, இறுதியில் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவிடும் உயிர்க் கொல்லியாக ஆன்லைன் சூதாட்டம் வளர்ந்துநிற்கிறது.
ஒப்புதல் அளிக்காத ஆளுநர்: தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டவர்கள் 45 பேர். இந்தத் தொடர் உயிர்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதித்துச் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் சில விளக்கங்களைக் கேட்டதையடுத்து, அரசின் சார்பில் சட்ட அமைச்சர் ஆளுநரைச் சந்தித்து அவரது சந்தேகங்களுக்கு உரிய விளக்கத்தை அளித்தார். அதற்குப் பின் நான்கு மாதங்கள் ஆன நிலையிலும்கூட இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வேதனையளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம், அரசமைப்பு விதிகளின்படி மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இல்லை என ஆளுநர் முடிவுசெய்தால், அதனை நிராகரிக்கவோ குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கவோ வேண்டும். இதில் எதையும் செய்யாமல், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை, அரசமைப்பு சார்ந்த தனது கடமையை ஆளுநர் செய்யத் தவறியதாகவே கொள்ள வேண்டும்.
குட்டுவைத்த நீதிமன்றம்: இந்திய அரசமைப்பின் 361ஆவது கூறின்படி, குடியரசுத் தலைவரையும் மாநில ஆளுநரையும் கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. அரசமைப்பின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த நீதிமன்றமும் கேள்வி கேட்க முடியாத வகையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ராஜிவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட கைதிகளை விடுதலை செய்வதில் முடிவெடுக்க ஏன் காலதாமதம் என்று ஆளுநரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அது மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப் பிரிவு 142இன்படி, தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுவித்தது.
இத்தகைய சூழலில், நீதிமன்றக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற கவசத்துக்குள் அமர்ந்துகொண்டுள்ள ஆளுநர்களை, நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அரசியல் பின்னணி: இப்போது நியமிக்கப்படும் புதிய ஆளுநர்கள், அரசியல் களத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும், அவர்கள் ஆளுநராக நியமிக்கப்படும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமில்லாத சூழல் நிலவிவருகிறது. சுமுகமாக இல்லாத சூழல், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அமைந்துவிடும்.
சமீபத்தில், பஞ்சாப் மாநில ஆளுநர் தொடர்பான வழக்கில், ‘ஆளுநர்கள் அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டவர்கள்தாம்’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான மோதல் போக்கு தொடருமானால், அரசமைப்புக் கூறு 361இன்படி ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டு, ‘நீதிமன்றத்தின் கேள்வி கேட்கும் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்கள் ஆளுநர்கள்’ என அரசமைப்பு திருத்தப்பட வேண்டும்; இது காலத்தின் கட்டாயம்!
- கே.பாலு | வழக்கறிஞர் செய்தித் தொடர்பாளர், பாமக; தொடர்புக்கு: baluadvocate@gmail.com