Published : 03 Sep 2017 10:05 am

Updated : 03 Sep 2017 10:05 am

 

Published : 03 Sep 2017 10:05 AM
Last Updated : 03 Sep 2017 10:05 AM

காலத்தின் வாசனை: குளியல் ஒரு பின்குறிப்பு!

அவசரமாகவும் அரைகுறையாகவும் குளித்துவிட்டு வருபவர்களைப் பார்த்து முன்பெல்லாம் “என்ன காக்காய்க் குளியல் போட்டாச்சா?” என்று கேலியாகக் கேட்கப்படும் வாக்கியமே இன்று வாழ்க்கையாகிப்போனது!

காக்காய் குளிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? தேங்கிய நீரில் காக்கை தன் மூக்கை இப்படியும் அப்படியுமாக ஒரு தேய்ப்புத் தேய்க்கும். தலையிலிருந்து நீர்த்துளிகள் சிதறும். காலை உயர்த்திப் பாதி விரித்த விசிறியாகச் சிறகை உயர்த்தி ஒரு சிலுப்பல் அவ்வளவுதான் பறந்துவிடும்! இதுதான் காக்காய்க் குளியல்!


அலுவலகம் போகிற அவசரத்தில் பலரும் காக்கைக் குளியல் போட்டுவிட்டுத்தான் ஓட வேண்டியிருக்கிறது!

என் நண்பர் ஒருவர் ‘டவல்பாத்’தை சிபாரிசு செய்வார். பூத்துவாலையைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து உடம்பெல்லாம் துடைத்தால் சரியாப் போச்சு. குளித்த திருப்தி கிடைத்துவிடுமாம்!

நினைத்துப்பார்க்கிறேன். சிறுவயதில் தஞ்சாவூர் கீழவாசலில் டபீர்குளம் தெருவுக்குக் குளிக்கப் போவோம். மிகப்பெரிய பொதுக்கிணறு ஒன்று அங்கிருந்தது. கிணத்தின் குறுக்கே நீளமான கட்டைகளில் ஏராளமான சகடைகள் தொங்கும். ஆண்கள் கூட்டம் கூட்டமாகத் தண்ணீரைச் சேந்திக் குளிப்பார்கள். வாளிகளின் இடைவிடாத கணகணச் சத்தம். பக்கத்தில் பெரிய சிமிட்டித் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வைப்பார்கள். தண்ணீர் இறைக்க முடியாத முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்த ஏற்பாடு. தலை நிறைய சோப்பு நுரையுடன் பூத மூஞ்சிகளுடன் காட்சியளிப்பவர்கள் கரளைகரளையாகக் கன்னங்கரேலென்று உடம்பெல்லாம் எண்ணெய் பூசிக்கொண்டு நிற்பவர்களைப் பார்த்தால் இவர்களெல்லாம் குளிக்க வந்தவர்களா? அல்லது குஸ்தி போட வந்தவர்களா? என்ற சந்தேகம் வந்துவிடும்.

ஆற்றுக்குக் குளிக்கப் போனால் மத்தியானம் சாப்பிடத்தான் வீடு திரும்புவோம்! எங்கள் தெரு வழியேதான் குளித்துத் திரும்புவார்கள். தலைக்கு மேல் வேட்டியைப் பிடித்துக்கொண்டு சுடுமணல் காலில் ஒட்ட, ஓட்டமும் நடையுமாகப் போவார்கள். வீடு திரும்புவதற்குள் வேட்டி காய்ந்துவிடும்!

பெண்கள் படித்துறை!

அம்மா குளத்துக்குக் கூட்டிப்போவார். முதலில் என்னைக் குளிக்கவைத்துப் படிக்கட்டில் உட்கார வைப்பார். அங்கு பெண்கள் படித்துறை என்று எழுதியிருக்கும். எனக்கு அங்கு உட்காரவே கூச்சமாக இருக்கும். அம்மா துவைத்த துணிகளைத் தொப்தொப்பென்று மடியில் போடுவார். மஞ்சளும் சீயக்காய் வாசனையும் தைல வாசனையுமாக பெண்கள் படித்துறை வாசனை மனசைக் கிறங்க அடிக்கும். படிக்கட்டுகளில் பச்சை வெல்வெட்டாகப் பாசி படர்ந்திருக்கும். படித்துறையில் உட்கார்ந்துகொண்டு யாரோ துணி துவைக்கும் ‘தொப்தொப்’ சப்தத்தைக் கேட்டுக்கொண்டு ஒரு வாழ்நாளையே கழித்துவிடலாம்.

ஆனைக்கால் அண்டா!

வீட்டு முற்றத்தில் குளிப்பதற்காக ஒரு பெரிய அண்டா இருக்கும். அதன் பெயர் ஆனைக்கால் அண்டா. அதில், வெந்நீர் விளாவி வைத்திருப்பார்கள். பெரும்பாலும் எங்களுக்கு வெந்நீர்க் குளியல்தான்.

‘குளியல் தாமஸம், சாப்பாடு சீக்கிரம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது நிதானமாக அழுக்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். வேறேதும் பேசாமல், சிந்திக்காமல் சாப்பிட்டுச் சட்டென்று முடிக்க வேண்டும். மார்கழி நீராடல், ஐப்பசியில் வருகிற துலாஸ்நானம், கடைமுழுக்கு, கார்த்திகை மாசமானால் முடவன் முழுக்கு, குடகில் தலைக்காவேரிக் குளியல், தீபாவளி சமயம் வீட்டுக்கு வீடு கங்கா ஸ்நானம், 172 வருஷத்துக்கு ஒரு முறை வரும் காவேரி புஷ்கரம் என்று குளியலைத் தெய்வீக அம்சமாகக் கொண்டாடுபவர்கள் நாம்.

குளியலறைக்கு வெளியே பாடவும்!

குளியலறையில் பாடுபவர்கள் உண்டு. ஆனால், குளியலறைக்கு வெளியே பாடச்சொல்லிக் கேட்டவர்கள் உண்டா? காந்தியடிகள் வாழ்க்கையில் இப்படி ஒரு விசித்திரமான சம்பவம். மதுபென் காந்தியின் நாட்குறிப்பில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

“இன்று ஜோதிகாராய் என்ற பாடகி தனது பக்திப் பாடல்களை காந்தியடிகளுக்கு முன்னால் பாடிக்காட்ட விரும்பினார். காந்தியடிகளும் இதற்கு சம்மதித்தார். ஆனால், காந்தியடிகளின் அன்றைய தினத்தின் வேலை அட்டவணையில் இதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆகவே, தான் குளியலறையில் குளிக்கும்போது அந்தப் பாடகியை வெளியே இருந்தபடி பாடுமாறும், அப்போது கேட்பதாகவும் தெரிவித்தார். ஜோதிகாராய் தனது தேனினும் இனிய குரலில் அந்த தெய்வீகப் பாடல்களை குளியலறைக்கு வெளியே நின்றபடி பாடினார். காந்தியடிகளும் குளித்தபடியே கேட்டு மகிழ்ந்தார்”

குளித்துக்கொண்டே இருக்கிறார் அப்பா!

பால்யத்தில் ஆற்றையும் குளத்தையும் எனக்கு அறிமுகப்படுத்திய அப்பாவை மாநகரவாசியாக்கிக் குளியலறையை அவருக்கு அறிமுகப்படுத்தும் அவலமும் நேர்ந்தது.

அப்பா ஒருநாள் பரிதாபமாகச் சொன்னார்;

“நம்ம ஊர் குடமுருட்டி ஆத்துல குளிக்கணும்போல இருக்குடா!”

“தஞ்சாவூர்ல ஆறு, வாய்க்கால், குளம் எல்லாம் வறண்டு கெடக்கு அப்பா!” என்றேன். பெருமூச்செறிந்தார். நடக்க முடியாத அப்பாவைக் கைத்தாங்கலாகக் குளியலறைக்குக் கூட்டிப்போனேன். வாளியில் இருந்த வெந்நீரை எடுத்து ஒவ்வொரு செம்பாக அவர்மீது ஊற்றினேன். ஒவ்வொரு செம்புக்கும் ஆகா என்றார். வெந்நீரின் இதம். மகன் ஊற்றுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி. ஆஹா! ஆஹா! ஒவ்வொரு ஆஹாவிலும் எத்தனை அன்பு! எத்தனை ஆசீர்வாதம்!

வாளித்தண்ணீர் தீர்ந்துவிட்டது. அப்பாவின் வாழ்வும் முடிந்துவிட்டது.

ஆஹாக்கள் மட்டும் என்னை விட்டுப் போகவே இல்லை. ஒவ்வொரு செம்பாக ஊற்றிக்கொண்டே இருக்கிறேன்.

ஆஹா! ஆஹா! என்று குளித்துக்கொண்டே இருக்கிறார் அப்பா!

-தஞ்சாவூர்க் கவிராயர்,
‘தெருவென்று எதனைச் சொல்வீர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x