

தேர்வில் மாணவர்கள் எழுதும் விடைகள் தெளிவாக இருந்தால்தான், உரிய மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. எனில், கேள்விகளும் தெளிவாகத்தானே இருக்க வேண்டும்?! சில நேரம் அதில் தவறுகள் நிகழ்வது உண்டு.
எழுத்துப் பிழைகள் முதல் தகவல் பிழைகள்வரை இடம்பெறுவதுடன், சிக்கலான வாக்கிய அமைப்புகளும் மாணவர்களைச் சிரமத்தில் ஆழ்த்திவிடும். இந்தக் குழப்பம் சமீபத்திலும் நடந்திருக்கிறது. மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) படிக்கும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 24 அன்று தொடங்கின.
இதில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்த் தேர்வின்போது வழங்கப்பட்ட வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது தெரியவந்திருக்கிறது.
‘பலவுள் தெரிக’ பகுதியின் முதல் பத்தியிலேயே நிறையப் பிழைகள் இருந்தன. 10ஆம் வகுப்பு மாணவர்கள் படித்துப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் வகையில் அல்லாமல், மிக நீண்ட தொடர்களாக வாக்கிய அமைப்புகள் இருந்தன. வேற்றுமை உருபுகள் அற்ற சொற்களில் பொருள் தெளிவில்லாமல் இருந்தது.
குடவோலை முறை பிற்காலச் சோழர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்தது என்பதுதான் வரலாறு. ஆனால், இப்பத்தியில் தொல்காப்பியர் காலத்தில் குடவோலை முறை இருந்ததாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை வைத்து மாணவர்கள் விடை எழுதுமாறும் பணிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையே தவறு.
அதில் இன்னொரு தவறாக, குடவோலை முறையில் தலைவர்களை வீரமகளிர் தேர்ந்தெடுத்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தலைவர்கள் என்றால் இங்கு அரசர்களைப் பற்றிச் சொல்லப்படுகிறதா அல்லது கணவர் என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறதா எனப் புரியவில்லை. ‘கி.பி. 800 காலங்களிலேயே’ என்று எழுதப்பட்டிருப்பதும் மாணவர்களைக் குழப்பும் வேலை. இதை ‘9ஆம் நூற்றாண்டிலேயே’ என்று எளிமையாகச் சொல்லியிருக்கலாம்.
பத்திக்குக் கீழ் கேட்கப்பட்ட வினாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கொள்குறி விடைகளில் ஒன்று: ‘வீட்டில் சுவரில்’. இதில் ‘வீட்டின் சுவரில்’ என்று ‘இன்’ என்ற வேற்றுமை உருபு பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில் ‘இல்’ என்ற வேற்றுமை உருபு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில்’ என்று இருக்க வேண்டிய தொடரில் ‘தலைவர்களை தேர்ந்தெடுப்பதில்’ என ஒற்றுமிகாமல் இடம்பெற்றிருக்கிறது.
வெறுமனே 14 வரிகளில் அமைந்த பத்தியிலேயே இப்படிப் பல்வேறு பிழைகளும் குழப்பங்களும் தென்படுகின்றன. இப்படியான பிழைகளுக்கு யார் பொறுப்பு? வினாத்தாள் தயாரிப்பில் மாணவர் நலன் கவனத்தில் கொள்ளப்படாதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது? இத்தனை பிழைகள் மலிந்து கிடக்கும் வினாத்தாளைத் தமிழாசிரியர்கள் விவாதித்து எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
ஒரே ஒரு வினாவில் இதுபோன்ற குளறுபடிகள் இருந்தாலும் அதைப் பற்றிய குழப்பம் மாணவர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடும். யாரோ ஒருசிலர் பொறுப்பின்றிச் செயல்படுவதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
மொழிப்பாடத்தின் மீதான கவனத்தை சி.பி.எஸ்.இ. வரும் காலத்தில் அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் குழப்பமின்றித் தேர்வெழுதப் பிழையில்லாத தமிழ் வினாத்தாள்களை உருவாக்க வேண்டும்.
- சஷாங்கன்