

இமையம் எழுதியுள்ள ‘செல்லாத பணம்’ நாவலின் கதைநாயகியான ரேவதி நினைத்துப் பார்க்கிறாள்: ‘மூணு நாளுதான் அவன் என்னெப் பாத்திருப்பான். எப்பிடித்தான் எம்பேரு தெரிஞ்சிதோ, நாலாம் நாளே எம் பேர நெஞ்சிலயும், ரெண்டு கையிலயும் பச்ச குத்திக்கிட்டு வந்து எங்கிட்ட காட்டுறான். ...பாக்குறப்பலாம், நீ என்னெக் கல்யாணம் கட்டிக்கலன்னா செத்திடுவன்’னு சொல்லிக் கைய பிளேடால கிழிச்சிக்கிட்டது காரணமாக இருக்கும்’.
காலந்தோறும் பெண்கள் மீதான விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆண்கள் தங்களை வருத்திக் கொண்டுள்ளனர். சிலர் வருத்திக்கொள்வதாகப் பாவிக்கின்றனர். பெண்களின் பலவீனம் எனச் சொல்லப்படும் இரக்க குணத்தை ஆண்கள் தங்களுடைய ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு ஈராயிரம் ஆண்டு காலத் தொடர்ச்சி உள்ளது. சங்க காலத்தில் அதை மடலேறுதல் என்று அழைத்தனர்.
ஆண்களின் தந்திரங்கள்
இம்மடலேறுதல் நவீன இலக்கியங்கள் வரை நீண்டிருக்கிறது. அதன் வடிவம்தான் மாறியிருக்கிறது. திரைப்பட நாயகிகளின் பிரிவின் காரணமாக மது அருந்துதல், புகைபிடித்தல், சிகரெட்டால் தன் உடலில் சுட்டுக்கொள்ளுதல், தாடி வளர்த்தல் உள்ளிட்ட நாயகர்களின் தந்திரங்களும் மடலேறுதலின் மாற்று வடிவங்கள்தாம். தொல்காப்பியர் மடலேறுதல் குறித்து விரிவாக எழுதியுள்ளார். தலைவனும் தலைவியும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். இந்தச் சந்திப்புக்குத் தலைவியின் புற அழகே காரணமாக இருக்கிறது. முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் புணர்ச்சி நிகழ்கிறது. இதனை ‘இயற்கைப் புணர்ச்சி’ என்கிறது அக இலக்கணம். இயற்கைப் புணர்ச்சி நிகழத் தெய்வமே துணை நின்றதாக நம்புகின்றனர். பின்னர் இருவரும் பல்வேறு காரணங்களால் பிரிய நேர்கிறது. தலைவிக்குத் தலைவனைச் சந்திப்பதில் பல தடைகள் ஏற்படுகின்றன. இதனைத் தலைவன் புரிந்துகொள்ள மறுக்கிறான். தலைவியின் மாந்தளிரன்ன நிறமும் மூங்கில் போன்ற வழுவழுப்பான தோள்களும் அவனைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கின்றன. அவளது குணநலன்கள் அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். தலைவியைச் சந்திக்க தோழி மூலம் தூது விடுகிறான். அம்முயற்சி தோல்வியில் முடியும்போது ‘நான் மடலேறுவேன்’ என அச்சுறுத்துகிறான்.
இங்கு மடல் என்பது பனங்கருக்கைக் குறிக்கிறது. தன் கோரிக்கை நிறைவேறாத தலைவன், பனங்கருக்கால் குதிரை செய்துகொள்வான். தலைவியின் உருவத்தையும் தன் உருவத்தையும் ஓவியமாகத் துணியில் வரைந்துகொள்வான். உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொள்வான். பூளைப்பூ, எருக்கம்பூ, எலும்பு ஆகியவற்றால் சேர்த்துக் கட்டிய மாலையை அணிந்திருப்பான். நண்பர்கள் சூழ தலைவியின் தெரு வழியே ஊர்வலம் வந்து, சான்றோர்களின் இரக்கத்தைக் கோருவான். இப்போது தலைவனுடனான தலைவியின் களவொழுக்கம் ஊருக்கே தெரிந்துவிடும். இப்படி நடந்துவிடக் கூடாதென அஞ்சிய தலைவியர், தலைவனின் விருப்பத்துக்கு உடன்படுவர். தன்னை வருத்திக்கொண்டு பெண்களை உடன்பட வைத்தல் என்ற சங்க காலத் தலைவன்களின் உத்தியைத்தான் தற்காலத் தலைவன்களும் கையாள்கின்றனர்.
ஊருக்கு அறிவித்தல்
குறுந்தொகையில், ‘மாவென மடலும் ஊர்ப பூவெனக் / குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப / மறுகினார்க்கவும் படுப / பிறிது மாகுப காமங்காழ் கொளினே’ (17) என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. எழுதியவர் பேரெயின் முறுவலார். காம நோயானது முதிர்வடைந்தால், பனை மட்டையையும் குதிரை எனக்கொண்டு, ஆடவர் அதன்மீது ஊர்வர்; குவிந்த அரும்பை உடைய எருக்கம்பூ மாலையை அணிந்துகொள்வர்; தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரித்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தாம் எண்ணியது நிறைவேறாவிட்டால், வேறு செயல்களையும் செய்வர் என்பது இதன் பொருள். குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய தொகை நூல்களில் மடலேறுதல் பற்றிப் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ‘உண்ணா நோன்பு கிடந்து அழியத் துணிவதாகப் பாடும் கற்பனைத் துறை அது’ என்று மடலேறுதலைக் குறிப்பிடுகிறார் மு.வரதராசனார். அறிஞர்கள் மு.வ. கருத்தை மறுக்கின்றனர்.
களவொழுக்கத்தில் சந்திப்புக்கு உடன்படாத தலைவியரை மனதளவில் துயரத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். தலைவியின் உருவத்தை ஓவியமாக வரைந்துகொண்டு, ‘அவள் எனக்கானவள்’ என ஊர் முழுக்கச் சொல்லிவிடுவேன் என்று அச்சுறுத்தியிருக்கிறார்கள். நிகழ்காலத் தலைவன்கள், பழகிய காலத்தில் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். இரண்டுக்கும் ஒரு தொடர்ச்சி இருப்பதை அறியலாம்.
பெண்கள் மடலேறினார்களா?
புறப்பொருள் வெண்பாமாலை, ‘ஒன்றல்ல பலபாடி / மன்றிடை மடலூர்ந்தன்று’ என்று மடலேறுதலுக்கு இலக்கணம் கூறுகிறது. இக்கொளு இருபாற் பெருந்திணையில் இடம்பெற்றுள்ளது. அதாவது, பனைமடலால் செய்த குதிரை மீது அமர்ந்து ஊர் அம்பலத்தில் பலவற்றையும் சொல்லி தலைவன் புலம்புவான் என்பது இதன் பொருள். தொல்காப்பியர், ‘எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் / பொற்புடை நெறிமை இன்மை யான’ (அகத்திணையியல்) என்று கூறுகிறார். அதாவது, பெண்கள் மடலேறுதல் இல்லை என்பது அவரது முடிபாகும். பெண்கள் மடலேறுதல் இல்லை என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார். ’நாணுத்துறவுரைத்தல்’ என்ற அதிகாரத்தில் மடல் பற்றிய செய்திகளை இவர் கூறியிருக்கிறார். ஆக, மடலேறுதல் என்பது ஆண்களுக்குரிய செயலாகவே இருந்திருக்கிறது. பிற்காலத்தில் மடல் ஒரு சிற்றிலக்கிய வடிவமாக வளர்ந்தது. திருமங்கையாழ்வார் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரு பிரபந்தங்களைப் பாடியிருக்கிறார். பெண்கள் மடலேறுவதில்லை என்பதற்கு எதிராக இப்பிரபந்தங்கள் பாடப்பட்டுள்ளன. திருமாலைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் கருதி ஆழ்வார் இந்நூல்களை இயற்றியிருக்கிறார். பக்தி இலக்கியத்தில் பெண்கள் மடலேறுவதாகச் சிலர் பாடியிருக்கின்றனர். பாடுபவர்கள் தங்களைப் பெண்ணாகக் கருதிக்கொள்வதால் இவ்வாறு பாடியிருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சங்க இலக்கியத்தில் மாதங்கீரனார் என்ற புலவர் குறுந்தொகையில் (182) ஒரு பாடலும் நற்றிணையில் (377) ஒரு பாடலும் பாடியுள்ளார். இரு பாடல்களுமே தலைவன் மடலேறுதல் தொடர்பானவை. அதனால், இவரை ‘மடல் பாடிய மாதங்கீரனார்’ என்ற அடைமொழியுடன் அழைக்கின்றனர். தலைவி நம் நிலைகண்டு உள்ளம் நெகிழவில்லை; எனவே, தலைவியைப் பிறர் இகழும்படி மடலேறி வருவேன் (குறு.182) என்கிறான் தலைவன். தலைவியின் நாணத்தை இவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். ‘மாவென மடலோடு மருகில் தோன்றித் / தெற்றெனத் தூற்றலும் பழியே’ (குறு.32) என்ற அள்ளூர் நன்முல்லையார் பாடிய பாடலும், தலைவன் மடலேறுதல் மூலமாகத் தலைவிக்குப் பழிவரும் என்று தெரிந்தும் தலைவன் அதனைச் செய்திருக்கிறான் என்கிறது. இதில் எங்கிருக்கிறது காதல்? அறத்தைச் சாராதவர்கள் செய்யும் தொழிலாக மடலேறுதல் இருப்பதாகக் கலித்தொகை (141) குறிப்பிடுகிறது. தலைவன் மடலேறுவேன் எனக் கூறியவுடன், பழிக்கு அஞ்சி தலைவியின் உறவினர்கள் தலைவியைத் தலைவனுடன் சேர்த்து வைத்திருக்கின்றனர். இதனைத் தற்காலத்துடன் பொருத்தி வாசிக்கலாம்.
மடலேற நினைத்தலைக் கைக்கிளையாகவும் மடலேறுதலைப் பெருந்திணையாகவும் இலக்கணங்கள் குறிப்பிடுகின்றன. பெருந்திணை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தமில்லாத குணங்களைத் தொகுத்துக் கூறும் திணையாகும். தலைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது ஒரு பாவனைதான். அந்த பாவனையின் வெளிப்பாடுதான் மடலேறுதல். எனவே, தலைவன் தன்னை வருத்திக்கொண்டு மடலேறுதல் என்பது ஒருவகையான அச்சுறுத்தல்தான். அந்தத் தந்திரத்தை ஆண்கள் இன்றும் செய்துகொண்டிருக்கின்றனர். பனங்கருக்குக்குப் பதிலியாக இன்று பிளேடு இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.