ராதிகா ஸாந்த்வனமு என்கிற காவியத்தின் கதை

ராதிகா ஸாந்த்வனமு என்கிற காவியத்தின் கதை
Updated on
2 min read

முத்துப்பழனி (1739 – 1790) தஞ்சையைச் சேர்ந்த தெலுங்குப் பெண் கவிஞர். புகழ்பெற்ற ‘ராதிகா ஸாந்த்வனமு’ எனும் தெலுங்குக் காவியத்தைப் படைத்தவர். தஞ்சை மராத்திய மன்னர் பிரதாபசிம்மரால் ஆதரவளிக்கப்பட்டிருந்தவர். இசை, நடனம், கவித்துவம் ஆகியவற்றில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தவர் முத்துப்பழனி. அவரது இந்நூல் தெலுங்கு இலக்கியத்தில் பெரும் விவாதத்துக்கு வழிகோலியது. காதலைப் பாடும் இந்த விவரிப்பு, கவிதை ரசத்தில் தோய்ந்திருக்கும். தன்னையே வருணிக்கும் முத்துப்பழனியின் சொற்களோ வாசகரை வசீகரிக்கக்கூடியவை.

இதன் பாலியல் அம்சத்துக்காக நூலும் அதை இயற்றிய கவிதாயினியும் விமர்சிக்கப்பட்டனர். இந்த நூல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தடைசெய்யவும் பட்டது. இந்த நூலின் பதிப்பும் ஒரு வரலாறு எனலாம். அத்துணை நீண்ட காலக்கட்டம் பயணித்துவந்துள்ளது.

584 பாடல்களைக் கொண்ட இக்காவியத்தின் பிரதியொன்றை, சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்துக்கு எடுத்துச் சென்று சார்லஸ் ஃபிலிப் பிரௌன் என்ற ஐரோப்பியர் பாதுகாத்துவந்தார். தெலுங்கு – ஆங்கில மொழியகராதியை எழுதியவர் இவர்.

1855ஆம் ஆண்டில், பிரௌன் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பும்போது, இச்சுவடியையும் வேறு சிலவற்றையும் தன் உடன் அழைப்பாளராயிருந்த பைடிபாடி வெங்கட நரஸ் என்பவரிடம் ஒப்புவித்துச் சென்றார். இந்தக் காவியத்தை அச்சிட்டு வெளியிடும் ஆர்வங்கொண்ட வெங்கட நரஸ், 1887இல் அப்பணியில் முனைந்தார். இக்காவியத்தில் சிற்றின்பம் பற்றிய பல பாடல்களிருப்பதால் அவற்றையும் நூலாசிரியை எழுதியுள்ள பல பகுதிகளையும் நீக்கி, அச்சேற்றி வெளிக்கொணர்ந்தார். ஆனால், மக்களிடையே சிறிதும் வரவேற்பு பெறவில்லை.

அடுத்து, 1889ஆம் ஆண்டில் திருக்கடையூர் கிருஷ்ணராவ் என்பவர், இந்நூலை, நல்லம்பாக்கம் ராகவுலு நாயுடுவின் ஸ்ரீதாம் அச்சுக்கூடத்தின் மூலமாக வெளியிட்டார். அப்போதும் இந்நூலுக்கு மக்களின் வரவேற்பு கிடைக்கவில்லை.

சங்கீத சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளிடம் அளவற்ற பக்தி கொண்டவரும், திருவையாற்றில் இன்று காணப்படும் சத்குருவின் ஆலயத்தை எழுப்பித், தனது சொத்து முழுவதையும் அதற்கே எழுதி வைத்தவருமான, ‘வித்யாசுந்தரி’ பெங்களூர் நாகரத்தினம்மா, ‘ராதிகா ஸாந்த்வனமு’ என்ற இந்நூலைப் பற்றி அறிந்து, சிரமப்பட்டு, அதன் அச்சுப் பிரதியொன்றைப் பெற்றார். அதில் பிழைகள் மலிந்து காணப்பட்டன. மூலச்சுவடியைப் பற்றிய தேட முனைந்து ஒரு நண்பரின் உதவியால் அது கிடைக்கப் பெற்றார். பிழைகளைத் திருத்தி, விடுபட்டிருந்த பகுதிகளையும் இணைத்து, ஒரு செம்மையான அச்சுப் பிரதியை வெளியிடும் ஆர்வம் அவருக்கு மிகுந்தது. அவ்வாறே நூலைச் செம்மைப்படுத்திச், சென்னை வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்த்ருலுவின் ஸரஸ்வதி அச்சகத்தின் வாயிலாக 1910ஆம் ஆண்டில் வெளிக்கொணர்ந்தார். இம்முறை, இந்த வெளியீடு மக்களிடையே பரவி, அதேவேளை பெரும் பரபரப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கியது.

இந்நூலைக் கடுமையாக விமர்சித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு ஆவார். ‘இந்நூல் ஒரு வேசியால் இயற்றப்பெற்று, இன்னொரு வேசியால் வெளியிடப்பட்டிருக்கிறது’ என்று தூற்றுமொழியை வீசிய அவருக்குப் பதிலடி தருவதாக நாகரத்தினம்மா ஒரு கடிதம் எழுதினார். ‘ஆம்! இந்த நூல் ஒரு தேவதாசியால் இயற்றப்பட்டு, இன்னொரு தேவதாசியால் பதிப்பிக்கப்பட்டதுதான். ஆனால், சிறந்த கல்விமானாகிய பந்துலு அவர்களுக்குத் தேவதாசிக்கும் வேசிக்குமுள்ள வேறுபாடுகூடத் தெரியாமற் போனது அதிசயமாயிருக்கிறது. ஆனால், சிறப்பாக விமரிசனம் செய்யப்பட்டும் வெளியிடுவதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்ட பைரங்கு திம்மய்யாவின் (பொ.ஆ. (கி.பி.)1600) 'வைஜயந்தீ விலாஸமு’ எனும் நூலில் காணப்படுவதைவிட, நான் வெளிக்கொணர்ந்த இந்த நூலில் உள்ளதா என்பதைக் கூற அவர் முன்வருவாரா?” என்று எழுதினார்.

இப்படிப்பட்டவொரு குழப்பநிலையைக் கண்ட அன்றைய ஆங்கிலேய அரசு, மிகவும் ஆபாசம் நிறைந்த நூலைப் பதிப்பித்து, வெளியிட்டதற்காக நாகரத்தினம்மாவையும் வாவிள்ள சாஸ்த்ருலுவையும் குற்றஞ்சாட்டியது. உடனே, இந்நூல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது, நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், தங்குடூரி பிரகாசம் அவர்கள், மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக ஆனபோது, இந்நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். ‘தெலுங்கு மொழி இலக்கியத்தின் கழுத்தணிக்குச் சில நன்முத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன’ என்றும் அவர் அறிவித்தார்.

முத்துப்பழனியின் ‘ராதிகா ஸாந்த்வனமு’ என்ற அரும்பெரும் காவியம், இதுகாறும் ஆங்கிலம் தவிர (அதுவும் முழுமையாக இல்லாமல்) வேறு மொழிகளில் வந்ததாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின், இப்போது முதன்முறையாகத் தமிழில் என்னால் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘ராதிகா சாந்தமானாள்’ எனும் தலைப்புடன் அகநி வெளியீடு பதிப்பித்திருக்கிறது.

ராமஸ்வாமி சாஸ்த்ருலுவின் ஸரஸ்வதி அச்சகத்தின் வாயிலாக ‘ராதிகா ஸாந்த்வனமு’ நூலை 1910ஆம் ஆண்டில் வித்யா சுந்தரி வெளிக்கொணர்ந்தார். இந்த வெளியீடு மக்களிடையே பரவி, பெரும் பரபரப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in