

புலம்பெயர்தல் அல்லது இடப்பெயர்ச்சி என்பது மனிதகுலத்தின் தொன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாகும்; ‘வலசைபோதல்’ என்றும் இதைக் குறிப்பிடுவர். பொருளாதாரத் தேவை தொடக்க காலப் புலம்பெயர்தலின் அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது.
வேட்டைச் சமூகத்தில் உணவுக்காகவும், கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் அவற்றின் உணவுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் புலம்பெயர்தல் நடந்துள்ளது. ‘கொல்லை வேளாண்மை’ என்கிற பொருளாதார நடவடிக்கை காரணமாக, கால்நடை வளர்ப்புச் சமூகமான முல்லைத் திணை வாழ்க்கையில் புலம்பெயர்தல் நிகழவில்லை.
போர்களும் புலம்பெயர்தலும்: ஆட்சியாளர்களுக்கிடையே நிகழ்ந்த போர்களும் புலம்பெயர்தலுக்கு ஏதுவாக அமைந்துள்ளன. வீரத்தின் வெளிப்பாடாகப் போர்கள் குறிப்பிடப்பட்டாலும் பகை நாட்டவரின் உடைமைகளைக் கவர்தலே போர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
கால்நடைகள் உடைமைகளாக இருந்தபோது ஆநிரை கவர்தலே போர்களின் நோக்கமாக அமைந்தது. வேளாண் குடிகளாக மாறியபோது உடைமைகள் பெருகியதால் போர்ச் செயலால் அவற்றைக் கவர்தல் மட்டுமின்றி, விளைநிலங்களைக் கவர்தலும் நிகழ்ந்தது. இதனால் மக்கள் உடைமைகளுடன் இடம்பெயர்ந்தனர்.
மராத்தியப் படைப் பிரிவின் தலைவராக இருந்த முராரி ராவ் (1699-1771), இரண்டாண்டு காலம் (1741-1743) திருச்சியில் தங்கி அந்நகரையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் நிர்வகித்துவந்தார். நினைத்தபோதெல்லாம் தன் படையுடன் புறப்பட்டு திருவண்ணாமலை, திண்டிவனம், சேத்துப்பட்டு, விழுப்புரம், கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் ஆகிய ஊர்களைத் தாக்கி தானியங்கள், கால்நடைகள் போன்றவற்றைக் கொள்ளையடித்ததுடன் பெண்களையும் கவர்ந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவருக்கு அஞ்சிய மக்கள் ஊரைக் காலிசெய்து புலம்பெயர்ந்தனர். இதை ஆனந்தரங்கம்பிள்ளை தம் நாள்குறிப்பில் மக்கள் ‘வலசை போயினர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலச் சோழர் ஆட்சியில் அதிக வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டபோது, தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாகப் புலம்பெயர்தலை மக்கள் மேற்கொண்டுள்ளார்கள். நெசவாளர்கள் போன்ற கைவினைஞர்கள் இவ்வாறு வெளியேறும்போது அவர்களிடம் ஏற்கெனவே பெற்றுவந்த வரி நின்றுவிடும். இதனால் வரி உயர்வை நிறுத்திவைத்ததுடன் அவர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இச்செய்தியைக் கல்வெட்டுகள்வழி அறிய முடிகிறது.
பிற காரணங்கள்: பஞ்சம், வரிக் கொடுமை, நோய்த்தொற்று, இயற்கைச் சீற்றம், வேலையின்மை, வறுமை என்பன புலம்பெயர்தலுக்கான அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் அவர்களுடைய பிற்காலனிய நாடுகளில் கரும்பு, ரப்பர், கொய்னா, தேயிலை, காபி ஆகிய பணப் பயிர்களைப் பயிரிடத் தொடங்கியபோதும், கனிமச் சுரங்கங்களை அமைத்தபோதும் பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
இத்தேவையை நிறைவுசெய்ய மக்களை அடிமைகளாக்கி ஏற்றுமதிப்பொருளாகத் தொடக்கத்தில் கொண்டுசென்றனர். அடுத்து, ஒப்பந்தக் கூலிகள் என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். நாடு கடத்துதல் என்ற பெயரில் தண்டனை வழங்கிப் புலப்பெயர்ச்சிக்கு ஆளாக்கினர். எந்த முறையில் சென்றாலும் இவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாவே புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்ந்துவந்தார்கள்.
இவர்களின் அவலநிலை குறித்து மனம் நொந்து பாரதி கவிதை பாடியுள்ளார் (‘ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டினுந்...); இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையை, ‘துன்பக்கேணி’ சிறுகதையில் மருதி என்ற பாத்திரத்தின்வழி புதுமைப்பித்தன் ஓர் ஆவணமாக்கியுள்ளார்.
வடபுலத்தாரின் புலம்பெயர்வு: தமிழ்நாட்டின் ஆடம்பர உணவுவிடுதிகள், தங்கும் விடுதிகள், வட இந்திய உணவகம் வழி தொடக்கத்தில் அறிமுகமான வட இந்தியத் தொழிலாளர்கள் பின்னர் சிறு, குறுந்தொழில்கள், பெரிய ஆலைகள் என்பனவற்றில் நுழைந்தனர். பின்னர் இது படிப்படியாகச் செங்கல் சூளை, உப்பளம் என்றாகி, இப்போது வேளாண் தொழிலில் வந்துநிற்கிறது.
கோதுமை மாவு, உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் இடையிடையே முட்டை, வாரத்துக்கு ஒருநாள் - பெரும்பாலும் ஞாயிறன்று - மதுவுடன் கோழி இறைச்சி இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுடையது ஒருவகையில் கூண்டுக் கோழி வாழ்க்கை எனலாம். பான்பீடா, பீடி பயன்படுத்துபவர்கள் மட்டுமே காசைக் கையால் தொடுகிறார்கள். குறைந்த அளவிலேயே திரைப்படம் பார்க்கிறார்கள். கட் அவுட், பால் அபிஷேகப் பண்பாட்டுக்கு இன்னும் ஆளாகவில்லை. இப்போக்குக்கு விதிவிலக்கானவர்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது.
ஆனால், இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. மாத ஊதியம் வாங்கியவுடன் தம் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்ப வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள். நம் மக்களோ டாஸ்மாக்கிலும் திரை அரங்கிலும் வரிசையில் நிற்கிறார்கள். இன்று கைத்தொழில்களும் குறுந்தொழில்களும் மத்திய அரசின் புறக்கணிப்பால் நலிவடைந்துவரும் சூழலில், இத்தொழில் முனைவோருக்கு வாராது வந்த மாமணிபோல் இவர்கள் தோன்றுகின்றனர்.
வட இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் திரட்டித்தரும் தரகர்கள் இவர்களது தேவையை நிறைவுசெய்கிறார்கள். இதில் கவர்ச்சிகரமாக அமைவது இவர்களுக்கு வழங்கப்படும் குறைவான ஊதியம்தான். இவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வரையறுக்கப்பட்டால் இக்கவர்ச்சி மறைந்துபோகும்.
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்தப்படும் தமிழ் மொழி உணர்வோ இன உணர்வோ எவ்வித அசைவையும் ஏற்படுத்துவதில்லை. ‘தமிழ்’, ‘தமிழன்’ என்கிற முழக்கங்களை ஒரு கட்டத்துக்குமேல் திரைப்படக் கவர்ச்சியுடன் இணைத்தே மலினப்படுத்தி வந்துள்ளோம். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாது புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர் பிரச்சினையைப் பேசுவதற்கு வாக்குவங்கி அரசியலே காரணம். இவர்கள் வாக்காளர்களாகிவிட்டால் நமக்கு வாக்களிப்பார்களா என்ற அச்சம் சிலரை வழிநடத்துகிறது.
இந்த இடத்தில் மற்றொரு உண்மை பேசப்படாததையும் அறிந்துகொள்வது நன்று. காய்கறிகள், பழங்கள், உப்பு, மஞ்சள், கைத்தறி ஆடைகள் என்பனவற்றைச் சில்லறை விற்பனையாளர்களிடம் சந்தைப்படுத்தும் மொத்த வணிகம், பொருள்வளம் படைத்த புலம்பெயர்ந்தோரிடம் இன்றைக்கு நழுவிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே அந்த உண்மையாகும்.
இது விவசாயிகள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் எனப் பலதரப்பட்ட மக்கள் பிரிவினர்மீது பெருந்தாக்குதலை ஏற்படுத்தும். பலாப்பழம் களவுபோவதை அறியாது, களாக்காய் களவு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
- ஆ.சிவசுப்பிரமணியன் | பேராசிரியர்பண்பாட்டு ஆய்வாளர்; தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in