Published : 27 Feb 2023 08:49 PM
Last Updated : 27 Feb 2023 08:49 PM

வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 1 - புலம்பெயர்தலை அரசியலோடு கலக்கக் கூடாது. ஏன்? 

மினி தொடர்

2020 ஜனவரி 30... சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவைச் சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தில் 2020 மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது.

அப்போது நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர், அவரவர் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கண்ணுக்குப் புலப்படாத அந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது. கரோனா பரவல் அச்சத்தின் காரணமாக மக்கள் வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். நாடே ஸ்தம்பித்திருந்த நேரத்தில், போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.

அந்த நேரத்தில், ஒரேயொரு கூட்டம் மட்டும் கையில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு, குழந்தைகளைத் தோளிலும், கைகளில் சுமந்துகொண்டு கால்கள் கொப்பளிக்க, பாதச்சதைகள் கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட, கொளுத்திப் பொசுக்கிய கோடை வெப்பத்தில் இளகிய தார்ச்சாலைகளிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் கூட்டம் கூட்டமாய் சொந்த ஊர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது. கரோனா வைரஸின் அச்சுறுத்தல், காவல் துறையின் கட்டுப்பாடுகள், பிரதமரின் வேண்டுகோள், அரசின் உத்தரவு என எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள்தான் இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்கள்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகம் வந்து, மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான வானுயர்ந்த கட்டடங்களின் கட்டுமானப் பணிகளிலும், ஆட்கள் கிடைக்காத விவசாயப் பணிகளிலும், ஆபத்து நிறைந்த ஆலைப் பணிகளிலும், பின்னலாடை உள்ளிட்ட தொழிற்சாலைகளிலும், செங்கல் சூளைகளிலும், உணவகங்களிலும், தேநீர் கடைகளிலும், முடித்திருத்த நிலையங்களிலும், வணிக வளாகங்களிலும் மாத ஊதியத்திற்காகவும் தினக்கூலிகளாகவும் வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்றனர் ‘வட மாநிலத் தொழிலாளர்கள்’.

மொழி தெரியாமல், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வாழ்வாதார பாதுகாப்புகள் எதுமின்றி வாழ்ந்துவரும் இவர்களில் பலரும் செல்வந்தர்களோ, வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகப் பின்னணி அமைப்பைக் கொண்டவர்களாகவோ இருப்பது இல்லை. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்களை காரணம்காட்டி, இவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வை பரவலாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் நகைச்சுவைக்காக பதிவிடப்பட்ட காணொளி ஒன்று வைரலானது. வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே பேசப்பட்ட அந்த வசனங்கள், பேசுபொருளானது. அரசியல் கட்சித் தலைவர்களும் வட மாநிலத் தொழிலாளர்களால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகிறது என்று கருத்து தெரிவிக்க, அவரவருக்கு ஏற்கெனவே இருந்து வந்த புரிதல் வட மாநிலத்தவர்கள் மீதான பார்வையை மேலும் சிக்கலாக்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 26-ம் தேதி, திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே திலகர் நகரில் வட மாநில தொழிலாளர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளரை தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல், அண்மையில், சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டமாக செல்லும் வட மாநிலத் தொழிலாளர்களை தமிழகத்தைச் சேர்ந்த நபரை தாக்கும் வீடியோ வைரலானது. இந்தச் சம்பவத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்பவர். இந்தச் சம்பவங்களில் இருந்து, கூலித் தொழிலாளி முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து இருக்கும் புரிதல் இதுதான் என்பது தெளிவாகிறது.

தமிழர்களின் புலம்பெயர்வு: இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள புலம்பெயர்தல் சர்வதேச வளர்ச்சி ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் இருதயராஜன் கூறியது: "ஒரு மாநிலத்தில் இருந்து, வேலைத் தேடி வருபவர்களை அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணக் கூடாது. அவர்களை இந்தியர்களாகப் பார்க்கும் மனநிலை வரவேண்டும். எனவே, இதுபோன்ற தருணத்தில்தான் இந்தியத்துவம் குறித்து பேச வேண்டும். காரணம், நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற அடிப்படையில் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர். இலங்கை, வளைகுடா நாடுகள், தென்னாப்பிரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் இருக்கின்றனர்.

எனவே, பிற மாநில மக்களை நாம் எப்படி இங்கு நடத்துகிறோமோ, அதுபோலத்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற நாடுகளில் நடத்தப்படுவர். எனவே நாம் எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். காரணம், அப்போதுதான் மலேசியாவிலோ வேறு சில நாடுகளிலோ தமிழர்களுக்கு எதிரான பிரச்சினைகளின்போது, நாம் அவர்களுக்கு உள்நாட்டிற்குள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை எடுத்துக்கூறி சுட்டிக்காட்ட முடியும். அப்போதுதான் பிற நாடுகள் நமது குரலைக் கேட்பார்கள்.

ஆனால், உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நாம் இங்கேயே தாக்குதல் நடத்தினால், உலக அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படும்போது எப்படி நமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேறு எங்குமே வேலைக்காக இடம்பெயரவில்லை என்றால் சரி... ஆனால், தமிழர்கள் இல்லாத இடங்களே இல்லை என்றளவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பிழைப்புத் தேடி வருபவர்களைக் கட்டுப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம்?

புலம்பெயர்வும் அரசியலும்: இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளூர் மக்களுக்குத்தான் 80 சதவீதம் வேலைவாய்ப்பு என்று கூறப்படுகிறது. ஆனால், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கோரிக்கையை முன்னிறுத்தியதால்தான் அந்நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்பால் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எனவே, புலம்பெயர்தலைத் தடுக்க முடியாது. ஆகவே, புலம்பெயர்பவர்களை மனிதர்களாக பார்க்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு நாம் பேசும் மொழியை பேசத் தெரியாமல் இருக்கலாம், இருந்தாலும் அவர்களை நம்மைப் போன்ற ஒருவராக பார்ககும் எண்ணம் வரவேண்டும்.

வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் தமிழர்கள் மதிக்கப்பட வேண்டும், உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், அதேபோல் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகைதரும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது நம்முடைய தார்மிக பொறுப்பாகும்.

புலம்பெயர்தலை அரசியலோடு கலக்கக் கூடாது. புலம்பெயர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனவே, எந்த அரசியல் கட்சியும் புலம்பெயர்தலை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. புலம்பெயரும் தொழிலாளர்களை போட்டியாக பார்க்கும் மனோபாவம் பலரிடம் இருந்து வருகிறது. அவர்களின் வருகையால் உள்ளூர் மக்களின் வேலை பறிபோய்விட்டதாக கருதப்படுகிறது. எனவே, இந்தப் போட்டி மனோபாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போட்டியாளர்களாக பார்க்காமல், நம் பங்குதாரர்களாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோத்துச் செல்ல வேண்டும். உதாரணத்துக்கு, ஒருநாள் சென்னையில் இருக்கும் தமிழ் பேசத் தெரியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சென்னையைவிட்டு வெளியேறி விடுகின்றனர். அதன்பிறகு, சென்னை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். சென்னையே இருக்காது.

இந்த உலகில் புலம்பெயர்தல் இல்லாமல், வளர்ச்சி இருக்காது. புலம்பெயர்தலே வளர்ச்சி. ஏனென்றால், உலகின் எந்தவொரு நாடும், மாநிலமும் தனது சொந்த மக்கள் அனைவருக்குமான வேலைவாய்ப்பினைக் கொடுத்திட முடியாது. இந்திய அரசாங்கத்தால், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வேலை கொடுத்துவிட முடியாது. அதுபோலத்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழக அரசாங்கத்தால் வேலை கொடுத்துவிட முடியாது. இதுபோன்ற சூழலில் இருக்கின்ற ஒரே நம்பிக்கை புலம்பெயர்தல்தான்.

புலம்பெயர்தலின் காரணமாக சில பிரச்சினைகள் உள்ளன. அதேநேரம், புலம்பெயர்தலால் பலர் பயனடைகின்றனர். ஒரு மாநிலத்திற்குள் புலம்பெயரும் அத்தனைபேருமே பிரச்சினைக்குரியவர்களா என்றால், இல்லை. 80-85 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு சரியாக இருக்கின்றனர். ஒற்றை இலக்க சதவீதத்தினர்தான் பிரச்சினைகளில் ஈடுபடுகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அடைந்த பயனையும், அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் எடைப்போட்டு பார்க்க வேண்டும். எனவே, பிரச்சினைகள் இல்லாமல் இல்லை, பிரச்சினைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயரும் தொழிலாளர்களை கிண்டல் செய்வதாலோ, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாலோ புலம்பெயர்தலை நிறுத்த முடியாது. என்ன செய்தாலும், தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயரும் தொழிலாளர்களை நிறுத்த முடியாது. அதேபோல், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்பவர்களையும் தடுக்க முடியாது. எத்தனை பிரச்சினைகள் நடந்தாலும்சரி, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் தமிழர்களை நிறுத்தமுடியாது. எனவே புலம்பெயரும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த நினைப்பது உங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு சமம்.

தரவுகள் நிலை என்ன? - இன்னொரு முக்கியமான பிரச்சினை, புலம்பெயரும் தொழிலாளர்கள் குறித்து போதுமான தரவுகள் இருப்பதில்லை. நாங்கள் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினோம். அதன்படி, 20 லட்சம் தமிழர்கள் இந்தியாவிற்கு வெளியே புலம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கை அளித்திருந்தோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 2020-ம் ஆண்டில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்தோம். ஆனால், அந்த சமயத்தில் கரோனா வந்துவிட்டது. அதன்பிறகு தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துவிட்டது. நாங்கள் இந்தக் கணக்கெடுப்பு குறித்து பேசி வருகிறோம்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றால், அது அரசியலும் சார்ந்தது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் என்பது வாக்கு அரசியலில் இல்லை. சாதியும், மதமும் வாக்கு அரசியல். ஏதாவது ஒரு மாநிலத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து வந்ததுண்டா? அவர்களிடம் வாக்கு இல்லை என்பதால், யாரும் கண்டுகொள்வதில்லை.

சென்னையில் மட்டும் ஏறக்குறைய 40 சதவீதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். வரும் தேர்தலில் அவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக வைத்துக்கொண்டால், அரசாங்கம் அதுகுறித்து சிந்திக்கும். அவர்களுக்கான நிதி மற்றும் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்பதே உண்மை.

இந்தியாவிற்குள்ளும், வெளியிலும் புலம்பெயரும் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களில் இன்னும் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் மசோதா (The Emigiration Bill 2021) கொண்டு வரப்பட்டுள்ளது. அது சர்வதேச புலம்பெயரும் தொழிலாளர்கள் குறித்த ஒரு புரிதலை தரும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல் உள்நாட்டில் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான (Interstate Migrant Act) உள்ளது. ஆனால் அது சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பது கரோனா சமயத்தில் தெரிந்தது. அந்தச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தொழிலாளர்கள் வீதியில் வந்து நின்றிருக்கமாட்டார்கள்.

அந்தச் சட்டத்தால் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதைத்தான் கரோனா காலக்கட்டம் உணர்த்தியது. இந்தச் சட்டங்களால் அத்தொழிலாளர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பு இல்லாததால்தான் அவர்கள் அந்தச் சமயத்தில், காவல் துறையினர் தாக்குதல், வழக்குகள், அரசின் உத்தரவுகள் அனைத்தையும் மீறி புலம்பெயர்ந்தனர்.

கேரள முன்னுதாரணம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால், பேருந்துகள், ரயில்கள், காவல் துறை அச்சுறுத்தல் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து சென்றிருப்பர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல நேரங்களில், சம்பந்தப்பட்டவர்களைக் கருத்தில் கொள்ளாமல் அரசு கொள்கைகள் வகுக்கப்படுகிறது. நம்மிடம் இருக்கும் பெரிய தவறு இதுதான். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொள்கை அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் உருவாக்கப்படுகிறது. எனவே, அவர்களுடன் கலந்தாலோசித்து கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது உண்மையில் அவர்களுக்கு பயனளிக்கும்.

என்னைப் பொருத்தவரை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுமே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கையாளுவது குறித்து கேரள மாநிலத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை அங்கு 1998-ம் தொடங்கினேன். அதிலிருந்து ஒவ்வொரு 5 வருடமும், 2003, 2008, 2013, 2018 ஆண்டுகளில் நடத்தப்பட்டது. 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பு விரைவில் நடத்தவுள்ளோம். இதற்கு கேரள அரசும் உதவிக்கரமாக இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டே வருகிறது. இந்தியாவிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த புள்ளி விவரங்கள் கேரளாவில்தான் உள்ளது" என்றார் அவர்.

| வட மாநிலத் தொழிலாளர்களின் தமிழக வருகை குறித்த பார்வைகள் தொடரும்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x