

உலக வானொலி நாளை முன்னிட்டு கோயம்புத்தூர், பீளமேடு, எல்லைத் தோட்டம் சாலை, 6ஆவது குறுக்குத் தெரு, ஜி18 வளாகத்தில் வானொலிப் பெட்டிக் கண்காட்சி நடைபெறவுள்ளது. நேற்று தொடங்கிய இக்கண்காட்சி இன்று (26.02.23) காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறவுள்ளது.
வேலூர் புத்தகத் திருவிழா
வேலூர் புத்தகத் திருவிழா பிப்.24 தொடங்கி மார்ச் 6 வரை நடைபெறவுள்ளது. வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் இந்தப் புத்தகக் காட்சி நடைபெற்றுவருகிறது. இதை ஒட்டி எழுத்தாளர்களின் உரை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகின்றன. வேலூர் மாவட்ட நிர்வாகமும் பொது நூலகத் துறையும் இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.
சிறுவாணி இலக்கியத் திருவிழா
கோயம்புத்தூரில் இரு நாள் நிகழ்வாக நடைபெற்றுவரும் சிறுவாணி இலக்கியத் திருவிழாவில் இன்று (26.02.23) எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், தேவிபாரதி, கால.சுப்பிரமணியன், கெளதம சித்தார்த்தன், எம்.கோபாலகிருஷ்ணன், பாதசாரி, இரா.முருகவேள், மகுடேசுவரன், சு.வேணுகோபால் உள்ளிட்ட பலர் பல்வேறு தலைப்புகளில் பேசவுள்ளனர். பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் இரண்டாம் நாள் நிகழ்வு மாலை 5 மணிக்கு நிறைவுபெறவுள்ளது.
வண்டல் சிறுகதைப் போட்டி
வண்டல் இலக்கிய அமைப்பு சிறுகதைப் போட்டிக்குக் கதைகளை வரவேற்கிறது. இதுவரை அச்சில் வராத கதைகளை மென் பிரதியாக அனுப்பிவைக்க வேண்டும். மேலதிகத் தொடர்புக்கு: vandalelakiyam@gmail.com
நெல்லை புத்தகத் திருவிழா
பிப்.24 தொடங்கிய பொருநை (நெல்லை) புத்தகத் திருவிழா மார்ச் 7 வரை நடைபெறவுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுப் பறவையான இருவாச்சி இந்த வருட புத்தகத் திருவிழாவின் சின்னமாக சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவை ஒட்டி இலக்கிய நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் நடைபெறவுள்ளன. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.