உளவியல் கலைச்சொற்கள்: ஆக்கமும் வழுவும்

உளவியல் கலைச்சொற்கள்: ஆக்கமும் வழுவும்
Updated on
2 min read

சமீபத்தில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் என் கவனத்தை ஈர்த்த நூல்களில் ஒன்று, ‘உளவியல் கலைச்சொற்கள்’ என்ற கையேடு. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இக்கையேட்டினை வெளியிட்டிருக்கிறது.

தொழில்சார் சிறப்புத் துறைகளில் தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்குவது ஒரு சிறந்த பணியாகவும், இளம் தலைமுறையினருக்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் பயனுள்ள பொக்கிஷமாகவும் அமையும்.

கூடவே, கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்வதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆயினும், இந்தக் கையேட்டை வாசித்து முடித்தபோது எனக்குப் பெருத்த ஏமாற்றமே எஞ்சியது. பிழைகள், முழுமையின்மை, பொருத்தமற்ற மொழியாக்கம் போன்றவைதான் ஏமாற்றத்துக்குக் காரணம்.

பல்வேறு தவறுகள்: இந்நூலில் Emotion, Depression, Schizophrenia, Vicious cycle போன்ற பல முக்கிய உளவியல் சொற்கள் காணப்படவில்லை. பல அச்சுப் பிழைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, Trauma என்ற சொல் ‘அதிர்ச்சிக்குப் பின் ஏற்படும் உள அழுத்தக் கோளாறு’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, Juvenile என்ற ஒற்றைச் சொல் ‘இளங்குற்றவாளி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இதற்கு நிகரான ஆங்கிலச் சொற்றொடரானது Juvenile delinquent ஆகும். அதாவது, delinquent என்ற சொல் விடுபட்டுள்ளது. கூட்டு நனவிலி (Collective consciousness) என்ற சொல் ‘கூட்டு நனவிலா’ என்று சுட்டப்படுகிறது.

மிக முக்கியமாக, பல ஆங்கிலக் கலைச்சொற்கள் முற்றிலும் தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் - (பொருத்தமான சொற்கள் அடைப்புக் குறிகளில் தரப்பட்டுள்ளன): Grief – கொடுந்துயரம் (இழப்புத் துயரம்); Reading ability – படிப்புத் திறமை (வாசிப்புத் திறன்; ‘படித்தல்’ என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் studying); Hybrid – கலப்பு மணம் (கலப்பினம்); Amnesia – மறதிநோய் (மறதி); Anxiety என்ற சொல்லுக்குக் கவலை, தவிப்பு என்ற சொற்கள் தரப்பட்டுள்ளன. இவை பொருத்தமானவையே. ஆனாலும், ‘பதற்றம்’ என்ற சொல்லையும் இவற்றோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

Dementia praecox என்ற சொல் மனச்சிதைவு (Schizophrenia) என்ற மனநோயைக் குறிக்கப் பயன்படுத்தப்படாது. உண்மையில், இந்தச் சொல் ஒரு நூற்றாண்டு காலமாக வழக்கில் இல்லை. ஆனால், இந்தக் கையேட்டில் இது ‘டிமென்சியா’ என்று ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், Schizophrenia என்ற சொல் ஏனோ கையேட்டில் காணப்படவில்லை.

Delusion என்ற சொல் திரிபுணர்வு என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் தவறான ஓர் எண்ணத்தை அல்லது நம்பிக்கையை ஒருவர் விடாப்பிடியாகக் கொண்டிருப்பதைக் குறிக்கும் சொல்லே Delusion (A delusion is a fixed, persistent false belief with no basis in reality). எனவே, பிறழ்நம்பிக்கை என்ற சொல்லே இதற்குப் பொருத்தமானது. ஆனால், இந்த நூலில் அது திரிபுணர்வு என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் உணர்வு அல்ல, நம்பிக்கை சார்ந்தது.

அனுபவத்தில் கண்டது: Paranoia என்ற சொல் கருத்துத் திரிபுநிலை, திரிபுநிலை என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஒருவர் தனக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறது என்ற அச்சம் கலந்த விழிப்புநிலையையே குறிக்கும். இயன்றவரை அன்றாடம் பாவிக்கப்படும் சொற்களைக் கலைச்சொற்களாகப் பயன்படுத்துவது நல்லது.

எனது அனுபவத்தை இங்கே எடுத்துக்கூறுவது பயனுள்ளதாக இருக்கும். Age related memory loss (இது வயது முதிர்ந்தோருக்கு ஏற்படும் இயல்பான மறதியைக் குறிக்கும்) என்ற சொற்றொடருக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தேடிக்கொண்டிருந்தபோது, இதை நேருக்கு நேர் மொழிமாற்றம் செய்வதானால் ‘வயதுசார்ந்த மறதி’ என்ற தொடர்தான் பொருத்தமாக இருக்கும்; இதில் தவறில்லை.

ஆனாலும், ஒரு சமயம் நான் ‘மூப்பு மறதி’ என்ற சொல்லைக் காண நேர்ந்தது. அதுவே மிகப் பொருத்தமானதும் தமிழ் நடைக்கு எற்றதாகவும் உள்ளதாக எனக்குத் தோன்றியது. சட்டெனப் புரியும்படியும் அமைந்துள்ளது. எனவே, மூப்பு மறதி என்ற தொடரைப் பாவிப்பது என்று முடிவுசெய்தேன்.

நுட்பமான கருத்துகளைக் குறிக்கும் கலைச்சொற்களை மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்பதை எல்லோரும் அறிவர். அது இந்த நூலாக்கத்தில் முழுமை பெறவில்லை. இன்னுமொன்று, இந்தக் கையேட்டை உருவாக்கிய குழுவுடன் தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி ஒன்று தரப்படாதது, மிகப்பெரிய குறையாக உள்ளது. அவர்களுடன் தொடர்புகொள்ள இயலாததாலேயே இவற்றைச் சுட்டிக்காட்டி கட்டுரை எழுத வேண்டியதாகிவிட்டது!

- மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in