

அண்மையில் நடந்துமுடிந்த காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் / காவல் துறைத் தலைவர்கள் அகில இந்திய மாநாட்டில், வழக்கத்துக்கு மாறான ஒரு விஷயம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சில அம்சங்கள் பொதுவெளியின் பார்வைக்கு வந்தன.
இது எல்லைப்புற விவகாரங்களை நிர்வகித்தல் தொடர்பான சர்ச்சைக்கு வித்திட்டது. இந்த அகில இந்திய மாநாடு ஒப்பீட்டளவில் புதிய ஏற்பாடு (1980 முதல்); இதற்கு முன் பல்வேறு மாநிலங்களின் நுண்ணறிவு, குற்றவியல் விசாரணைத் துறைத் தலைவர்களின் வருடாந்திர மாநாடு நடத்தப்பட்டுவந்தது.
அதில் நுண்ணறிவு, குற்றமும் குற்ற விசாரணையும், தொழில்நுட்பம், தடயவியல் அம்சங்கள் உள்ளிட்ட காவல் துறையின் அன்றாட நடைமுறைகள் சார்ந்தவை மட்டுமே விவாதிக்கப்பட்டன. ஆனால் இப்போதைய மாநாடுகளில் கூடுதலாகக் கொள்கை, ஊழியர் விவகாரங்கள் உள்ளிட்ட வேறு பல விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.
அற்றுப்போகும் ஆழமான விவாதங்கள்: அண்மைக் கால மாநாடுகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் எண்ணிக்கைப் பெருக்கமும் வெவ்வேறு விஷயங்களைக் கையாள, பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் எந்த வகையான ஆழமான விவாதங்களுக்கும் இடமில்லாமல் ஆக்கிவிட்டன.
இன்றைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பரந்துபட்ட தன்மையைக் கொண்டிருக்கின்றன. இணையவழிக் குற்றங்கள், இருள் இணையம் (Dark Net), கிரிப்டோ நாணயங்கள், கடல்புறப் பாதுகாப்பு, ட்ரோன்களால் விளையும் ஆபத்துகள், கட்டுப்பாடுகளுக்கு உட்படாத சமூக ஊடகங்களால் எழும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து ஆழமான விவாதங்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன.
இவை போதாதென்று நக்ஸல் தீவிரவாதம், தீவிரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் கடத்தல், எல்லைப்புறப் பிரச்சினைகளும் இருக்கின்றன. இது போன்ற விவகாரங்களை விரிவாக விவாதிக்கப் போதுமான நேரம் இல்லாமல்போவது, மாநாட்டில் நிகழும் விவாதங்களை மட்டுமல்லாமல், அவற்றின் விளைவுகளின் தரத்தையும் குறைக்கிறது.
மாறிக்கொண்டே இருக்கும் பாதுகாப்பு நிலவரமானது எண்ணற்ற உள்நாட்டு, அயலுறவுசார் சவால்களை உருவாக்கிவருகிறது. 21ஆம் நூற்றாண்டின் வரப்போகும் ஆண்டுகளில், பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிவேக விகிதத்தில் அதிகரிக்கவிருக்கின்றன. அவற்றின் பரிமாணங்கள் எப்படியிருக்கும் என்று தெரியாவிட்டாலும் இப்போது தெளிவாகத் தெரிவது இதுதான்: புதிதாக உருவாகிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேம்பட்ட புதுமைச் சிந்தனையும் சுறுசுறுப்பும் மட்டுமல்லாமல் புதிய அறிவாற்றல் திறன்களை வெளிப்படுத்துவதும் தேவைப்படுகிறது.
இவற்றின் மூலமாகவேஅதிவேகத் தொழில்நுட்ப மாற்றங்களும் தரவு யுத்தங்களும் விடுக்கும் சவால்களைக் கையாள முடியும்.எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் நடைமுறையானது, அடிப்படை மாற்றங்களுக்கு உள்பட வேண்டியிருக்கிறது. அந்த மாற்றங்கள் உயர்நிலைகளில் உறுதியான நோக்கங்களுடன் கூடிய உரையாடல்களை உள்ளடக்கியவையாக இருக்க வேண்டியிருக்கிறது.
இந்த விஷயத்தில் இன்று சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக அமையும். தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நிறைந்த இன்றைய உலகில் இந்தத் துறை சற்று அலுப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பத்திலும் மக்கள் கூட்டத்தைக் கையாள்வதிலும் இந்தத் துறைக்குத் தேவைப்படும் புதிய திறன்கள் இன்று பாதுகாப்பு முகமைகளின் கையிருப்பில் இல்லை.
பெரும்பாலான பாதுகாப்புப் படைகள் தீவிரவாதம் உள்ளிட்ட எப்போதும் இருக்கும் அச்சுறுத்தல்களிலேயே அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய சீற்றமடைந்த, கட்டுப்பாடுகளுக்கு உட்படாத கும்பல்களைக் கையாள்வதற்கு வெறும் தொழில்நுட்பத்துக்கு அப்பாற்பட்ட புதிய திறன்களும் உள்ளார்ந்த ஆற்றல்களும் தேவைப்படுகின்றன. கடும்போக்கு அணுகுமுறையானது பிரச்சினைகளைக் குறைப்பதைவிட அதிகரிப்பதற்கே உதவுகிறது.
நிலவும் பிரச்சினைகளுக்குச் செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய தொழில்நுட்பங்களே தீர்வளித்துவிடும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் நிறைய செய்யப்பட வேண்டியிருப்பது தெளிவாகிறது. போராடக் கிளர்ந்தெழும் கும்பல்களின் உளவியலைப் புரிந்துகொள்வது, நிலைமை கைமீறிப் போவதற்குள் அவர்களின் பக்கச் சார்புகளால் அவர்களுக்கே விளையக்கூடிய ஆபத்துகளைப் புரியவைப்பது ஆகியவை இயல்பிலேயே இருக்கக்கூடிய திறன்கள் அல்ல; வளர்த்துக்கொள்ளப்பட வேண்டிய திறன்கள். இதற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஆகவே, காவல் துறைக்கும் பாதுகாப்பு முகமைகளுக்கும் சரியான பண்புகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்க வேண்டும். இருக்கும் வளங்களை ஆயுதச் சேகரிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த பாதுகாப்பு முகமைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க போட்டி நிலவும் என்பதால், இதற்கு மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் அணுகுமுறை தேவை. இது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் பயனளிக்கக்கூடியது என்னும் ஏற்பைப் பெறவும் இந்த அணுகுமுறை தேவைப்படும்.
தேர்வு, திறன்களில் கவனம் தேவை: பாதுகாப்பு முகமைகள், குறிப்பாகக் காவல் துறையில் ஆள்சேர்க்கை நடைமுறையும் ஒட்டுமொத்த மாற்றத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது. நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகக் காவல் படைகள் இருக்க வேண்டும்.
இணையம், சமூக ஊடகம், பிற புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை போராட்டக்காரர்கள், கிளர்ச்சியாளர்களின் கையை ஓங்கச் செய்திருப்பதால் அடிக்கடி சட்டம் - ஒழுங்குக்கு ஆபத்து விளையக்கூடிய நிலையில், அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு முகமைகளில் பணியாற்றுவோரின் திறன்கள் வடிவமைக்கப்பட வேண்டியிருக்கிறது.
பாதுகாப்பு முகமைகளில் பெரிதும் புறக்கணிக்கப்படுவதான, பொதுவில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையிலான நுண்ணறிவின் (Open Source Intelligence) முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்த வகையிலான நுண்ணறிவை முறையாகப் பயன்படுத்துவது இன்றைய சட்டம், ஒழுங்கு சூழ்நிலைகள் பலவற்றை நிர்வகிப்பதில் முக்கியக் காரணியாக உருவெடுக்க முடியும்.
‘சிறியதே அழகு’: நுண்ணறிவு உத்திகள், விசாரணை நடைமுறைகள், கள நிலவரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மாற்றத்தை எப்படிக் கொண்டுவருவது என்பது குறித்தும் கறாரான பார்வையை வரித்துக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் / காவல் துறைத் தலைவர்களை உள்ளடக்கிய உச்ச நிலைக் கூட்டம் தேவையான வழிகாட்டுதல்களையும் இலக்குகளை அடைவதற்கான திட்டங்களையும் வழங்கக்கூடும் என்பது மரபார்ந்த சிந்தனை.
உண்மை என்னவென்றால், ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள், பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை இவ்வளவு பரந்துபட்டதாக இருப்பது, அர்ப்பணிப்புமிக்க அதிகாரிகளிடையிலானது என்றாலும்கூட உரையாடலின் தரத்தைப் பாதித்துவிடும். வாழ்வின் வேறு பல அம்சங்களைப் போல் இதிலும் சிறியதே அழகானது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இப்போது நடத்தப்படும் காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் /காவல் துறைத் தலைவர்களுக்கான மாநாடு இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும். கொள்கை தொடர்பான விவகாரங்களை விவாதிக்கக் காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் / காவல் துறைத் தலைவர்களை உள்ளடக்கிய உயர்நிலை மாநாடு நடத்தப்பட வேண்டும்.
செயல்முறைகளின் நுட்பமான அம்சங்கள், உத்திகள், நிகழ்கால, வருங்காலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்குத் தேவையான புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது ஆகியவற்றை விவாதிக்க நுண்ணறிவு-பாதுகாப்பு நிபுணர்களுக்கான தனி மாநாடு நடத்தப்பட வேண்டும். இப்படிப் பிரித்து நடத்தப்படும் மாநாடுகள் நிகழ்கால, வருங்காலப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மேலும் பொருத்தமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
- எம்.கே.நாராயணன் | தேசிய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்
சுருக்கமாகத் தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்
© ‘தி இந்து’ ஆங்கிலம்