Published : 21 Jul 2014 09:42 AM
Last Updated : 21 Jul 2014 09:42 AM

மத்திய கிழக்கில் யார் பக்கம் நியாயம்?

இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையிலான போர்குறித்து நிலவும் தவறான கருத்துகளும், உண்மையும்.

இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியில் மீண்டும் ஊடுருவியதால் அப்பாவிகள் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துவருகிறது; இரு தரப்பிலிருந்தும் அரசியல்ரீதியிலான சாடல்கள் ஒரே மாதிரியாக ஒலிக்கின்றன. இருதரப்பினருக்கும் பொதுவாக, தவறான கருத்துகள் சில உள்ளன. அவற்றைப் போக்குவது நம் கடமை.

கருத்து1:

இப்போது நடப்பது இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை அல்ல; நன்மைக் கும் - தீமைக்கும், சரியான கருத்துகளுக்கும் - தவறான கருத்துகளுக்கும் இடையிலான மோத லாகும். நம்மால் சும்மா இருக்கவும் முடியாது, சமரசம் செய்துவைக்கவும் முடியாது; வேறு வழியில்லை, எப்படியாவது நாம் செயல்பட்டே ஆக வேண்டும்.

நாம் நினைப்பதற்கு மாறாக, இருதரப்பிலும் கணிச மாக நியாயம் இருக்கும் நிலையில் இந்த மோதல்கள் நடைபெறுகின்றன. இந்த மோதலினால் பாதிக்கப்படுவது அப்பாவிக் குடிமக்கள்தான் என்பதையும், இரு தரப்பிலும் நியாயங்கள் இருப்பதைப் பார்க்க வேண்டும் என்பதையும் மறந்து, எதிர்த் தரப்பாரைத் தீயவர்களாகச் சித்திரிக்கும் போக்கு மட்டுமே இரு தரப்பிலும் தொடர் கிறது. இதனால், அடுத்தடுத்து ராணுவரீதியிலான மோதல்கள் அதிகரித்து, இருதரப்பிலும் மக்களுக்குச் சொல்ல முடியாத துயரங்கள் ஏற்பட்டன.

ஹமாஸ் ராக்கெட்டுகள் எங்களைத் தாக்கக் கூடாது, எங்களை யாரும் கடத்தக் கூடாது, பயங்கரவாதிகள் எங்கள் மீது குண்டுகளை வீசக் கூடாது என்று கோரும் உரிமை இஸ்ரேலியர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. அதே வேளையில், பாலஸ்தீனர்கள் தங்களுக்கென்று தனி நாடு வைத்துக்கொள்வதற்கும், தங்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்துகொள்வதற்கும், தங்களுக்கு வேண்டிய தொழிலைச் செய்துகொள்ளவும், வன்முறைகளுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக வாழவும் -மற்றவர்களுக்குக் கீழே இரண்டாம்தரக் குடிமக்களாக ஒதுக்கப்படாமல் இருக்கவும் உரிமை இருக்கிறது.

இரு தரப்பிலும் ஏராளமான நல்லவர்கள் இருக் கின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கும் சமூகத் துக்கும் நன்மைகளை நாடுவோர்தான் அவர்கள். இருதரப் பிலும் பகைமையை மூட்டுகிற, குறுகிய கண்ணோட்டம் உள்ள தீவிரப்போக்கு உள்ளவர்களும் இருக்கின்றனர்.

இருதரப்பிலும் உள்ளவர்கள் நல்லவர்களே, அவரவர் நன்மைக்காகத்தான் போராடுகின்றனர் என்றால், அவ்விரு சமூகத்திலும் தீயவர்களே இல்லை என்று அர்த்தமாகிவிடாது. ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக மட்டுமல்ல, தன்னுடைய மக்களுக்கு எதிராகவும் வன்முறையைத்தான் பயன்படுத்துகிறது. இஸ்ரேலியர்களுக்கும் கடும் ஆள்சேதம் ஏற்பட வேண்டும் என்று தாக்குதலை நடத்தும் ஹமாஸ், தங்கள் தரப்பிலும் ஆள்சேதம் அதிகம் ஏற்படுவதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. பாலஸ்தீன அரசைப் போல ஹமாஸ் இயக்கம் ஊழலில் திளைக்கவில்லை. ஆனால், தன்னை எதிர்ப்பவர்கள் பாலஸ்தீனர்களே ஆனாலும் கொடூரமாக அடக்குகிறது. ஹமாஸ் இயக்கத்துக்கு உள்ளூரில் அவ்வளவாக நல்ல பெயரும் ஆதரவும் கிடையாது. அமெரிக்காவிலும் ஐரோப் பாவிலும் கல்லூரி வளாகங்களில் ஹமாஸுக்கு இருக்கும் ஆதரவு, காஸாவில் அந்த மக்களிடையே இருப்பதைவிட அதிகம்.

இஸ்ரேலைச் சேர்ந்த வலதுசாரித் தலைவர்கள், பாலஸ்தீன ஆணையத்தின் அதிபரும் இஸ்ரேலின் சிறந்த நண்பராக இருக்கக்கூடியவருமான முகம்மது அப்பாஸுக்கு அரசியல்ரீதியாகச் செல்வாக்கு இல்லாதபடிக்கு அவரை அவமதித்துப் புறக்கணிக் கின்றனர். பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் ஏற்படுத் தும் குடியிருப்புகள் அனைத்தும் பாலஸ்தீனப் பயங்கர வாதிகளின் கைகளையே வலுப்படுத்துகின்றன.

கருத்து2:

திருப்பி அடித்தால்தான் நம்முடைய பலம் எதிரிக்குத் தெரிகிறது, எதிரி அடிக்கும்போது திருப்பி அடிக்காமல் என்ன செய்ய?

இஸ்ரேலியத் தலைவர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு முதல் அனைவருமே தங்களுடைய மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காஸாவை ஊடுருவுவதும், சுரங்கப்பாதைகளை வெடிகுண்டு வீசித் தகர்ப்பதும்தான் ஒரே வழியென்று நினைக்கின்றனர். அப்படிச் செய்யும்போது, அப்பாவி மக்களும் குழந்தை களும் பெண்களும் இறப்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான் என்றாலும், தவிர்க்க முடியாது என்று நினைக்கின்றனர்.

காஸாவில் உள்ளவர்களோ, நாம் ஏற்கெனவே திறந்தவெளி சிறைச்சாலையில்தான் இருக்கிறோம், இஸ்ரேல் நம்முடைய நடமாட்டத்தைக்கூடக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறது. அதன் பொருளாதாரத் தடைகள் நம்மை மூச்சுமுட்ட வைக்கின்றன. இங்கிருந்து சில ராக்கெட் குண்டுகளை வீசுவதுதான் நாம் சுதந்திரம் பெறச் செய்யக்கூடிய ஒரு முயற்சி. அதில் சில இஸ்ரேலியக் குழந்தைகள் இறந்தால் துயரம்தான் - ஆனால், அதைப் போல நூறு மடங்கு பாலஸ்தீனக் குழந்தைகள் இறக்கின்றனவே என்று நினைக்கின்றனர்.

இந்தக் காட்சிகளை நாம் ஏற்கெனவே பார்த்திருக் கிறோம். தங்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து லெபனான் மீது 1982, 2006-லும், காஸா மீது 2008-லும் இஸ்ரேல் ஏற்கெனவே படையெடுத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இஸ்ரேலிய வலதுசாரிகள் அதை வரவேற்று உற்சாகப்படுத்தினர். இந்தத் தாக்குதல்கள், சில தற்காலிக ராணுவ வெற்றிகளை மட்டுமே இஸ்ரேலுக்குத் தந்தனவே தவிர, அவற்றில் ஏராளமான அப்பாவிகள் உயிரிழந்தனர். வேறு எந்தப் பிரச்சினையையும் அவை தீர்த்துவிடவில்லை.

அதே போல பாலஸ்தீனப் பயங்கரவாதமும் பாலஸ்தீன மக்களின் துயரங்களைப் பெருக்கியதல்லாமல், வேறு எதையும் சாதித்துவிடவில்லை. இஸ்ரேலைத் திருப்பித் தாக்காமல் காந்திய வழியில் அகிம்சைப் போராட்டங்களை பாலஸ்தீனர்கள் கைக்கொண் டிருந்தால், அவர்கள் அடைந்துவரும் துயரம் உலக அளவில் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி யிருக்கும். பாலஸ்தீனர்களுக்குச் சுதந்திரமும் தனி நாடும் கிடைத்திருக்கும். பாலஸ்தீனர்களில் சிலர் இதை உணர்ந்துள்ளனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபட முயல்கின்றனர். ஆனால், பாலஸ்தீன விடு தலை ஆதரவாளர்களோ இஸ்ரேலியர்கள் மீது கல்வீசுவதும்கூட அகிம்சைதான் என்று நினைக்கின்றனர்.

கருத்து3:

உங்களுடைய குடும்பம் காஸாவிலோ இஸ்ரேலிலோ இருந்தால், எதிரிகளால் தாக்கப்படக்கூடிய வாய்ப்பும் இருந்தால், சும்மா உட்கார்ந்துகொண்டு பாட்டு பாடிக் கொண்டிருப்பீர்களா?

நம்மில் யாராவது தெற்கு இஸ்ரேலில் வாழ்ந்து, ஹமாஸ் வீசும் ராக்கெட் குண்டுகள் நம் வீட்டில் விழுந்து வெடித்து மரண பீதியில் ஆழ்ந்தால், காஸாவை ராணுவம் ஊடுருவுவதைக் கைதட்டி வரவேற்போம். நம்மில் யாராவது காஸாவில் குடியிருந்தால், நடமாட்டம் இல்லாமல் இஸ்ரேலிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டால், இஸ்ரேலியர்களின் வான் தாக்குதலில் நம்முடைய உறவினர்களை ஒவ் வொருவராகப் பலிகொடுத்தால், நம்முடைய பகுதியி லிருந்து இஸ்ரேல் குடியிருப்புகள் மீது ராக்கெட் குண்டுகள் ஏவப்படும்போது உற்சாகக் குரலெழுப்பி வரவேற்போம். அது மனித இயல்பு.

ஆகையால்தான் கூறுகிறோம், இருதரப்பும் தாக்குதலை நிறுத்தி, மோதலைக் கைவிடத் தேவை யான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் விலக வேண்டும். ஹமாஸ் இயக்கத்தவர் ராக்கெட் குண்டுகளை ஏவாமல் இருக்க வேண்டும். ஹமாஸை அரசியல்ரீதியாகச் செல்வாக்கிழக்க வைக்க, இஸ்ரேல் ராஜதந்திர வழிமுறைகளைக் கையாள வேண்டும். சர்வதேசக் கண் காணிப்பில் காஸா பகுதியில் தேர்தல் நடைபெறவும் பாலஸ்தீன ஆணையத்திடம் அதிகாரத்தை முழுதாக ஒப்படைக்கவும் இஸ்ரேல் முன்வர வேண்டும். பொருளா தாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்.

தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x