

இலக்கண வகுப்பில் இலக்கண நூலின் நூற்பாக்களை உரையாசிரியர் தரும் சான்றுகளைக் கொண்டு விளக்குவது நீண்ட காலமாக இருந்துவரும் கற்பித்தல் நடைமுறை. சிலர் சமகால எழுத்து, பேச்சுவழக்கிலிருந்து சான்று காட்டியும் விளக்குவர்.
சொற்களின் புணர்ச்சி, திரிபு ஆகியவற்றைத்தான் வெவ்வேறு ஈறுகளைக் கொண்டு விரிவாகக் கற்பிப்பார்கள். இதன் நோக்கம் மொழியின் அமைப்பைப் புரியவைத்தல்.
அது புரிந்துவிட்டால் பழம்பாட்டுகளின் பொருளை விளங்கிக்கொள்ள முடியும் என்கிற கணிப்பின் அடிப்படையிலான நிலைப்பாடு அது. இந்த முறைமை இனியும் தொடரும் என உறுதியாகச் சொல்வதற்கில்லை.
ஏனென்றால், மொழிக்கல்வியின் பயன், நோக்கம், கற்றல்-கற்பித்தல் வழிமுறைகள் இன்றைக்கு முற்றாக மாறிவிட்டன. காகிதமற்ற வகுப்பறைச் சூழல் வெகுதூரத்தில் இல்லை. அதில் எழுதும் வேலைக்கு அவசியமில்லை. திறன்பேசிகளின் திரைகளைக் கையாளத் தெரிந்தால் போதுமானது.
தமிழ்ச் செயலிகள்: தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள் தமிழ் வகுப்புகளில் இலக்கணத்துக்குச் செயலிகளைப் (Tamil Grammar Apps) பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.
தேர்வு நடத்துவது, மதிப்பெண் வழங்குவது, தேர்வு முடிவைப் பெற்றோருக்கு அனுப்பிவைப்பது, மதிப்பெண் பட்டியல் தயாரித்துப் பராமரிப்பது எனச் சில ஆசிரியர்கள், அலுவலர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளைத் துல்லியமாகவும் குறைந்த நேரத்திலும் ஒரே ஒரு செயலி செய்துவிடுகிறது. நீண்ட காலமாக இருந்துவந்த ‘பாடப்புத்தகம் – ஆசிரியர் – மாணவர்’ என்கிற நடைமுறையில் பாடப்புத்தகத்தின் இடத்தைச் செயலிகள் கைப்பற்றிவருகின்றன.
தமிழ் இலக்கணம் சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட வகைகளில் செயலிகள் வந்துவிட்டன. இவற்றை இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். வேறு மொழிகளின் வழியாகத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதற்கான வசதிகளும் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆர்வத்தின் பெயரில் தமிழ் கற்க வந்தவர்கள், இந்தச் செயலிகள் வழியாகப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இப்போது வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வேலைசெய்ய வருவோரில், படித்தவர்களிடம் இந்தச் செயலிகளின் புழக்கம் அதிகமிருக்கிறது. தமிழ் மொழியின் அடிப்படைகளை விருப்ப மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறவர்களுக்கு இவ்வகைச் செயலிகள் பெருமளவில் துணைபுரிகின்றன.
வெற்றிபெறும் புள்ளி: சில செயலிகளில் தமிழ் அகராதிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவை, சொல்லுக்குப் பொருள் தருவது மட்டுமல்லாமல், தமிழ்ச் சொல்லையும் பிறமொழிச் சொல்லையும் பிரித்துக் காட்டுகின்றன. குறிப்பிட்ட அந்தப் பிறமொழிச் சொல் எந்த மொழியிலிருந்து, எந்த நூற்றாண்டில், யாரால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டது என்கிற தகவலையும் தருகிறது. இது மொழி / இலக்கணக் கற்பித்தலில் மாபெரும் வளர்ச்சி.
இச்செயலிகள் தொல்காப்பிய, நன்னூல் விதிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அந்நூல்களைக் கொண்டு கற்பிக்கும்போது இருக்கும் ஒருவித இறுக்கம், இச்செயலிகளைப் பயன்படுத்தும்போது இல்லை. மாறாக, அவை பெருமளவு விளையாட்டுச் சாயலைக் கொண்டிருக்கின்றன. அது கற்போரை /மாணவர்களை உற்சாகத்துடன் இலக்கண அறிதலில் ஈடுபட வைக்கிறது. இந்தப் புள்ளிதான் செயலிகள் வெற்றிபெறுகிற இடம்.
மாணவர்களின் அறிதிறன் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஆசிரியர்கள் தம்மைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். புத்தகங்களை விடுத்துச் செயலிகள்வழி கற்பிப்பதால் இன்றைய மாணவர்களுக்கு அவர்கள் விரும்புகிற வகைகளில் இலக்கணத்தைக் கொண்டுசெல்ல வாய்ப்புஉருவாகியிருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் இப்புதிய தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும்போது, அவர்களின் கைகளில் புதிய உலகம் சுழன்றுகொண்டிருக்கும்.
- ஞா.குருசாமி | தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in