ஆசிரியர்களுக்கு இடையே ஏன் இந்தப் பாகுபாடு?

ஆசிரியர்களுக்கு இடையே ஏன் இந்தப் பாகுபாடு?
Updated on
2 min read

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தகுதியான ஆசிரியர்களைத் தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால், அத்துடன் தனது பணியை அந்த வாரியம் முடித்துக்கொள்கிறது. ஆதிதிராவிடர் - பழங்குடி நலத் துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, மாநகராட்சிப் பள்ளிகள், வனப் பள்ளிகள் எனப் பிற துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளுக்கான பணி ஆணையை அந்தந்தத் துறைகள் வாயிலாகவே ஆசிரியர்கள் பெறுகிறார்கள்.

ஒரே தேர்வு வாரியத்தால், ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்படும் ஆசிரியர்கள், பல்வேறு துறைகளுக்கு எந்த அடிப்படையில் பிரித்து அனுப்பப்படுகிறார்கள் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

அது மட்டுமல்ல, அந்தத் துறைகளில் பணிபுரிந்து வருபவர்கள் பிற துறைகளுக்கு மாறுதல் பெறுவது சாத்தியமில்லாதது. இறுதிவரை அதே பள்ளிகளில் பணிபுரிய வேண்டும் அல்லது அதே துறை சார்ந்த பள்ளிகள் உள்ள பிற பகுதிகளுக்குச் சென்று பணிபுரிய வேண்டும் எனும் நிலையே நீடிக்கிறது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் அமைந்துள்ள கள்ளர் சீரமைப்புப் பள்ளியில் ஒருவர் பணியேற்றால், தமது பணிக்காலம் முழுக்க அதே பள்ளியில் மட்டுமே பணிபுரிய முடியும்.

ஆதிதிராவிட நலத் துறையில் உள்ள பள்ளியில் பணிபுரிபவர்கள் அதே பள்ளியில் அல்லது தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மட்டுமே பணிபுரிய முடியும். இவர்கள் கள்ளர் சீரமைப்புப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, பள்ளிக் கல்வித் துறைப் பள்ளி என வேறு எங்கும் பணிபுரிய முடியாது.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கிவரும் பிற பள்ளிகளுக்கு இவர்கள் யாரும் இடமாறுதல் கேட்க முடியாது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கிவரும் ஆசிரியர்களும் ஆதிதிராவிட நலப் பள்ளிகளுக்கோ, பழங்குடியினப் பள்ளிகளுக்கோ மாறுதல் பெற முடியாது. இதனால், ஒரே தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஆசிரியர்கள் தனித்தனித் தீவுகளாக இயங்கிவருகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இவர்களுக்கிடையே இடமாறுதல் எளிதாகச் சாத்தியப்படுகிறது. பிற துறை சார்ந்த பள்ளிகளில் பதவி உயர்வு என்பது, அத்துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு இடையே உள்ள பணி நிலையைப் பொறுத்து அமையக்கூடும்.

இதனால், ஆசிரியர் ஒருவர் அடைய வேண்டிய பணி உயர்வு என்பது நீண்ட காலப் போராட்டமாக மாறிவிடுகிறது. தேர்வுக்கு முன்பாகத் தேர்வாளர்களுக்கு இது குறித்த தெளிவான வரையறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிப்பதும் இல்லை.

தற்போது உள்ள சூழ்நிலையில், தமிழ்நாடு முழுக்க இயங்கிவரும் அனைத்துத் துறைகளும் பள்ளி ஆசிரியர்களைப் பிற துறைகளுக்கு இடமாறுதல் செய்வதற்கும், அனைவருக்கும் பொதுவான பதவி உயர்வு அளிப்பதற்கும் மாநில அளவில் ஒரே முறையைப் பின்பற்ற வழிவகை செய்யப்பட வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் விஷயத்தில் பாகுபாடு அற்ற அணுகுமுறையைப் பின்பற்றுவது காலத்தின் தேவை.

- க.திருப்பதி | மாநிலப் பொதுச் செயலாளர், ஒருங்கிணைந்த பள்ளி ஆசிரியர் சங்கம் தொடர்புக்கு: sri9884998589@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in