மனநலப் பிரச்சினைகள்: அலட்சியத்தால் அதிகரிக்கும் அழுத்தம்
சமீப காலத்தில் சட்டம், சமூகநலன் சார்ந்த விஷயங்களில் மனநல மருத்துவத்தின் பங்கு அதிகரித்துவருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் முதல் தனிநபர்கள்வரை தங்களது கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக மனநல மருத்துவத் துறையை நாடுவது வாடிக்கையாகிவருகிறது; இது வரவேற்கத்தக்கது. எனினும், பெரும்பாலானோருக்கு மனநலப் பிரச்சினைகளைப் பற்றிப் போதிய புரிதல் இல்லை என்பதால், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
நியாயமற்ற அழுத்தம்: மனவளர்ச்சிக் குறைபாடு, மனச்சிதைவு நோய், இருதுருவ மனநோய் போன்ற தீவிர மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான சான்று வழங்குவது முதல், அரசு வேலைகளில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்குவதுவரை மனநல மருத்துவர்களின் பங்கு முக்கியமானது. ஆனால், மனநல மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தெந்த வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிற பட்டியல் மக்களுக்குத் தெரிவிக்கப்படாததால் மனநல மருத்துவர்கள் நியாயமற்ற அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
கூடவே, தகுதிச்சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல்களும் ஏற்படுகின்றன. 10, +2 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுச் சலுகையைப் பெறுவது நடைமுறையில் உள்ளது. உண்மையில், அரையாண்டுப் பொதுத்தேர்வுக்கு முன் இதற்காக விண்ணப்பிக்கும் பணிகளைத் தொடங்கினால்தான் இதை முழுமையாக முடிக்க முடியும். குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் செலவிட்டால்தான், ஒரு மாணவருக்கான மாற்றுத்திறனின் அளவை முடிவுசெய்து பிழைகளின்றி சான்று வழங்க முடியும்.
கரோனா காலத்தில் பல சமூகக் காரணங்களாலும், கைபேசி அடிமைத்தனத்தாலும் படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, கற்றல்திறன் குறைபாட்டுக்கான சான்றிதழ்களைப் பெற்றுவருமாறு பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. இவ்விஷயத்தில், உரிய கால அவகாசம் இல்லாமல் பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் மனநல மருத்துவர்களிடம் மாணவர்கள் அனுப்பப்படுவதால், பரிசோதிப்பதில் பணிச்சுமை ஏற்பட்டு, தகுதியான மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதமாகின்றன.
ஒழுக்கக்கேடுகள், போதைப் பழக்கங்களில் ஈடுபடும் மாணவர்களையும், தற்கொலை முயற்சி அல்லது மிரட்டலில் ஈடுபடும் மாணவர்களையும் மனநல மருத்துவரிடம் சென்று தகுதிச் சான்றிதழ் வாங்கி வரும்படி சில பள்ளிகள் நிர்பந்திக்கின்றன. அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்தான்; ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கான சமூகக் காரணிகளின் பின்னணியில், மனநல ஆலோசனை மட்டும் தீர்வாகாது.
அரசுத் துறைகளின் அலட்சியம்: சமூகநலத் துறை, காவல் துறை, நீதித் துறைகளில் மனநோய்களைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. இதனால், குடும்பநலப் பிரச்சினைகளுக்காக இத்துறைகளை அணுகுபவர்கள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, எளிதில் கண்டறிய முடியாத மனச்சிதைவு நோயால் (Paranoid Schizophrenia) பாதிக்கப்பட்ட மனைவியிடமிருந்து குழந்தையை மீட்டெடுக்க முயலும் கணவர், காவல் நிலையங்களில் மீண்டும் குற்றவாளியாக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
இதிலிருக்கும் நுட்பமான சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், ‘அவர் தன் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காழ்ப்புணர்ச்சியுடன் முத்திரை குத்துகிறார்’ என்று சமூகநலத் துறையின் ஆலோசகர்கள் புண்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு அந்தப் பெண் சரியாகப் பதிலளிப்பதைப் பார்த்து, ‘இந்தப் பெண் நன்றாகத்தானே பேசுகிறார், இவரைப் போய் மனநோயாளி என்கிறீர்களே?!’ என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இதனால், சட்டப் போராட்டத்தில் கணவர் தனது கடைசி வாய்ப்பையும் இழக்க நேரிடுகிறது. ‘மனநல மருத்துவரிடம் காண்பித்த சீட்டு இருந்தாலே போதும், விவாகரத்து வாங்கிவிடலாம்’ எனச் சில வழக்கறிஞர்கள் வழங்கும் ஆலோசனையால் பலர் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
மேம்போக்கான பார்வை: மனநோய் இருக்கிறதா, இல்லையா என்று தீர்மானிக்கும் வாய்ப்பை அந்தந்தத் துறைகளின் அதிகாரிகளே எடுத்துக்கொள்வது முக்கியமான பிரச்சினை. சம்பந்தப்பட்ட நோயைக் கண்டறிவதற்கான மனநல நிபுணர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் பலரிடம் இல்லை. ஒருவருக்கு மனநோய் இல்லை என்று மேம்போக்கான பார்வையில் பலர் சுயமாக முடிவெடுத்துவிடுகிறார்கள். மனநலத் துறையின் முன்னேற்றத்துக்கு இப்படியான போக்குகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
பாதிப்புக்குள்ளான நபர்களின் உரிமையும் மறுக்கப்படுகிறது. ஆடையைக் கிழித்துக்கொண்டு தெருவில் திரியும் நபர்கள்தான் தீவிர மனநோய்க்கு ஆளானவர்கள் என்ற பொத்தாம்பொதுவான எண்ணம் இருப்பதே இதற்குக் காரணம். தொற்றுநோய், தொற்றாநோய்கள் தொடர்பாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஏராளமாக வெளியிடப்படுகின்றன. அவற்றில் ஒரு சதவீதம்கூட மனநோய்கள் குறித்த புரிதலுக்காக ஒதுக்கப்படுவதில்லை.
இதனால், மனநோய்கள் குறித்து ஆரோக்கியமான புரிதலை ஏற்படுத்தும் நோக்கம் நிறைவேறாமல் தடைபடுகிறது. மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துவருவதை உண்மைதான். ஆனால், இது தொடர்பான புரிதல் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது!
- ஆ.காட்சன் | மனநல மருத்துவர்; தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
