

ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான சேவை நிறுவனமாக மேம்படுத்தும் நோக்கில் ‘விஹான் ஏ.ஐ’ எனும் செயல்திட்டத்தை டாடா குழுமம் செயல்படுத்திவருகிறது. அதன் நீட்சியாக, புதிய விமானங்களுக்கான கொள்முதல் ஆணை ஒன்றை ஏர்பஸ், போயிங் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா வழங்கியுள்ளது.
470 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான இந்தக் கொள்முதல் ஆணையின் மதிப்பு ரூ 6.4 லட்சம் கோடி. உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவரையிலான கொள்முதல் ஆணைகளில் இதுவே பெரியது.
தற்போதைய நிலை: தற்போது ஏர்பஸ், போயிங் ஆகியவற்றின் தயாரிப்பில் 140க்கும் மேற்பட்ட விமானங்களை ஏர் இந்தியா இயக்கிவருகிறது. இவற்றில், பி777-200, பி777-300, பி787-800 ட்ரீம்லைனர் ஆகிய போயிங் விமானங்களும், ஏ319, ஏ320, ஏ320 நியோ, ஏ321 ஆகிய ஏர்பஸ் விமானங்களும் அடக்கம்.
புதிய விமானங்கள்: ஏர் இந்தியா வாங்கவிருக்கும் 470 விமானங்களில், 400 விமானங்கள் குறுகிய அமைப்பு அல்லது உள்ளே நீளவாக்கில் ஒற்றை நடைபாதை கொண்டவை; அருகிலுள்ள நாடுகளுக்கான பயணத்துக்கு ஏதுவானவை. 70 விமானங்கள் அகன்ற அமைப்பு அல்லது உள்ளே நீளவாக்கில் இரட்டை நடைபாதை கொண்டவை; தொலைதூரப் பயணத்துக்கு, முக்கியமாகச் சர்வதேசப் பயணத்துக்கு ஏதுவானவை.
கூடுதல் விமானங்களைப் பெறும் சாத்தியம் உண்டா? போயிங் நிறுவனத்துடனான ஏர் இந்தியாவின் கொள்முதல் ஒப்பந்தம், மொத்தம் 70 விமானங்களைக் கூடுதலாகப் பெறும் விருப்பத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதேபோன்ற சாத்தியக்கூறு ஏர்பஸ் உடனான ஒப்பந்தத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை.
ஆனால், பிப்ரவரி 23 அன்று ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால், ஏர் இந்தியாவின் ஒப்பந்தம் 370 கூடுதல் விமானங்களை வாங்குவதற்கான விருப்பத்தை உள்ளடக்கியது என்று தெரிவித்தார்.
சில புதிய விமானங்களில் உள்ள வசதிகள் ஏர்பஸ் 350: இதில் அதிகபட்சமாக 480 பயணிகள் அமரமுடியும்; இந்த விமானத் தால் 18,000 கி.மீ. வரை இடைநிறுத்தாமல் பறக்க முடியும்.
போயிங் 787 ட்ரீம்லைனர்: 248 முதல் 336 பயணிகள் அமர முடியும்; இந்தக் குடும்பத்தின் சிறிய விமானத்தால் 13,530 கி.மீ. இடைநிறுத்தாமல் பறக்க முடியும்; பெரிய விமானத்தால் 11,730 கி.மீ. பறக்க முடியும்.
போயிங் 777-9: ஏர் இந்தியாவின் மிகப் பெரிய விமானமாகஇதுவே இருக்கும். 426 பேர் அமர முடியும். இடைநிறுத்தாமல் 13,500 கி.மீ. பறக்கும் திறன் கொண்டது; 10% குறைந்த எரிபொருள் பயன்பாடும், 10% குறைந்த கார்பன் உமிழ்வும் கொண்டது.
போயிங் 737 Max: போயிங்கின் சிறந்த விமானமாக இது கருதப்படுகிறது; ஏ320 நியோ விமானத்தின் போட்டியாளர்; இதில் 230 பயணிகள் அமர முடியும்; இதனால் 6,500 கி.மீ. வரை பறக்க முடியும்.
இந்திய வருகை: புதிய விமானங்களின் முதல் தொகுதி இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. முதல் தொகுதியில், 25 பி737-800 ரக விமானங்களும், 6 ஏ350-900 ரக விமானங்களும் இருக்கும். இருப்பினும், 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்தே விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் வேகம் அதிகரிக்கும்.
ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்: ஒரு காலத்தில் தரமான சேவைக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றதாக ஏர்இந்தியா இருந்தது. அதன் நற்பெயர் 2000-த்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட நிதிச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு அரசிடமிருந்து இந்தநிறுவனம் 2022இல் டாடாவுக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்திய பெரும் ஒப்பந்தங்கள், இழந்த நற்பெயரை மீட்டெடுக்கவும், மீண்டும் வானத்தில் ஆதிக்கம் செலுத்தவும் ஏர் இந்தியாவுக்கு உதவும்.