

டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவின் கைது குறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இப்படிக் கூறுகிறார்: “நாணயமான தேச பக்தர்களைக் கைதுசெய்யும் பாஜக அரசு, வங்கிப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களைச் சுதந்திரமாக நடமாட விடுகிறது. ஏனெனில்,அவர்களெல்லாம் கூட்டாளிகள்.”
ஊழலுக்கு எதிரான இயக்கமாக அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்று, அதன் நீட்சியாக அரவிந்த் கேஜ்ரிவால் உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சி, இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது மிகப் பெரிய அரசியல் முரண். ஆனால், “நாங்கள் சிறப்பாகச் செயல்படுவதால், மக்கள் மத்தியில் எங்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கிறது. பாஜகவால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்பதே ஆம் ஆத்மி கட்சியினரின் வாதம்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆதங்கத்தில் தர்க்கம் இருக்கிறது. கடந்த ஆண்டு, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பண மோசடிப் புகார் தொடர்பாக அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார்; இப்போது கலால் வரிக் கொள்கை முறைகேட்டுப் புகாரில் மணீஷ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
கல்வி, மருத்துவம் என இரு துறைகளிலும் முன்னேற்றத்துக்கு வழிவகுத்த தனது இரண்டு தளகர்த்தர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கேஜ்ரிவாலால் தாங்க முடியவில்லை. குறிப்பாக, மொத்தம் உள்ள 33 துறைகளில் மணீஷ் வசம் மட்டும் 18 துறைகள் (கல்வி, நிதி உள்பட) இருந்தன.
பின்னணி: மணீஷின் நேரடிப் பார்வையில் உருவான புதிய கலால் கொள்கையில் ஊழலுக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கிய இலக்காக இருந்தது; மது விற்பனையிலிருந்து அரசு விலகிக்கொள்வது இன்னொரு நோக்கம். ஆனால், இக்கொள்கையால் மதுபான விற்பனையாளர்கள் மறைமுகமாகப் பலனடைந்ததாகவும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐயிடம் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா முன்வைத்த புகார்கள், இன்றைக்கு மணீஷ் கைதுசெய்யப்பட்டதற்கான காரணமாக அமைந்தன.
கலால் கொள்கை நியாயமானது என்றால், அதைத் திரும்பப் பெற்றது ஏன் என்றும் பாஜகவினர் கேட்கின்றனர். கூடவே,மது விற்பனையாளர்களுடனான உரையாடல்தொடர்பான ஆதாரங்களை மணீஷ் அழித்துவிட்டதாகவும், பல முறை கைபேசியையும், சிம் கார்டையும் மாற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
பிணை கேட்டு அணுகிய மணீஷின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. வேறு வழியின்றி அவரும், சத்யேந்திர ஜெயினும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். ஆனால், ஊழல் புகார் எழுப்பப்பட்ட உடனேயே இருவரும் ராஜினாமா செய்யாதது ஏன் என பாஜகவினர் ‘தார்மிகக் கேள்வி’ எழுப்புகிறார்கள்.
கண்டுகொள்ளாத காங்கிரஸ்: இந்த நடவடிக்கை பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்குமா என்பது முக்கியமான கேள்வி. அகிலேஷ் யாதவ், டெரெக் ஓ பிரையான் உள்ளிட்டோர் மணீஷ் கைதைக் கண்டித்திருக்கின்றனர். ஆனால், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு தங்களுடையதுதான் எனப் பேசும் காங்கிரஸ் கட்சியில் பேரமைதி நிலவுகிறது.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே உள்ளிட்ட சிலர் மணீஷை ஆதரித்தாலும், பிற முக்கியத் தலைவர்கள் மெளனம் காக்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பஞ்சாபில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் கைகோத்துச் செயல்படுவதாகக் காங்கிரஸ் புலம்பிவருகிறது.
அரசியல் அஸ்திரம்: அதேவேளை, எதிர்க்கட்சிகளைப் பணியவைக்க அமலாக்கத் துறை முதல் சிபிஐ வரையிலான அரசு நிறுவனங்களை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எழும் விமர்சனங்களுக்கு, இந்த நடவடிக்கை வலுசேர்ப்பதையும் மறுப்பதற்கில்லை. “நாளைக்கே மணீஷ் பாஜகவில் சேர்ந்தால், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்” என்று கேஜ்ரிவால் சொல்வதன் அர்த்தம் இதுதான்.
கடந்த ஆண்டிலிருந்தே மணீஷின் வீட்டிலும் அவரது நெருங்கிய உறவினர்களின் வீடுகளிலும் சிபிஐ சோதனைகளை நடத்திவந்தது. குஜராத், இமாச்சலப் பிரதேசத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அஸ்திரங்களாகவும் இந்தச் சோதனைகள் பார்க்கப்பட்டன.
அடுத்த குறி தெலங்கானா: இவ்விஷயத்தில் பாஜக தீவிரம் காட்ட இன்னொரு காரணம், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுடனான அரசியல் பகை. டெல்லி கலால் கொள்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேட்டில், தெலங்கானா மதுபான உற்பத்தியாளர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. விரைவில் அவர் கைதுசெய்யப்படலாம் என தெலங்கானா பாஜகவினர் கூறுகின்றனர். மணீஷ் கைதைக் கண்டித்த தலைவர்களில் சந்திரசேகர் ராவும் ஒருவர். இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதை இவற்றுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in