சாலையோர உணவுக் கடைகள்: கட்டுப்பாடு அவசியம்

சாலையோர உணவுக் கடைகள்: கட்டுப்பாடு அவசியம்
Updated on
2 min read

கையேந்தி பவன்கள், தள்ளுவண்டிக் கடைகள் என அழைக்கப்படும் சாலையோரத் தற்காலிக உணவகங்கள், மலிவு விலையில் உணவு வகைகளை விற்பனை செய்கின்றன. கூலித் தொழிலாளர்கள், வேலைக்குச் செல்வதால் சமைக்க நேரமில்லாத தம்பதிகள், கல்வி - பணி நிமித்தம் வெளியூரில் தங்கியிருப்பவர்கள், நகர்ப்புற ஏழைகள் எனப் பலரும் இந்த உணவகங்களில் பசியாறுகின்றனர்.

இத்தகைய கடைகளை நடத்துபவர்கள், பலருக்கும் கடனுக்கு உணவு வழங்கி நட்புடன் பழகுகின்றனர். அதேவேளையில், இங்கு விற்கப்படும் உணவு வகைகளின் தரம் குறித்துப் பல்வேறு கேள்விகள் உண்டு.

மலிவு விலைக்குக் காரணம்: இவற்றை நடத்துவோருக்கு நிறுவனச் செலவு, இடத்துக்கான வாடகை, மின் கட்டணம் எனப் பொதுவான செலவினங்கள் போன்ற அழுத்தங்கள் இல்லை. மூலப்பொருள்கள், மலிவு விலையில் காய்கறிகளை வாங்குவதற்கென்று தனிச் சந்தை உள்ளது. சூப்பர் மார்க்கெட் முதல் சாதாரணக் கடைகள்வரை, அன்றாடம் மிச்சமாகிவிடும் காய்கறிகளை (முழுமையாகக் கெடுவதற்குள்) வாங்கி வந்துவிடுகின்றனர்.

அசைவ உணவைப் பொறுத்தவரை, கோழி இறைச்சிதான் பிரதானம். நாமக்கல்லில் இருந்து வெளியிடங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்படும் கோழிகளில் சில, வழியிலேயே இறந்துவிடும் அல்லது கடைகளுக்கு வந்தபின் இறக்கும். அவற்றைச் சகாய விலைக்கு வாங்கிவந்து சமைத்து விற்கின்றனர்.

கள்ளச் சந்தைக்கு விற்பனைக்குவரும் ரேஷன் அரிசி, இட்லி - தோசை மாவாக மாற்றப்பட்டு - 6 நாள்களுக்குப் புளிப்பு வாசனை வராத அளவுக்குப் பாதுகாக்கப்பட்டு - விற்கப்படுகிறது. அத்தகைய மாவுகளைத்தான் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

சமீபகாலம்வரை, ஓட்டல்களில் தினமும் மீதமாகும் சமையல் எண்ணெய், மறு பயன்பாட்டுக்குச் சாலையோரக் கையேந்தி பவன் கடைகளுக்கு விற்கப்பட்டது. அதைத் தடுக்க மீதமாகும் எண்ணெய்களைத் தனியார் வாயிலாகக் குறைந்த விலைக்கு அரசு பெற்றது.

அதை வைத்து பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது. வழக்கமான ஓட்டல்களை நடத்துவோர் உணவுப் பாதுகாப்பு உரிமம், மாநகராட்சி சுகாதாரத் துறை அனுமதி போன்றவற்றைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தவறுகளை வெளிக்கொணர்கின்றனர்.

சாலையோரக் கையேந்தி பவன்கள் பெரும்பாலும் நடவடிக்கைகளுக்கு இலக்காவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தோர், கையேந்தி பவன் சுகாதாரத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் ஒரு முறை சோதனைக்குச் சென்றால், கடைகள் மறுநாள் இடம் மாறிவிடுகின்றன.

அரசு செய்ய வேண்டியவை: கையேந்தி பவனில் பயன்படுத்தப்படும் எண்ணெயையும் மறு சுழற்சிக்கு அனுமதிக்காமல் அரசே பெற வேண்டும். அவற்றுக்குப் பொது சமையல் கூடம், தண்ணீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுகாதாரமான முறையில் சமைக்கப் பயிற்சி வழங்கலாம்.

கையேந்தி பவன் நடத்துவோர் குறித்த விவரங்கள், அடிப்படை உரிமங்கள், இவர்களின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிப்பது அவசியம். மாநகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறையினர் கூட்டாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக 2006இல் மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டால், பெரிய உணவகங்கள் முதல் சாலையோர உணவகங்கள்வரை அனைத்தும் தரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த முடியும்!

- புதுமடம் ஜாபர் அலி | தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in