தனிமனித விழிப்புணர்வே என் கதைகளின் நோக்கம்: எழுத்தாளர் சிவசங்கரி நேர்காணல்

தனிமனித விழிப்புணர்வே என் கதைகளின் நோக்கம்: எழுத்தாளர் சிவசங்கரி நேர்காணல்
Updated on
3 min read

காலத்தை விஞ்சி நிற்பதுதான் எழுத்து என்பது எழுத்தாளர் சிவசங்கரியின் கருத்து. 16 ஆண்டுக் கால உழைப்பைக்கொட்டி அவர் உருவாக்கிய புத்தகங்கள் இன்று அதைச் சாதித்திருக்கிற மகிழ்ச்சி அவரது பேச்சில் வெளிப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருந்த 18 மொழிகளில் சிறந்து விளங்கிய இலக்கிய ஆளுமைகளை ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்கிற நான்கு பெரும் தொகுப்புகளின் மூலம் ஆவணப்படுத்தினார் சிவசங்கரி. 80 வயதாகும் இவர் எழுதத் தொடங்கி 54 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார். ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ நூலுக்காக 2022ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மொழிபெயர்ப்பு, இலக்கிய ஆய்வு பிரிவு விருது அறிவிகப்பட்டுள்ளது. சிவசங்கரியுடனான உரையாடலிலிருந்து...

எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு இந்தத் துறைக்கு வந்தீர்களா?

உண்மையில் நடனத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றுதான் விருப்பம். என் அம்மாவின் தாத்தா சம்ஸ்கிருத பண்டிதர். ‘லக்‌ஷ்மணசூரி’ பட்டம் பெற்றவர். அம்மாவின் மாமா காயகசிகாமணி ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர். சங்கீத மும்மூர்த்திகளுக்கு அடுத்தபடியாகக் கர்னாடக இசையில் கீர்த்தனைகள் பாடியவர் முத்தையா பாகவதர். அம்மா வழியில் இப்படி சங்கீதமும் எழுத்தும் இயல்பாகவே வளமாக இருந்துள்ளன. அம்மா வழியில் இருந்து ஊன்றப்பட்ட வீரிய விதைதான் நான் எழுதத் தொடங்கியதற்கு ஒரு காரணம். என்னைச் சுற்றி நடக்கிற சம்பவங்களின் தாக்கம் என்னை எழுதத் தூண்டியது. இதை ‘எம்பதி’ (empathy) என்று சொல்வார்கள். அப்படித்தான் தூண்டப்பட்டு எழுதத் தொடங்கினேன். அப்போது எனக்கு 26 வயது. கல்லூரி வரைக்கும் சம்ஸ்கிருதம் படித்த என்னால் தமிழில் எழுத முடியுமா என்றே தெரியவில்லை. ஆனால், ஒன்றரை மணிநேரம் கழித்து அது ஒரு சிறுகதையாக மாறியிருந்தது. ‘அவர்கள் பேசட்டும்’ எனத் தலைப்பு வைத்து ‘கல்கி’க்கு அனுப்பினேன். அப்போது ஆசிரியராக இருந்த கல்கி ராஜேந்திரன், ‘நீ உணர்வுகளை ரொம்ப நல்லா கையாள்றே’ என்று சொன்னார். அதன் பிறகு இடைவிடாத பயணம். முதல் சிறுகதை எழுதி இரண்டாண்டுகளிலேயே 1970இல் முதல் நாவலை எழுதினேன். ஒவ்வொரு கதைக்காகவும் மேற்கொண்ட களப் பயணங்கள் மறக்க முடியாதவை.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ புத்தகத்துடன்...
‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ புத்தகத்துடன்...

அந்தப் பயணங்கள் பற்றி...

வாழ்க்கையிலிருந்து வாழ்க்கையை எழுதுவதுதான் எனக்குப் பிடிக்கும். குடிப்பழக்கம் குறித்து 1973இல் ஆய்வு செய்தேன். குடிப் பழக்கம் ஒரு நோய் என்பது எனக்குத் தெரிந்தபோது அதை வாசகர்களுக்குச் சொல்ல நினைத்தேன். குடிப்பழக்கத்தில் மூழ்கியவர்கள், குடியால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் எனப் பல தரப்பினரையும் சந்தித்தேன். ‘ஆனந்த விகட’னின் அப்போதைய ஆசிரியர் பாலசுப்பிரமணியம் இந்த அனுபவங்களை எழுதச் சொல்ல, அதுதான் ‘ஒரு மனிதனின் கதை’யாக வெளியானது. அது பரவலான வரவேற்பைப் பெற்றது. ‘ஃபெமினா’ பத்திரிகையில் என்னைப் பேட்டியெடுத்து, என் கதையைப் படித்துவிட்டுச் சிகிச்சைக்குச் சேர்ந்தவர்களின் பேட்டியோடு வெளியிட்டார்கள். உண்மையான எழுத்துகள் மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் என்பதை இது உணர்த்தியது. பத்து வருஷமாக வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு இருந்தவர்கள் என் கதையைப் படித்த பிறகு கலர் புடவை கட்டிக்கொண்டதாகவும் பொட்டு வைத்துக்கொண்டதாகவும் சொன்னதுண்டு. துணிவோடு மறுமணத்துக்கு ஒப்புக்கொண்டவர்களும் உண்டு. சத்தியமான எழுத்து இதைத்தானே செய்யும்? தனிமனித விழிப்புணர்வை ஏற்படுத்துவது என் கதைகளின் நோக்கம். அதனால்தான் ஒரு பெண்ணின் சுயம் குறித்த தேடலை உணர்த்தும் ‘நான் நானாக’ கதையை 25 ஆண்டுகளுக்கு முன்பே என்னால் எழுத முடிந்தது.

59 வயதில் நடன நிகழ்ச்சியில் ஆடினீர்கள் அல்லவா?

கே.ஜே.சரசாவிடம் நடனம் பயின்றேன். என் சித்தப்பா மகள் சாந்தசங்கரியுடன் இணைந்து நடனமாடியிருக்கிறேன். 1970இல் அமெரிக்கா சென்றபோது, அங்கேயும் 12 நடனக் கச்சேரிகளில் ஆடியிருக்கிறேன். நாட்டியம் பயின்ற பள்ளியின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தில் பழைய மாணவியாகக் கலந்துகொண்டு நடனமாட முடியுமா என என் குரு கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். நாரத கானா சபாவில் பத்மா சுப்பிரமணியம், சுதாராணி ரகுபதி போன்றவர்கள் முன்னிலையில் 59 வயதில் ஒரு மணி நேரம் நடனமாடினேன்.

இந்திய எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படித் தோன்றியது?

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ திட்டத்தை 1993இல் தொடங்கியபோது நான்கு திசைகள், 18 மொழிகளை ஆறு ஆண்டுகளில் முடித்துவிட நினைத்தேன். ஆனால், 16 ஆண்டுகளாகிவிட்டன. பெரும்பாலான எழுத்தாளர்களுக்குத் தொலைபேசிகூட இருக்காது. ரிஜிஸ்தர் தபாலில் கடிதம் அனுப்பி, அவர்களிடம் இருந்து பதில் வரும்வரை காத்திருந்து அந்தந்த மாநில எழுத்தாளர்களை இரண்டு வாரங்களுக்குள் அடுத்தடுத்துச் சந்திக்க முடியுமா எனத் திட்டமிட்டு நிற்கக்கூட நேரமில்லாமல் உழைத்தேன். பெரும் நிறுவனம் செய்ய வேண்டிய வேலை இது. அதைத் தனி மனுஷியாகச் சாதித்திருப்பதில் நிறைவு. அதனால்தான் எழுத்தைத் தவம் என்கிறேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை மட்டும் வைத்துக்கொண்டு கணினி, இணையம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவை மிக அரிதாகவே இருந்த 1990களில் இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக வலம்வந்திருக்கிறேன். ஒரு நிலத்தை, அங்கிருக்கும் மக்களை அவர்களின் வாழ்க்கை முறையை அந்தந்தப் பிரதேச எழுத்தாளர்களின் கண் வழியே பதிவுசெய்வதுதானே நியாயமாக இருக்க முடியும். அவர்களின் நேர்காணல்களை ஒலிநாடாவாகப் பதிவுசெய்து என் உதவியாளர் லலிதாவின் உதவியோடு தட்டச்சு செய்து, அதைத் திருத்தி, அதன் பிறகே இது புத்தக வடிவம் பெற்றது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பயணக்கதை, எழுத்தாளரின் நேர்காணல், அவரது படைப்பு மொழிபெயர்ப்பு, எழுத்தாளரின் கட்டுரை என்று 102 எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்தியுள்ளேன். இவர்களில் மணிப்பூரி, சிந்தி ஆகிய இரண்டு மொழி எழுத்தாளர்களுக்கு மட்டுமே மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டேன். மற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள்.

புத்தகப் பணிக்காக எழுத்தாளர்களைச் சந்தித்த அனுபவங்கள் குறித்து...

இந்தப் பயணம் பல நல்ல பாடங்களைக் கற்றுத் தந்தது. கன்னடத்தின் மூத்த எழுத்தாளர் சிவராம் காரந்த்தைச் சந்தித்தபோது அவருக்கு 92 வயது. சாப்பிடும்போது சமூகத்தைப் பற்றிப் பேச்சு திரும்பியது. ஆதிகாலம்தொட்டே மனிதன் சுயநலமாகத்தான் இருந்திருக்கிறான் என்றவர், “சர்வே ஜனா சுகினோ பவந்து” என்றார். “எல்லா மக்களும் நல்லா இருக்கட்டும் என்று சொல்வதில் என்ன தவறு?” என்றேன். “புல், பூண்டு, பிராணிகளையும் கணக்கில் வைத்து, சர்வே ஜீவே சுகினோ பவந்து என்று எல்லா உயிரினங்களும் நன்றாக இருக்கட்டும் என்றுதானே எண்ண வேண்டும்” என்றார். அது எனக்குக் கண்திறப்பாக அமைந்தது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஜாம்பவான்களில் 85க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட நிலையில் இந்தப் புத்தகம் ஒன்றுதான் பலருக்கான ஆவணமாக இருக்கிறது.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ புத்தகத்தை மறு வெளியீடு செய்யவிருக்கிறீர்களா?

நம்மிடம் இருக்கும் இலக்கியச் செழுமையை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டாமா? அதற்காகத்தான் ராம் குரூப் இயக்குநர் அகிலா சீனிவாசன், 400 புத்தகங்களை வாங்கி, இந்தியாவின் முக்கியப் பல்கலைக்கழகங்களுக்கும் நூலகங்களுக்கும் அனுப்பியிருக்கிறார். நான்கு தொகுப்புகளையும் மொத்தமாக வெளியிடும் நோக்கில் மார்ச் 18ஆம் தேதி மியூசிக் அகாடமியில் வெளியீட்டு நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பை சுதா சேஷய்யனும் ஆங்கிலப் பதிப்பை ஞானபீட விருது பெற்ற கொங்கனி எழுத்தாளர் தாமோதர் மாவ்சோவும் வெளியிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து ‘இசை மூலம் இந்திய இணைப்பு’ என்கிற கருத்தாக்கத்தில் 12 மொழிகளில் அருணா சாய்ராம் பாடவிருக்கிறார். இந்திய இணைப்புக்காக இலக்கியமும் இசையும் இணையும் சங்கமம் இது.

தமிழில் பெண்ணிய எழுத்து எப்படி இருக்கிறது?

எழுத்தில் பிரிவினை என்பதே கூடாது. இதை இவர்கள்தான் எழுத வேண்டும் என்று பிரிப்பதே எனக்குப் பிடிக்காது. தகழி சிவசங்கரன் பிள்ளை ஒருமுறை, “தோட்டியின் மகன் நாவலில் தலித்துகள் பற்றி எப்போதோ எழுதிவிட்டேன். அப்போது அதை யாரும் தலித் இலக்கியம் என்று சொல்லவில்லை. இப்போதுதான் ஆளாளுக்கு இலக்கியத்தை வகைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார். சில அனுபவங்களின் காரணமாகச் சிலவற்றைச் சிலர் மட்டுமே எழுத முடியுமே தவிர எழுத்தை அப்படி, இப்படி எனப் பிரிப்பது சரியல்ல.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in