மேகாலயம், நாகாலாந்து தேர்தல்கள்: ஒரு பருந்துப் பார்வை

மேகாலயம், நாகாலாந்து தேர்தல்கள்: ஒரு பருந்துப் பார்வை
Updated on
2 min read

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், நாகாலாந்தில் பிப்ரவரி 27 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கிளர்ச்சி, அரசியல் குழப்பம் போன்ற முட்டுக்கட்டைகளையும் கடந்து வளர்ச்சி பெற வேண்டும் எனும் பொதுவான அம்சத்தைத் தாண்டி, பிரத்யேகமான பல பிரச்சினைகளையும் சவால்களையும் கொண்ட மாநிலங்கள் இவை.

மேகாலய நிலவரம்: 1972இல் அசாமிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக ஆன மேகாலயத்தில், அந்த ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சி மலையகத் தலைவர்கள் மாநாடு கட்சி (ஏபிஹெஎல்சி), மொத்தம் உள்ள 60 இடங்களில் 32 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை எனும் நிலையில், அதன் பின்னர் எந்தக் கட்சியும் அந்த இடத்துக்கு வரவே இல்லை. எனவே, குழப்பமான அரசியல் கூட்டணிகள் இம்மாநில வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருந்துவந்தன.

2018 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் அதிகபட்சமாக 21 இடங்களில் வென்றது. கோன்ராடு சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 20 இடங்களில் வென்றது. இரண்டு இடங்களில் மட்டுமே வென்றிருந்த பாஜக, என்பிபி உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தலுக்குப் பிறகான கூட்டணி அமைத்தது.

கோன்ராடு சங்மா முதல்வரானார். ஆனால், இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகக் களம் காண்கின்றன. மேகாலய மக்கள்தொகையில் 85.9% பழங்குடியினர். இவர்களில் பெரும்பான்மையினர் (74.59%) கிறிஸ்துவர்கள். பாஜக சார்பில் பெரும்பாலும் கிறிஸ்துவர்களே களமிறக்கப்படுகிறார்கள்.

சாலை வசதி, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்குப் பாஜக தலைமையிலான மத்திய அரசுதான் காரணம் என்றும், மத்திய அரசு வழங்கிய நிதியைக் கோன்ராடு அரசு முறையாகப் பயன்படுத்தாமல் ஊழல் செய்ததாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்.

இதன் காரணமாகவே, பாஜக வலிமையுடன் தனித்து ஆட்சியமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால், ஐந்து ஆண்டுகள் கூட்டணியில் அங்கம் வகித்துவிட்டு இப்போது ஏன் இந்த விமர்சனம் என்பது என்பிபி தரப்பின் வாதம்.

திரிபுராவைப் போலவே இங்கும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது, காங்கிரஸுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 60 இடங்களில் அக்கட்சி போட்டியிடுவது பாஜகவுக்கு மறைமுகமாகச் சாதகமாக அமையலாம் எனும் அச்சம் காங்கிரஸுக்கு இருக்கிறது. ஏற்கெனவே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் திரிணமூல் காங்கிரஸுக்குத் தாவிவிட்டனர்.

பிப்ரவரி 22 அன்று பிரச்சாரத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ஆளுங்கட்சியான என்பிபியைவிடவும் பாஜகவையும் திரிணமூல் காங்கிரஸையும்தான் அதிகம் விமர்சித்தார். இந்தப் பல்முனைப் போட்டி தங்களுக்கே சாதகமாக அமையும் என என்பிபி நம்புகிறது. தேர்தல் முடிவைப் பொறுத்து பாஜகவும் என்பிபியும் மீண்டும் கூட்டணி அமைக்கக்கூடும்!

நாகாலாந்தின் நிலை: அடிப்படை வசதிகளே இன்னும் முழுமை பெறாத நாகாலாந்தின் 60 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில், ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை. பாஜக அங்கம் வகிக்கும் ஆளும் கூட்டணி இந்த முறையும் தொடர்கிறது. தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்டிபிபி) 40 இடங்களிலும் பாஜக 20 இடங்களிலும் போட்டியிடுகின்றன. தற்போதைய முதல்வர் நெபியூ ரியோ முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்.

நீண்ட காலமாகத் தொடரும் ‘கிரேட்டர் நாகாலிம்’ தனி மாநிலக் கோரிக்கை இந்தத் தேர்தலிலும் எதிரொலிக்கிறது. மேற்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனக் கிழக்கு மாவட்ட மக்கள் குமுறுகிறார்கள்.

நாகாலாந்தின் பல பகுதிகளில் இப்போதும் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என அமித் ஷா உறுதியளித்திருக்கிறார். ஆளுங்கட்சியான என்டிபிபியும் இதைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், ஆளும் கூட்டணியில் பாஜக அங்கம் வகித்திருந்த நிலையிலும் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாதது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

2015 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கும், என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்புக்கும் இடையே நாகா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டாலும், அந்த முயற்சி இன்னமும் இறுதிவடிவம் பெறவில்லை. அந்த ஒப்பந்தம் கையெழுத்தானதையே தங்கள் சாதனையாகச் சொல்லிவருகிறது பாஜக. ஆனால், அமைதி ஒப்பந்தம் எனச் சொல்லிவிட்டுப் பின்னர் அதை வரைவு ஒப்பந்தம் என மாற்றியது ஏன் என்றும், இதுவரை ஏன் அமல்படுத்தப்படவில்லை என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.

மாநிலத்திலிருந்து இரண்டு பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தாலும், இதுவரை ஒரு பெண்கூட இம்மாநில சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டதில்லை. முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் பெண்கள் இருக்கக் கூடாது எனும் பொதுப்புத்திதான் இதற்குப் பின்ணியாகக் கருதப்படுகிறது. ஆக, நாகாலாந்தில் அரசியல் மாற்றத்துக்கு இணையாக சமூக மாற்றமும் தேவையாக இருக்கிறது!

- வெ.சந்திரேமாகன் | தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in